மிஸோகி (MISOGI) என்ற ஜப்பானிய வார்த்தைக்கு நீராடிச் சுத்தமாதல் என்று அர்த்தம். அதாவது நீர்வீழ்ச்சியில் நீராடுவதோ அல்லது நதிகளில் குளிப்பதோ மிஸோகி எனப்படும். இது உடலையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் சுத்தமாக்கும் ஒரு புனிதச் சடங்காகும்.
சாமுராய் சம்பிரதாயத்தில் தனக்குத் தானே ஒரு இலக்கை நிரணயித்துக் கொண்டு தங்களைத் தெளிவான மனதுடன் சவால்களை எதிர் கொண்டு இலக்கை அடைவது மிஸோகி ஆகும்.
மிஸோகிக்கு உதாரணமாக ஜெஸ்ஸி இட்ஸ்லரை (JESSE ITZLER) கூறலாம். அமெரிக்கரான இவர் தனக்குத் தானே ஒரு இலக்கை நிர்ணையித்துக் கொண்டு அதை அடைபவர். 100 மைல் க்ரூப் என்ற ஒரு குழுவை நிறுவி சாதனையாளர்களைப் பயிற்றுவிக்கிறார் இவர்.
1968ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி பிறந்த இவர், பல சாதனைகளைத் தனது 57 வயதுக்குள் செய்து காட்டி இருக்கிறார்.
2006ம் ஆண்டு டெக்ஸாஸில் அல்ட்ரா மாரதான் ஓட்டத்தில் கலந்து கொண்டு 100 மைல்களை 24 மணி நேரத்திற்குள் கடந்து சாதனையை நிகழ்த்தியவர் இவர்.
தனது சாதனைகளை இவர் மிஸோகி சவால் (MISOGI CHALLENGE) என்று குறிப்பிடுவதோடு வருடத்திற்கு ஒரு புது சவாலை எதிர்கொண்டு தனது எல்லையைத் தானே மீறி சாதனை படைக்கிறார். கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது ஏறுவேன் என்பது ஒருவரின் மிஸோகி சவால். 2025இல் இத்தனை மைல்களை நடந்து கடப்பேன் என்பது இன்னொருவரின் மிஸோகி சவால்!
நவீன காலத்தில் இப்படி மிஸோகி சவால் பரந்து பட்டு விரிவாகி உலகில் உள்ள அனைவரையும் ஊக்குவித்து சாதனை படைக்க வைக்கிறது.
மிஸோகி சவால்களில் சில:
எவரெஸ்ட் மலை மீது ஏறுவேன்.
கடலில் படகு விடுவேன்.
ஒரு வாரம் நடுக்காட்டில் எனது குழுவினருடன் இருப்பேன்.
90 நாட்களில் ஒரு புதிய மொழியைப் படிப்பேன்.
50 புத்தகங்களை இருநூறு நாட்களில் படிப்பேன்.
இப்படி தனக்குத் தானே ஒரு சவாலான விஷயத்தை எடுத்துக் கொண்டு அதைச் செய்து காட்டுவது தான் நவீன மிஸோகி ஸ்டைல்.
உள்ளத்தைச் சுத்தமாக்கும் பயிற்சியையும் ஜப்பானில் மிஸோகி குறிக்கிறது. இதைப் பற்றிய பழமையான புராணக் கதைகளும் ஜப்பானில் உண்டு.
நதிகளில் குளித்து புனிதமடைவதையும் புனித தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்வதையும் மிஸோகி வலியுறுத்துகிறது. ஹிந்துக்கள் மேற்கொள்ளும் தீர்த்த யாத்திரையை இத்துடன் ஒப்பிடலாம். இத்துடன் உபவாசங்களையும் ஜப்பானியர் மேற்கொள்வது வழக்கம். மௌன விரதமும் இதற்குள் அடங்கும். மனத் தெளிவையும் மன சாந்தியையும் பெறுவதற்காகவும் மிஸோகி அனுஷ்டிக்கப்படுகிறது.
யாரும் வற்புறுத்தாமல் தனக்குத் தானே குறிக்கோளை அமைத்துக் கொள்வதால், இதில் வற்புறுத்தல் என்பதோ ‘இதைத் தான் நீ செய்ய வேண்டும்’ என்ற கட்டாயமோ இல்லை.
'கடவுளரின் வழி' என்ற அர்த்தத்தைக் கொண்ட ஜப்பானின் ஷிண்டோ பிரிவு மிஸோகி வழியைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்துகிறது. உலகில் இன்று மிக முக்கியமாக தேவைப்படுவது, பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வெற்றி காண்பது தான்.
மிஸோகி அதற்கான ஒரு ஜப்பானிய வழிமுறை!
என்ன, ஒரு மிஸோகியை நீங்கள் நிர்ணையித்துக் கொண்டு விட்டீர்களா?
வாழ்த்துக்கள்!