

வாழ்க்கையில் சிலருக்கு எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும், எந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும் என்பது தெரிவதில்லை. இதனால் பல பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள். அதிகப்படியான பேச்சு பிரச்னைக்கு வழிவகுக்கும் என்ற புரிதலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கோபமாக இருக்கும் சமயங்களில் வாயைத் திறக்காமல் அமைதி காப்பது நல்லது. இல்லையெனில் தேவையற்றதை பேசி பிரச்னைகளை அதிகமாக்கிக் கொள்வதுடன், கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து பேசிவிடுவதும், கோபம் தணிந்த பின் வருத்தம் தெரிவிப்பதும் சிலருக்கு வழக்கமாக இருக்கும். அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.
இதனால் உங்கள் மீது உள்ள மதிப்பு குறைந்துவிடும் என்பதை உணருங்கள். எனவே கோபமாக இருக்கும் சமயங்களில் பேச்சை தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும்.
உங்களுக்கு, நீங்கள் பேசும் பேச்சை நிர்வகிக்க தெரிந்து இருக்க வேண்டும். பேசும் தனித்தன்மையே வாழ்க்கைக்கு அடித்தளம். எனவே கவனமாக சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதனை நீங்கள் உணரலாம். அவற்றை சுற்றியுள்ள பணிகளையும், நம் வாழ்க்கையையும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது.
எனவே, தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து விடுவது நல்லது. பொதுவாக எதையாவது சிந்திக்கும் பொழுது அல்லது யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது அதிகம் பேச விரும்பமாட்டார்கள் பகுத்தறிவு உள்ளவர்கள். அவர்கள் நம்பிக்கை, அமைதியாக யோசிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும், தெளிவான முடிவும் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள். நீங்களும் அப்படி பழகுங்கள்.
அதேபோல் உங்களுக்கு தெரியாத விஷயங்களை பிறர் பேசும் போது அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. தெரிந்தாலும், தெரியாமல் இருந்தாலும் எல்லா விஷயத்திலும் வேண்டுமென்றே மூக்கை நுழைத்து, தங்களின் கருத்தை சொல்வதை தவிர்த்து விடுவது நல்லது.
நமக்கு தெரியாத அல்லது அதைப் பற்றிய தெளிவு பெறாத விஷயங்களை பிறர் பேசும் போது அமைதியாக இருந்து, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிப்பது நல்லது. அதுதான் உங்களுடைய அறிவுத்திறனை வளர்க்கும். அரைகுறை அறிவு என்றுமே ஆபத்தானது என்பதை உணர்ந்து தெரியாத விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
ஒருபோதும் தேவையற்ற விஷயங்களை, தேவையற்ற சமயங்களில், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் வாதம் செய்யாதீர்கள். அம்மாதிரி சமயங்களில் நீங்கள் அவர்களுடன் வாதம் புரிவது சரியில்லை. அதனால் எந்த பயனும் வரப்போவதில்லை.
எந்தவித புரிதலும் இல்லாமல் வாதம் செய்பவர்களிடம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. வாதம் செய்வது என்பது சரியான புரிதலுடன் அறிவு சார்ந்து இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் வாதம் செய்வது வீண் செயல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எப்போதும் பேசுவதை விட அதிகம் காது கொடுத்து கேளுங்கள். கேட்கும் திறனை மேம்படுத்த சிறிது நேரம் தினமும் மௌனமாக இருந்து பழகுங்கள்.
பிரச்னைகள் வரும்போது, நம்பி வந்து உங்களிடம் சிலர் கூறுவார்கள். அம்மாதிரி சமயங்களில், அவர்கள் கூறுவதை அமைதியாக கேட்டப்பின், முடிந்தால் தகுந்த ஆலோசனைகளை வழங்குங்கள். எனவே பிறர் தங்கள் பிரச்னைகளைக் கூறும் போது, அமைதியாக கேட்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும், எப்போது பேசாமல் அமைதி காக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். சண்டைகள் நடைபெறும் இடம், தேவையற்ற வாக்குவாதம் நடைபெறும் இடம் மற்றும் வீண் பேச்சு பேசுபவர்களிடம் இருந்தும், உங்களுக்கு பொருந்தாத இடத்தில் இருந்து விலகிச் செல்வதும், அமைதி காப்பதும் உங்களுக்கு நல்லது!