

மனித மனம் ஒரு தோட்டம் போன்றது. தோட்டம் போல் கருதி அதை பண்படுத்தி பயிரிடலாம். அல்லது கண்டது விளையட்டும் என்றெண்ணி அதன் போக்கில் விட்டுவிடலாம். என்ன விதை அங்கே விதைத்தோமோ அதற்கேற்ப அது பயிர்களை உண்டு பண்ணுகிறது. பயனற்ற விதைகளை விதைக்கும்போது புல்லும் புதரும்தான் முளைக்கும்.
ஒரு தோட்டக்காரன் எப்படி காய், கனிகள், பூக்கள் பயிரிட்டு பயன்பெறுகிறானோ அதேபோல் மனிதன் தன்மனம் எனும் தோட்டத்தில் காளான் வளராமல் கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும்.
நியாயமில்லாத சிந்தனைகளை அகற்ற வேண்டும். பயனற்ற எண்ணங்களைக் களை எடுக்க வேண்டும். மனதில் நல்லெண்ணம் என்ற பூஞ்செடிகளைப் பயிரிட வேண்டும். தூய்மையான சிந்தனை என்ற கனி தரும் மரங்களையே நடவேண்டும். தோட்டத்தில் பயிரிட்டு வளர்ப்பது போன்று மனத்தில் சரியான எண்ணங்களைப் பயிரிட்டு வளர்க்கவேண்டும்.
அப்படிப்பட்ட மனிதன் ஆத்மாவின் தலைவனாக தன்னை உணர்கிறான். தன்வாழ்வுக் தோட்டத்தின் நிர்வாகி என்பதை உணர்கிறான். எந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எண்ணங்கள் இயங்குகின்றன என்ற தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது.
எண்ணங்களின் சக்தியும், மன இயல்புகளும் எப்படி அவனது குணங்களை உருவாக்குகிறது, அவனது சூழ்நிலையை நிர்ணயிக்கிறது. அவனது விதிமுறையைத் தீர்மானிக்கிறது என்கிற வரை முறைகளையும் நுட்பங்களையும் புரிந்துகொள்கிறான். எண்ணங்களும் குணங்களும் ஒன்றுதான் ஒன்றிலிருந்துதான் மற்றது வருகிறது. எண்ணங்கள்தான் நாளடைவில் குணங்களாக மாற்றங்கள் பெறுகின்றன. ஒரு மனிதனது குணங்கள் அவனது சூழ்நிலை மூலமும், அவனுக்கேற்படும் வாய்ப்புகள் மூலமும் தங்களைக் காட்டிக்கொள்கின்றன.
அதேபோல் அவனுக்கு வெளியுலகில் நேரும் வாழ்க்கைச் சம்பவங்களும், அவனது உள் மனநிலையும் ஒரு நேரடித் தொடர்பில் ஒரு லயம் நிறைந்த உறவில் இயங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் சம்பவங்களை வைத்து அவனது கஷ்டங்களைக் கண்டு, அது அவனது மொத்தகுணங்களின் விளைவாக ஏற்பட்டது என்று நாம் கூற முடியாது. இருந்தாலும் அவனது எண்ணங்களுக்கும் சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் அவனது தற்காலிக வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. இதுதான் அதன் அர்த்தம்.
வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்போது தன்னை மீறிய சக்தியின் கைதி என்று மனிதன் தன்னை நினைக்கிறான். அப்படி எண்ணும்போது சூழ்நிலைகளே அவனை நாலாபுறமும் நெருங்குகின்றன.
தன் எண்ண விதைகளைக் கொண்டு தன் சூழ்நிலையைப் கட்டுப்படுத்தலாம் என்பதை உணரும்போது மனிதன் தன்னையே உருவாக்கிக் கொள்கிறான். ஒரு உயர் தலைவனாக மலர்கிறான்.
தானிருக்கும் சூழ்நிலையை கண்டு வருந்தி புலம்பிக் போராடுபவர்களை நாம் அதிகம் சந்திக்கிறோம். அத்தகைய மனிதன் தன் வாழ்வில் ஏற்பட்ட விளைவை எதிர்த்துப் போராடுகிறான். தங்களது சூழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால் தங்கள் எண்ணங்களை மேம்படுத்திக்கொள்ள அவர்கள் முனையவில்லை. அதனால் சூழ்நிலை கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்.
தான் செய்யும் காரியங்கள்தான் தனது சூழ்நிலையைப் பாதிகாக்கின்றன என்ற நினைவே இல்லாமல் மனிதன் செயல்படுகிறான். ஒவ்வொரு மனிதனும் நல்ல விளைவை நோக்கித்தான் பாடுபடுகிறான். ஆனால் அந்த விளைவுஙளை சின்னாபின்னமாக்கும் சிந்தனை களையும் செயல்களையும் அவனே ஊக்குவிக்குகிறான்.
எப்போது நொந்து கொள்வதை தவிர்த்து மறைந்து கிடக்கும் நியாயங்களை புரிந்துகொள்ளத் துவங்குகிறானோ அன்று அவன் உண்மையான மனிதன் ஆகிறான். சூழ்நிலையக்குற்றம் காட்டுவதை நிறுத்துகிறான். மாறாக அவற்றையெல்லாம் தன் முன்னேற்றத்தின் சாதனங்களாகப் பயன்படுத்துகிறான்.
சாதனைகள் நிகழ்த்தும் திறமைகள் தன்னுள் ஒடுங்கிக் கிடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறாரன். ஒருமனிதன் உயர் நெறிகளுடன் மகிழ்வுடன் வாழ்வதற்கு அவன் தன் மனதில் பயிரிட்டு வளர்ந்துவரும் உயர் எண்ணங்களும், லட்சியங்களும்தான் காரணம்.
மனதை தோட்டம் போலப் பராமரித்து, தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களைக் களைந்து, மன அமைதி நற்சிந்தனைகள் மூலம் வாழ்க்கையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வழிமுறையை உணர முடியும்.