
நம்முடைய வாழ்க்கையில் நல்லவர்களைக் கண்டால், பண்பில் சிறந்த ஒழுக்க சீலர்களைக் கண்டால், அகம் மட்டுமல்ல முகமும் மலர்ந்து வரவேற்கிறோம்; உபசரிக்கிறோம். அவர்களது நட்பை உள்ளத்தோடு உள்ளமாக ஒன்றச் செய்து கொள்கிறோம்.
வெளிவட்டாரப் பழக்கங்களில் நண்பர்கள்தான் நமக்கு பெருந்துணையாக இருப்பவர்கள், துன்பம் வந்த காலத்து துன்பத்தை இறக்கிவைக்கச் செய்து ஆறுதலளிப்பவர்கள்.
நட்புக்குச் சிறந்த நிலை எதுவெனில், எத்தனை சூழ்நிலையிலும் வேறுபாடு கொள்ளாமல் இயன்றபோதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
ஒருவனுடைய யோக்யதையைத் தெரிந்து கொள்வதற்கு முன் அவனுடைய நண்பர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பார்கள். நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஒழுக்க சீலர்களாக விளங்கவேண்டும் என்பதைத்தான் இப்படி அழகுபடக் கூறியிருக்கிறார்கள்.
நம் பண்புக்கேற்றவாறு நல்ல நண்பர்களையே தேடிப்பெற வேண்டும். இது கூட சமுதாயத்திற்கு நாம் செய்யும் பெருந்தொண்டு எனலாம். காரணம், ஒவ்வொருவரும் நல்ல நண்பர்களை பண்பாளர்களைத் தேர்வு செய்யும் போது ஒட்டு மொத்தமாகச் சமுதாயத்தில் பெரும்பாலோர் பண்பாளர்களாகவே உருவாக்கப்பட்டு விடுவார்கள். இதனால் நாமும் உயர்கிறோம்; சமுதாயமும் உயர்கிறது.
பணத்திற்காக மட்டும் பழகும் நட்பு நீடித்த நாள் நிலைக்காது. பண்பொழுக்கத்திற்காக பயன்மிகு குறிக்கோளுக்காகவே நன்மை தரும் நட்பைப் பெறவேண்டும்.
இத்தகைய காலகட்டத்தில் நல்ல நண்பர்கள் கூட இடையிலே கெட்டு விடுகின்றனர். அப்படியிருக்க சாதாரணமானவர்கள் எப்படிக் கெடாமல் இருக்கமுடியும் என்ற கேள்வி கூட எழலாம் .நம் முன்னால் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சோதனைகளையும் வென்று நம்முடைய சாதனைகளாகப் படைக்க வேண்டும்.
பேதப்பட்டவர்களையும் ஒழுக்கத்திலே மாறுபட்டவர் களையும் திருத்த முயலவேண்டும். அது சமுதாய மாற்றத்திற்கு சமுதாய மறுமலர்ச்சிக்கு நாம் செய்யும் சாதனையாக இருக்கும்.
தீயவர்களைக் கூட ஒதுக்காமல் ஓரங்கட்டாமல் குறைகளை இனிமையாக கட்டிக்காட்டித் திருத்தி விடவேண்டும். என்றாவது ஒரு நாள் அத்தகையவன் திருந்தப்பெற்றால், நம்மை வாழ்த்துவான். அவன் பெற்றோர், மனைவி, மக்கள் உள்பட அனைவருமே நம்மை வாழ்த்திப் போற்றுவர். அத்தகைய சிறப்பு நம்வாழ்வை நிச்சயம் உன்னத நிலையில் உயர்த்தும்.
ஒரு சிலர் தாம் திருந்தி மறுவாழ்வு பெறுவதைத் தோல்வியெனக் கருதிக் கெட்டழிவார்கள். அத்தகையவர்களை விட்டு விடுங்கள். ஒரு சிலநாள் ஆட்டம்போட்டு குப்பைகளாகிவிடுவார்கள். பிறகு உரமாகி விடுவர்கள். வளரும் சமுதாயத்திற்கு இவர்களே பாடமாகி விடுகிறார்கள்.
இத்தகையவர்களை நண்பர்களாகவும் ஏற்றுக் கொள்ளவேண்டாம் அதே சமயம் பகைவர்களாகவும் எண்ண வேண்டாம். இதற்குத்தான் நம் பைந்தமிழில் இலைமறைகாயாக என்றனர்.
நண்பனுக்கு நாம் செய்யும் உதவியோ, அல்லது தமக்குத் துன்பம் வந்த காலத்து நண்பன் செய்யும் உதவியோ தியாக மனப்பான்மையோடு இருக்கவேண்டும். நட்பின் கவசமே தியாகம் எனலாம்.
அத்தகைய கவசம் வாழ்வில் உயர்வைத்தான் தேடித்தருமே தவிர தாழ்வைத் தேடித்தராது. எனவே நாம் ஒவ்வொருவரும் நல்ல நண்பர்களைப் பெற்று நாடு போற்ற வாழ்வது நமது கடமையாகும்.