

எல்லோருடைய வாழ்க்கையிலும் முடிவு எடுக்க வேண்டிய தருணம் வரலாம். பெற்றோர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கலாம். மேலதிகாரி சின்ன சின்ன விஷயத்துக்கு கூட திட்டலாம். சகஊழியர்கள் இணக்கமாக இல்லாமல் போகலாம். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகலாம்.
இப்படிப்பட்ட தருணத்திலும் மன உறுதியுடன் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
அதற்கு உதாரணம்:
1) மாவீரன் நெப்போலியன் ஒருமுறை தன் படைகளுடன் போருக்கு புறப்பட்டான். ஒரு தீவில் உள்ளநாட்டின் மீது படையெடுத்து சென்றதால் அவர்கள் கப்பல்களில் சென்றார்கள்.
அந்த தீவின் கரையை அடைந்ததும், எல்லாப் படைகளையும் கப்பல்களிருந்து இறங்கச் சொன்னான் நெப்போலியன். பின் தாங்கள் வந்த கப்பல்களை தீயிட்டுக் கொளுத்துமாறு படைத்தளபதிகளுக்கு உத்தரவிட்டான்.
ராணுவத்தில் உத்தரவிட்டால் எதிர் கேள்விகளுக்கு பேச இடமில்லை. உயர் அதிகாரி உத்தரவிட்டால் உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது விதி. அதன்படி கப்பல்களை கொளுத்தினாலும் ஒரு தளபதி துணிச்சலாக நெப்போலியனை நெருங்கி, சந்தேகமாக கேட்டார்.
"நீங்கள் சொல்வது போல எல்லா கப்பல்களையும் கொளுத்தி விட்டோம். இனி நாம் எப்படி திரும்பி போவது?" என்று கேட்டார்.
நெப்போலியன் சிரித்தபடி, "அதனால் தான் கொளுத்தினேன். இப்போது நமக்கு திரும்பி போகும் வாய்ப்பு இல்லை. ஒன்று இந்த போரில் வென்று, இவர்களின் கப்பல்களை கைப்பற்றி ஊர் திரும்ப வேண்டும் அல்லது தோற்றால் இங்கேயே சாக வேண்டும். நாம் முதல் வாய்ப்பை தேர்ந்தெடுப்போம்" என்று சொன்னார் நெப்போலியன்.
மன உறுதியுடன் அந்த படை போரில் வென்றது. அவர்களின் கப்பல்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடினார்கள். இதுவே நெப்போலியனின் மன உறுதிக்கான அடையாளம்.
2) இந்திய கிரிக்கெட் அணி கண்டிருந்த மதத்தான தலைவன் மகேந்திர சிங் தோனி. ஆனால், ஆரம்ப கட்டத்தில் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதனால், நிராகரிப்பு நடந்த தினத்தில் தோனியின் நண்பர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தனர். ஆனால், தோனி உற்சாகமாக அவர்களுக்கு இனிப்பும், காரமும் வாங்கி கொடுத்து கொண்டாடினார்.
"ஏன் இப்படி செய்கிறாய்? உனக்கு என்ன மனநிலை பாதித்து விட்டதா?" என நண்பர்கள் கேட்ட போது, தோனி சிரித்தபடி சொன்னார், "இல்லை இந்திய அணியில் நுழைவதற்கு எப்படிப்பட்ட தகுதி வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அதனால், உற்சாகமாக இருக்கிறேன். அதை வளர்த்துக் கொண்டு சீக்கிரமே அணியில் நுழைவேன்" என்றார்.
தன் சொந்த ஊரில் பாதுகாப்பாக இருப்பதா அல்லது தனக்கு அறிமுகமே இல்லாத புதிய ஊருக்கு சென்று வாய்ப்புகளை தேடுவதா? என்று கேள்வி எழுந்த போது தோனி அதிகம் யோசிக்கவில்லை. தான் செல்ல வேண்டிய ரயிலை பிடித்து ஏறினார். அந்தப் பயணம் அவரை உலகின் எல்லா மூலைகளுக்கும் அழைத்துச் சென்று புகழின் சிகரத்தில் ஏற்றி வைத்தது.
மகாத்மா காந்தி, அப்துல் கலாம் போன்ற சாதனையாளர்கள்தான் மன உறுதி மிக்கவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவர்களின் அசாத்தியமான மன உறுதி ஒரு சாதனையாளராக உருவாகியது. மகத்தான செயல்களை சாதிப்பதற்கு மட்டுமின்றி அன்றாட வாழ்வில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும், மன உறுதி அவசியம். இது ஒருவருக்கு பிறவியிலேயே கிடைத்து விடுவதில்லை என்கிறது அறிவியல்.
திரும்பி வருவதற்கான கப்பல் இருப்பது நம்பிக்கை அளிக்கலாம்; சொந்த ஊரில் வாழ்வது பாதுகாப்பான உணர்வை தரலாம். ஆனால், வாழ்க்கை அப்படியே போய் விடக்கூடாது சில கப்பல்கள கொளுத்தினால் தான் நாம் முன்னேற முடியும். சில ரயில்களை பிடித்தால்தான் புது வாய்ப்புகளை அடைய முடியும். சில தடங்கல்களை தவிர்த்தால் தான் நாம் உறுதியுடன் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம்.