

ரோஸ் மில்லிகன் எழுதிய ‘டஸ்ட் இப் யூ மஸ்ட்’ கவிதையை மையமாகக் கொண்டு, முதுமை, மரணம், காலத்தின் ஓட்டம் ஆகியவற்றை சிந்திக்கும் இந்த கட்டுரை, வீடு சுத்தம் செய்வதற்குப் பதிலாக இயற்கையை ரசிப்பது, நண்பர்களை போற்றுவது, படிப்பது, இசை கேட்பது போன்ற அனுபவங்களே வாழ்க்கையின் உண்மையான செல்வம் என வலியுறுத்துகிறது; எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம் என நினைவூட்டுகிறது.
உ
வயது ஆகிறது; பணியில் இருந்து ஓய்வும் பெற்று ஆகிவிட்டது. 'புலனம்' -மூலம் பல குழுக்களின் சேர்ந்து தினமும் வரும் செய்தியை படிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய நிறுவனத்தில் வேலை செய்துவந்த பலர் இன்று நம்முடன் இல்லை. மாதம்தோறும் ஒருவர் அல்லது இருவர் என்று இந்த உலகத்தின் பயணத்தை முடித்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். என்னவென்று சொல்ல முடியும்; ஆறுதலைத் தவிர; மாலை அணிவிப்பதும்; துக்கம் அனுசரிப்பதும் சகஜமாக ஆகிவிட்டது. இரக்கம், அன்பு என்று இருந்தாலும் கவலையை என்கிற ஒன்று வந்து கொண்டுதான் இருக்கிறது.
நமக்கு பாடம் கற்பித்த பல ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இப்போது நம்மிடம் இல்லை; ஏன், வருடம்தோறும் பழைய மாணவர்கள் ஒன்று கூடி சங்கமிக்கும் இடங்களில் நம்முடைய நண்பர்கள், தோழர்கள் குறைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
எது எப்படியோ? அது அப்படித்தான் இருக்கும்!! என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு போக மனம் ஒப்பதில்லை. முடிந்தவரை போராடுகிறோம். வாழ்க்கைகூட தூசி தட்டுவது போன்று இமைப்பொழுதில் எல்லாம் நடந்து முடிந்துவிடுகிறது.
'எவ்வளவு நாட்கள் வாழ்ந்தோம் என்பதைவிட; எப்படி வாழ்ந்தோம்' என்று சிந்திக்க நான் இன்று படித்த ஒரு கவிதை. ரோஸ் மல்லிகன் எழுதிய 'டஸ்ட் இப் யூ மஸ்ட்' (Dust If You Must) என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. உள் அர்த்தம்:- வீடு கூட்டுவதையும், சுத்தம் செய்வதையும்விட இயற்கையை ரசிப்பதும், வாழ்க்கையை வாழ்வதும், எவ்வளவு முக்கியம் என்பதை இது விளக்குகிறது.
இதோ என்னை புரட்டிப் போட்ட கவிதை... தூசியைத் துடைக்க வேண்டுமெனில் துடைப்போம், ஆனால் அதற்குப் பதிலாக ஒரு சித்திரம் வரைவது, அல்லது ஒரு கடிதம் எழுதுவது, கேக் சுடுவது, அல்லது ஒரு விதை நடுவது; தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தைச் சிந்திப்பது—சிறந்ததல்லவா? தூசியைத் துடைக்க வேண்டுமெனில் துடைப்போம்,
ஆனால் அங்கே அதிக நேரம் இல்லை, நீந்த நதிகளும், ஏற மலைகளும் இருக்கின்றன; கேட்க இசையும், படிக்க புத்தகங்களும் இருக்கின்றன; போற்ற நண்பர்களும், வாழ வாழ்க்கையும் இருக்கின்றன. தூசியைத் துடைக்க வேண்டுமெனில் துடைப்போம், ஆனால் வெளியே உலகம் இருக்கிறது கண்களில் சூரிய ஒளியோடும், தலைமுடியில் காத்தோடும்; பனிச் சிதறலோடு, மழைத் தூறலோடு, இந்த நாள் மீண்டும் ஒருமுறை வராது.
தூசியைத் துடைக்க வேண்டுமெனில் துடைப்போம், ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், முதுமை வரும், அது இரக்கமற்றது. மற்றும் நீங்கள் செல்லும்போது (செல்லத்தான் வேண்டும்) நீங்களே கூட, இன்னும் கொஞ்சம் தூசியை உருவாக்குவீர்கள்.
இந்த பதிவு உங்கள் அன்றாட பரபரப்பான பணிகளுக்கு நடுவே வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தையும், ஒவ்வொரு நொடியையும் எவ்வாறு மகிழ்வோடு வாழ்வது என்பதையும் உணர்த்தி மன அமைதியைத் தரும்.