
ஆனந்தமாக வாழ்வதில் அனைவருக்கும் விருப்பம் உண்டு என்றாலும், சோர்ந்து போகிற சூழ்நிலையும் சில நேரங்களில் ஏற்படத்தான் செய்கிறது. அத்தகைய மனநிலையை எப்படிக் கையாளுவது? ஒரு விஷயம் குறிப்பிட்ட விதத்தில் நடக்க வேண்டுமென்று சில மனிதர்களையோ, சில சம்பவங்களையோ எதிர்பார்த்திருப்பீர்கள்.
அது வேறுமாதிரி ஆகிவிட்டால் துயரம் ஏற்படுகிறது. யாருக்கு நான் என்ற உணர்வு அதிகம் இருக்கிறதோ அவர்கள் மிக விரைவில் இது போன்ற மனக் காயங்களுக்கு ஆளாகிறார்கள். மனச்சோர்வு உடைய பலரின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்கள் ஆணவமாயிருப்பது தெரியவரும். இவர்கள் தங்களுக்குத்தானே துன்பம் விளைவித்துக் கொள்வார்கள். இது அடுத்தவரின் அனுதாபம் பெற முயற்சிதானே தவிர வேறல்ல.
மனதில் சோர்வும் துயரமும் நிறைந்திருக்கும்போது வாழ்க்கையின் உண்மை தன்மையை உணர முடியாது. மனம் சரியில்லாதபோது ஒரு மலரைப் பார்த்தால் கூட அதன் அழகை உணரமுடியாது. சிலர் துயரமான மனநிலையையும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் கர்ம யோகிகளாக ஆகியிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் இருந்தார். அவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு வாழ்ந்து வந்தார். இரண்டு குழந்தைகளும் நோய் வாய்பட்டு இறந்தன. மனைவியும் ஒரு வருடத்திற்குப் பிறகு இறந்தார். பைத்தியம் பிடித்த நிலையில் இருந்த இவர் மலைகளுக்கு சென்றார். குழந்தைப் பருவம் முதல் மலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நாட்களில் செழிப்பாக பல மரங்களோடு இருந்த மலை தற்போது வறண்டு காணப்படுவதைப் பார்த்தார். சில நாட்கள் அங்கு கிடைக்கும் கனிகளை உண்டு காலம் கழித்தார்.
சில நாட்களுக்குப் பிறகு ஒரு எண்ணம் அவருக்குத் தோன்றியது. இந்த மலையே வறண்டு விட்டதால் தன் வாழ்க்கையும் வறண்டதாக நினைத்தார். அங்கு விழுந்திருந்த விதைகளை நட்டு வைக்கத் தொடங்கினார். 25 ஆண்டுகளில் 4 லட்சம் மரங்களை வளர்த்தார். இவரை யோகி என்றுதான் கூற வேண்டும். உங்கள் மனதில் தோன்றக்கூடிய எண்ணங்களை உங்களால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்கமுடியும்.
எதிர்மறை என்று எதுவும் இல்லை. எதிர்மறையானதும் அடிப்படையில் நேர்மறைதான். ஒரு பல்பு எரிவதற்கு பாசிடிவ், நெகடிவ் என்ற இரு இணைப்புகளும் தேவை. துயரம் என்ற உணர்வு ஏற்படுமேயானால் அதை பயன்படுத்தி அதன் மூலமாகவே இதயத்தை அன்பு மயமாக்க முடியும். மாறாக துயரத்தில் கோபமும் எரிச்சலும் ஏற்படுகிற தென்றால் அது முட்டாள்தனம்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது ஒன்று மட்டுமே முக்கியமல்ல. எந்த உணர்ச்சியையும் ஆக்க பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளத் தெரிகிற பக்குவம்தான் முக்கியம்.