
நம் மனதின் துக்கத்தின் வெளிப்பாடுதான் கண்ணீர். எவ்வளவு அடக்கி வைத்தாலும் நம் முகம் அதை காட்டிக் கொடுத்துவிடும். நம்மால் எதிலும் முழுமையாக ஈடுபட முடியாது. யார் எது பேசினாலும் காதில் விழாது மன அழுத்தத்தின் உச்சியில் அழும் பொழுது இப்படித்தான் உணர்வோம். அழுது அழுது ஒரு கட்டத்தில் கண்ணில் நீர் வராமல் வறண்டு போய்விடும். பின்பு நம் மனமும் உடலும் மிக லேசாகிவிடும். எனவே அழுகை வரும்போது அதை தடுக்கவேண்டாம்.
அதன் போக்கில் விட்டு மனம் லேசாகும் வரை அழுது விடுவது நம் மனபாரம் குறைவதுடன் மன அழுத்தமும் போய்விடும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் நம் மனம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே அழுகை வந்தால் அழுது விடுங்கள். தவறொன்றும் இல்லை.
சில சமயம் அதிக இறுக்கமாக உணரும்பொழுது எதிலுமே பிடிப்பில்லாமல் போய்விடும். எதைக் கண்டாலும் ஒரு எரிச்சல், கோபம் வந்து போகும். யாரைக் கண்டாலும் பேசத் தோன்றாது. நாம் விரும்பிய, நமக்கு பிடித்த ஒருவரே நம் எதிரில் நின்றாலும் கூட அவருடன் மனம்விட்டு பேசத்தோன்றாமல் கல்லாக நின்று விடுவோம். மனதில் இருக்கும் துக்கம், துயரம் குறைய வேண்டுமென்றால் மனம் விட்டு அழுது விடுவது தான் நல்லது.
எனவே ஆற்றல் மிக்க கண்ணீரை தடுக்கவேண்டாம். சிலர் அழ வேண்டும் என்று தோன்றினாலும் யாராவது, ஏதாவது நினைத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து அழுகையை அடக்குவார்கள். பிறரைப் பற்றி கவலைப்படாதீர்கள். அழுகை வந்தால் அழுது விடுங்கள். அழுதால் மனபாரம் குறையும்.
ஆண்கள் அழக்கூடாது அது பலவீனம் என்பார்கள். இது தவறு. அழுகையில் ஆண் என்ன பெண் என்ன? உணர்வு என்பது இருவருக்கும் ஒன்றுதானே. அழுகையில் இரண்டு வகை உண்டு. ஆனந்தக் கண்ணீர் என்பது நாம் மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் பொழுது நம்மை அறியாமல் கண்ணில் நீர் சுரக்கும். மற்றொன்று நம்மால் தாங்க முடியாத துயரமோ தோல்வியோ ஏற்படும்பொழுது வருவது. இரண்டையுமே அடக்காமல் இருப்பது நம்மை புதுப்பிக்க உதவும்.
சிலர் நான்கு பேருக்கு எதிரில் வெட்கப்பட்டு கொண்டு அழ மாட்டார்கள். எல்லோர் முன்னிலும் அழுவதை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் தனிமையில் கண்ணீர் வறண்டு போகும் அளவுக்கு அழுது விடுவார்கள். தனிமையில் அழுவது மன அமைதியையும், வலிமையையும் தரும் என்று எண்ணுபவர்கள் தனிமையில் அழட்டும் தவறில்லை.
சிலர் பழைய வேண்டாத நினைவுகளால் தூண்டப்பட்டு அழுவார்கள். இதற்கு நாம் உழைக்கும் நேரத்தை அதிகரித்துக் கொண்டு சும்மா இருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். சும்மா இருந்தால் வேண்டாத எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டிருக்கும்.
எனவே எப்போதும் நம்மை பிசியாக வைத்துக் கொண்டால் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றாது. நம்மைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம் இல்லாத அளவுக்கு நம்மை பிஸியாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொண்டால்போதும்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அழுதால் பிரச்னைகள் தீருமா என்றால் தீராது. மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகும் அவ்வளவுதான். பிரச்னைகள் தீர ஒரே வழி தைரியமாக மனஉறுதியுடன் எதிர்த்து போராடுவதுதான். நம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே சந்தோஷம், துக்கம் இரண்டையும் சிறந்த முறையில் கையாள கற்றுக்கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எந்த வயதிலும் மன அழுத்தம், பதட்டம், விரக்தி, சோர்வு, பயமின்றி சிந்தித்து செயலாற்றுவார்கள்.