
ஒருவருக்குக் கைகள் இல்லை. வேதனை கொள்கிறான். இன்னொருவனுக்கு இரு கைகளும் உள்ளன. ஆனால் அவன் பணம் போதியது இல்லை என தவிக்கிறான். வேறொருவன் பணத்திலேயே மிதக்கிறார். ஆனால் ஆசைப்பட்டதை சாப்பிட முடிவதில்லை. வேதனைப் படுகிறான்.
இப்படி ஒவ்வோரு வரும் தங்களை வேதனை படுத்தி வருத்திக் கொள்கிறார்கள். உங்களுக்கு ஜலதோஷம் என்றால் அது உங்களை முடங்கிப் போடாத வரை பெரிதுபடுத்த மாட்டீர்கள். அதற்காக உங்களுக்கு நோய் இல்லை என்ற அர்த்தமில்லை. பயம், வக்ரம், கோபம் என்ற எத்தனையோ பைத்தியக்காரத்தனமும் நோய்தான்.
இன்றைக்கு நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் தங்கள் பைத்தியக்காரத்தனத்தை ஒளித்து வைக்க தந்திரம் உண்டா என்றுதான் தவிக்கிறார்கள். அதை மொத்தமாக களைவதுதான் ஆரோக்கியம் என்று யோசிப்பது இல்லை. ஒருவர் தன் நண்பரை இருபது வருடம் கழித்து சந்தித்தார். அந்த நண்பர் இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பதினாறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஏதாவது காப்பகம் நடத்துகிறாயா என்று நண்பனைக் கேட்க அவர் இல்லை எல்லாம் என் குழந்தைகள் என்றார். உடனே இவர் "உன் திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது போலிருக்கிறதே" என்றார்.
அதற்கு நண்பர் "என் மனைவி சரியான ராட்சஸி" என்றார். பின் எப்படி இவ்வளவு குழந்தைகள் பெற மனது வந்தது என கேட்க அவர் "மனைவியைத் தனியாக சமாளிக்க முடியவில்லை. வீட்டுக்குத் திரும்பினால் இந்த கூட்டத்தில் காணாமல் போகலாம் பார்" என்றார்.
இப்படித்தான் நீங்களும் உங்களைப் போன்ற பைத்தியக்கார்கள் கூட்டத்தில் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறீர்கள். மனநலம் தவறிய ஒருவன் தன்னை ஒரு கயிறு வைத்துத் தூணுடன் கட்டிப் போட்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டான். தூணையே சுற்றி சுற்றி வந்தான். அவனுடைய பரிதாப நிலைய உணர்ந்த ஒருவன் அவனைத் தள்ளி வரச்சொன்னான். அதற்கு அவன் "என்னை இந்தத் தூணுடன் பிணைத்துள்ள கயிறை வெட்டு. பிறகு நகருகிறேன்" என்றான். நாமும் அப்படித்தான் கோபம் என்ற தூணுடன் யாரும் உங்களை பிணைக்கவில்லை. தேவையற்ற பல விஷயங்களுடன் கற்பனைக் கயிற்றால் உங்களை நீங்களே பிணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சங்கிலியை யாராவது துண்டிப்பார்கள் என்று காத்திருந்தால் வாழ்நாளே முடிந்துவிடும்.
ஒருவர் மருத்துவரிடம் தன் மனைவிக்குக் காது கேட்கவில்லை என்றும், எதையும் பத்து தடவை சொன்னால்தான் பதில் சொல்கிறாள் என்று புகார் சொன்னார். உடனே மருத்துவர் அது எவ்வளவு மோசம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு நீங்கள் 15 அடி தூரத்தில் ஏதாவது சொல்லுங்கள். பதில் வரவில்லையென்றால் கொஞ்சம் கிட்டே போய் சொல்லுங்கள். எத்தனை தூரத்தில் நின்று பேசினால் காது கேட்கும் என கண்டு பிடியுங்கள்" என்றார்.
வீட்டுக்குப் போனவர் பதினைந்து அடி தூரத்திலிருந்து ஏதாவது ஃபோன் வந்ததா என்று மனைவியைக் கேட்க பதில் வரவில்லை. ஒவ்வொரு அடியாக நின்று போய் கேட்டார். இரண்டடி தூரத்தில் நின்று கேட்டபோது" பத்தாவது தடவையாகும் சொல்கிறேன் எந்த ஃபோனும் இல்ல" என்றார் அவர்.
இப்போது சொல்லுங்கள் பிரச்னை யாரிடம் இருக்கிறது? கோபம் பொறாமை சந்தேகங்களுக்கு இடம் கொடுத்தால், வேதனைகள் இடமிருந்து விடுபட முடியாது.