

பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்
ஆரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்!
கை நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய இருள் இருக்கும் என்பதற்கு இணங்க, பணத்தை சேமித்து வைத்து அதை அப்படியே பார்த்து பார்த்து ரசிப்பதில் எந்த சந்தோஷமும் இல்லை. பணம் சேர்ந்தால் அதை நான்கு பேருக்கு உதவி செய்யும் மனதோடு வாழ வேண்டும் அல்லது தனக்கான செலவுகளையாவது கருமித்தனம் பார்க்காமல் பயன்படுத்த வேண்டும்.
ஒரு ஊரில் ராஜாராம் என்ற ஒரு பெருத்த பணக்காரன் இருந்தான். அவனுக்கு நிறைய பணம் இருந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து பெரிய தங்கக் கட்டியாக வாங்கி பூமியில் புதைத்து வைத்து அதை தினசரி பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தான். அதைக் கவனித்த ஒரு வேலைக்காரன், "அவனுக்குத் தான் அந்தப் பணம் தேவைப்படுவதில்லையே பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தால் என்ன பயன்? யாருக்கும் செலவழிப்பதும் இல்லை. தானும் நன்றாக உண்பதோ உடுப்பதோ இல்லாமல், பூமியில் கிடப்பதை நாம் எடுத்துக்கொண்டு ஓடினால் என்ன?" என்று எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.
புதைத்து வைத்ததை எப்பொழுதும் போல் பார்ப்பதற்காகச் சென்ற கருமிக்கு அந்த இடம் வித்தியாசமாக இருப்பதைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது. தேடி வைத்த தங்கத்தை காணாமல் தவித்துப் போனான்.
தான் பெரும் பணத்தை கொடுத்து வாங்கிய தங்கக் கட்டியை காணாமல் பெருந்துன்பம் அடைந்தான். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஊரைக் கூட்டிய வண்ணம் அவன் அழுததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் என்ன காரணம் என்று அறிந்தும், அவர்கள் யாரும் கவலைப்படவில்லை.
அவர்களில் ஒருவன், 'நண்பனே! உனக்கு எல்லாம் ஒன்றுதானே. தங்கமும் ஒன்றுதான். தகரமும் ஒன்றுதான். நீதான் அதை அனுபவிக்க பிறக்கவில்லையே. பார்த்துப் பார்த்து தானே மகிழ்ச்சி அடைகிறாய். என்னதான் பணம் கொட்டிக் கிடந்தாலும் நீ அதை அனுபவிக்காமல் இருப்பதால் அது உனக்கு தேவை இல்லை தானே?" என்று கூறினான்.
"ஒரு நாள் கிழமையிலாவது அதை நீ செலவு செய்து கொண்டாயா? அல்லது மற்றவர்களுக்காகவாவது உதவி உணர்ந்திருக்கிறாயா?" என்று கேட்டார்கள். கருமியால் எதையுமே பதிலாகக் கூற முடியவில்லை. வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கக் கூட இல்லையே என்பதுதான் அவனுக்கு அப்போது கவலையாக இருந்தது. நன்றாக சேர்த்து வைத்த திரவியத்தை தீயவர்கள் கொண்டு சென்று விட்டார்களே என்பதை நினைத்து நினைத்து பெரும் கவலை அடைந்தான். இனிமேல் என்ன செய்ய முடியும்.
தினமும் அழுது புலம்ப வேண்டியதுதான் என்று புலம்பியவன், அதன் பிறகு 'செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்' என்பதை உணர்ந்து சேர்ந்த செல்வத்தை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்துதவி புண்ணியம் கட்டிக் கொண்டான். அதன் பிறகு அவனுக்கு தயாள குணமும், கருணை உள்ளமும் மேலோங்க ஆரம்பித்தது .ஒரு மனிதனிடம் எது நிறைந்திருக்க வேண்டுமோ அது நிறைந்ததாக அக்கம் பக்கத்தில் அவனைக் கொண்டாடினார்கள். அவனும் நல்லவிதமாக மனிதர்கள் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்தான்.
பெரும் பணத்துக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் போதுமான அளவாவது செலவு செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரே அடியாக கருமித்தனம் செய்தால் 'ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்' என்பதற்கு இணங்க ஆகிவிடும். இதை மனதில் ஏற்றி தேடிய பணத்தை தேவையானவற்றுக்கு செலவு செய்து மற்றவர்களுக்கும் அதில் ஒரு பங்கு உதவி வாழ்வோமாக!