
வாழ்க்கையை நேருக்கு நேர் சந்திக்க பயப்படுகிறீர்களா? நமது வாழ்க்கை அமையும் விதத்திற்கு நாம் தன் முழுப்பொறுப்பு. இதை முதலில் உணர்ந்தே ஆகவேண்டும். நூற்றுக்கு 80 சதவீதம் பேர் சவால்களை எதிர்கொள்ளும் துணிவின்றி பயம் காரணமாக தயங்கி, இருப்பது போதும் எனும் மனப்பான்மையிவேயே வாழ்ந்து வருகின்றனர். மீதமுள்ள 20 சதவீதம் பேர் துணிவுடன் சவால்களை உடைத்து முன்னேறி வெற்றியாளர்களாக ஆகின்றனர்.
நாமும் அந்த 20 சதவீதத்தில் ஒருவராக வேண்டும் எனில் முதலில் பயத்தை நீக்கவேண்டும். எப்படி நம் மனபயத்தை நீக்குவது? இதற்கான பல வழிகளை மனவியல் உளவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் அதில் ஒன்றுதான் இது.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறு சவாலை மேற்கொள்ள வேண்டும். அந்த சவாலை முடியும் அளவுக்கு பெருக்கிக்கொண்டே போகவேண்டும். அதன் வீரியம் பெருகிக்கொண்டே போகும்போது நமது செயல்பாடுகளை வளர்த்துக்கொண்டு சென்றால் வெற்றி கிடைக்கும். காரணம் ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகு அடுத்த முயற்சிக்கு உங்கள் நம்பிக்கையின் அளவு சற்று அதிகமாக காணப்படும்.
உதாரணமாக உடற்பயிற்சி செய்யுமுன் வார்ம்அப் எனும் ஆயத்த பயிற்சிகள் கற்றுத்தரப்படும். வார்ம்அப் செய்யும்போதே நமது மனமும் உடலும் உடற்பயிற்சிகளை எதிர்கொள்ள தயாராகிவிடும். அதற்கான வலிமை வந்துவிடும். ஒவ்வொரு முறை வார்ம்அப் செய்யும்போதும் உடற்பயிற்சிகளின் அளவு கூடிக்கொண்டே போவதை உணரலாம். உடற்பயிற்சிகள் சரியான அளவில் இருக்கும் போது நமது உடல் நலம் மனநலம் உடல்வலுடன் எதையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும்.
பல பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் பள்ளியை பார்வையிட்டு விளையாடும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள், பள்ளியில் உள்ள அழகான சாராம்சங்களை காட்டுவார்கள். இவையெல்லாம் அந்த குழந்தைக்கு முதல் நாள் பயத்தை போக்கும் வார்ம்அப் எனலாம். ராணுவப் பயிற்சி பார்த்திருப்பீர்கள். போர்க்களம் என்றால் என்னவென்று தெரியாமல் செல்லும் வீரர்களை புது அனுபவத்துக்கு தயார்படுத்த பல கடுமையான பயிற்சிகள் தந்து ஆயத்தப்படுத்துவார்கள்.
இதே போல்தான் நம் வாழ்வில் மற்ற செயல்களும். புதியதாக ஒரு செயலைத் துவங்கும் அதற்கான முன்னேற்பாடுகளாக சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அந்த சிறு சிறு விஷயங்கள் அந்த செயலின் வெற்றிக்கு உதவி இதை நம்மால் செய்ய முடியுமா? எனும் நம் மனதில் இருக்கும் பயத்தை தெளிவிக்கும்.
சிலர் ஒரு விஷயம் அவர்களை தேடிவரும்போது அதை கையில் எடுக்க பயந்து அறிவார்த்தமாக பேசுவதாக நினைத்து சாக்கு போக்கு சொல்லி மனதிற்கு சமாதானம் செய்து பின் வாங்குவார்கள். உண்மையை சந்திப்பதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அது சூழ்நிலைகளை சந்திப்பதில் உள்ள கோழைத்தனத்தையே ஊக்குவிக்கும். அந்த செயலை செய்வதிலிருந்து தற்காலிகமாக விடுவித்து ஒரு திருப்தியை தருகிறது அவ்வளவே.
அறிவிற்கு பொருந்தாத பயங்கள் நமது ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யவிடாமல் தடுத்து முடக்குகின்றன. இந்த பயங்களை விடுத்து வார்ம்அப் பயிற்சிகளை மனதிற்கு தந்தாலே வெற்றி நிச்சயம்.