ஏராளமான செய்திகள். ஏராளமான தகவல்கள். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தினால் சோஷியல் மீடியாக்கள், யூ டியூப்பில் லட்சக்கணக்கில் தகவல்கள் உலா வருகின்றன. அத்தனையுமே உண்மையா என்ன? இல்லை, இல்லவே இல்லை. ஆகவே நம் நலனுக்காக சாக்ரடீஸ் கூறிய பல வகையான கேள்விகளை நிலைமைக்குத் தக நாம் கேட்க வேண்டும். அவை என்னென்ன, எதற்காக அவற்றைக் கேட்க வேண்டும்? இதோ பார்ப்போம்:
தெளிவு பெறுவதற்காகக் கேட்க வேண்டிய கேள்விகள்:
இதை ஏன் நீங்கள் சொல்கிறீர்கள்?
நாம் விவாதிப்பதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
ஊகங்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கேட்க வேண்டிய கேள்விகள்:
இதற்கு பதிலாக வேறு எதை நாம் ஊகிக்கலாம்?
இது நடக்காது அல்லது நடக்கும் என்பதை எப்படி நாம் நிரூபிக்க முடியும்?
சாட்சியங்கள், ஆதாரங்கள் பற்றி அறிந்து கொள்ள கேட்க வேண்டிய கேள்விகள்:
எங்கே, ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?
இதற்கு ஒத்திருக்கும் இன்னொரு விஷயம் என்ன?
இது நடக்கும் என்று நம்புவதற்கான காரணங்கள் என்ன? ஏன்?
பல்வேறு பார்வைகள் மற்றும் சரியான கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள கேட்க வேண்டிய கேள்விகள்:
இதற்கு மாற்று வழி என்ன?
இன்னொரு விதமாக இதை எப்படிச் சரியாகப் பார்க்கலாம்?
இது அவசியம் தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?
இது தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள் யாவை?
இதற்கு எதிரான கருத்துகள் யாவை?
அமுல்படுத்தும் விதமும் அமுல்படுத்தும்போது விளையக்கூடிய விளைவுகளையும் பற்றி கேட்க வேண்டிய கேள்விகள்:
இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?
பொதுவாக இதை எப்படிச் சொல்லலாம்?
நீங்கள் சொல்ல வருவதன் உள்ளார்ந்த கருத்து என்ன?
கேள்வி பற்றி கேட்க வேண்டிய கேள்விகள்
இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன?
இதற்கான அர்த்தம் என்ன?
இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இது அன்றாட வாழ்க்கையில் எப்படிச் செயல்பட முடியும்?
இதைப் பரப்புவது ஏன் அவசியம்?
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் திறனால் நமது ஏற்படும் பயன்கள் யாவை?
இது முதலில் நம்மை நாமே சரியாகப் புரிந்து கொள்ள உதவும். அடுத்ததாக உளவியலில் இது ஒரு பிரச்சனையைத் தீர்க்கச் செல்லும் முன்னர் இப்படிக் கேட்டால் பல விஷயங்களில் நமக்குத் தெளிவு பிறக்கும்; சில முடிவுகளை நாமே மாற்றிக் கொள்ள நேரிடும்.
ஒரு சின்ன எடுத்துக்காட்டை இங்கு சொல்லலாம்.
ராமனும் சீதாவும் கணவனும் மனைவியுமாவர். ராமன் ஒரு திட்டத்தைப் பற்றிய தனது எண்ணங்களை அழகுற கம்ப்யூட்டரில் அடித்து சீதாவுக்கு அனுப்பினான். பற்பல பக்கங்கள்; சீதா திகைத்தாள்.
இவ்வளவு பக்கம் வேண்டாம் என்று சொன்னால் அது ராமனின் திறமையைக் குறைப்பது போல ஆகி விடும். இவ்வளவு பக்கங்களை யாராலும் படிக்க முடியாது என்று சொன்னால் எதிர்மறை எண்ணத்தைச் சொன்னதாகி விடும்.
சீதை சாக்ரடீஸ் கேள்வி மாடலை அப்ளை செய்தாள்.
“ஆமாம், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க இவ்வளவு பக்கங்கள் வேண்டுமா?” என்று ராமனைக் கேட்க, ராமன் யோசிக்க ஆரம்பித்தான்.
“இவ்வளவு தேவை இல்லைதான்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னமேயே எதை எதை எல்லாம் நீக்கலாம், சுருக்கலாம் என்று சீதை உதவி செய்ய ஆரம்பித்தாள்.
விளைவு அருமையான ஒரு திட்டம் சுருக்கமாக மிளரிந்தது.
ராமனுக்கு ஒரே சந்தோஷம், தன் மனைவி இதை அற்புதமாகச் சுருக்கி உதவியது பற்றி.
வெட்டியான விவாதமும் எதிர்மறை விமர்சனமும் ஒரு போதும் நல்ல விளைவை ஏற்படுத்தாது.
ஆனால் சாக்ரடீஸின் கேள்விகள் நம்மைச் சிறக்க வைக்கும். கேட்டுப் பாருங்களேன்!