
இன்றைய வேகமான வாழ்க்கையில், நாம் நீண்ட நாள் இலக்குகளை அடைய அதிவேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும், அந்த ஓட்டத்தில் நம்மை நாமே மறந்து விடுகிறோம். இந்த பரபரப்பான வாழ்க்கையில், உண்மையான மகிழ்ச்சி, பெரும் நிகழ்வுகளில் அல்ல; அவை நம் தினசரி வாழ்க்கையில் மறைந்திருக்கும் சின்னச் சின்ன தருணங்களில் தான் இருக்கின்றன! அவ்வாறு அந்தச் சிறு தருணங்களை கவனித்து, அனுபவிக்க நேரம் ஒதுக்குவது அவசியம். அப்படிப்பட்ட 7 சிறந்த தருணங்களைப் பார்ப்போம்.
1. டிஜிட்டல் டிடாக்ஸ்
நம் கைகளிலையே இருக்கும் ஸ்மார்ட்போன்களில் பார்க்கப்படும் இன்ஸ்டாகிராம் ரீல்களிலும், நோட்டிபிகேஷன்களிலும் எப்போதும் நாம் மூழ்கிவிடுகிறோம். அதற்கு மாறாக ஒரு சில நிமிடங்களுக்கு போனை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களை சுற்றியுள்ள இயற்கையைக் கவனியுங்கள். சூரிய ஒளி, காற்றில் மரங்களின் இலை அசைவது, குழந்தையின் சிரிப்பு ஆகியவற்றை உணருங்கள் இது மனதை அமைதிப்படுத்த உதவும்.
2. இசை நேரம்
உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மன அமைதியைத் தரக்கூடிய ஒரு ப்ளேலிஸ்டைத் தயார் செய்யுங்கள். அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து, முழுமையாக ரசியுங்கள். வேறு எந்த செயல்களிலும் கவனச்சிதறல் இல்லாமல் பாடலின் இசையை கேட்கும்போது அவை தரும் ஆனந்தம் அலாதியானது என்றே சொல்லலாம்.
3. இயற்கையுடன் சிறிய நடைபயிற்சி
வீட்டுக்கு அருகிலுள்ள பூங்காவிற்குச் சென்று சில நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் செடிகளுடன் சிறிது நேரம் செலவிடலாம். செடிகளின் மண் வாசணை, வண்ணமயமான பூக்களின் நிறம் போன்ற இயற்கையின் அமைதியான சூழலை ரசியுங்கள். இது போன்று இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதும் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும்.
4. திரையின்றி உணவுபழக்கம்
தினமும் ஒரு வேளையாவது உணவு உண்ணும் போது, எந்தவித டிஜிட்டல் திரைகளும் தொலைக்காட்சி, மொபைல், லேப்டாப் இல்லாமல் சாப்பிடுங்கள். உணவின் சுவை, அதன் மணம் ஆகியவற்றை ரசித்துச் சாப்பிடுங்கள். இது உடலையும் மனதையும் இணைத்து உண்ணும் உணவை முழுமையாக அனுபவிக்க உதவும்.
5. தினமும் ஒரு புதிய கற்றல்
யூடியூப் ஷார்ட்ஸ் அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்களில் மணிநேரங்களை செலவிடுவதைத் தவிர்த்து, ஒரு புதிய சிறிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள ஐந்து நிமிடங்கள் ஒதுக்குங்கள். அது உங்கள் தொழில் சார்ந்ததாகவோ, அல்லது ஒரு புதிய மொழி/வார்த்தையாகவோ கூட இருக்கலாம். அறிவைப் பெருக்கும் இத்தகைய சிறிய தருணங்களும் மனதிற்கு நிறைவைத் தரும்.
6. நன்றியுணர்வை எழுதுங்கள்
ஒரு நோட்புக்கில் அல்லது மொபைலில் உள்ள நோட்ஸ் செயலியில் அன்றைய நாளில் உங்களுக்கு நடந்த ஒரு நல்ல விஷயம் அல்லது நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கும் ஒரு விஷயத்தைப் பதிவு செய்யுங்கள். சிறிய வெற்றிகள், மகிழ்ச்சி தரும் தருணங்களை மனதில் பதிய வைக்க இது உதவும்.
7. பயனுள்ள பாட்காஸ்டை கேளுங்கள்
சமூக ஊடகங்களில் எதிர்மறைத் தகவல்களையும், தேவையில்லாத விவாதங்களையும் தவிர்த்து, உங்களை ஊக்கப்படுத்தும், நேர்மறையான சிந்தனைகளைத் தூண்டும் ஒரு சிறிய பாட்காஸ்ட்டை கேளுங்கள். இது உங்களை புதிய ஊக்கத்துடன் நாளை தொடங்க உதவும்.
இந்த சிறிய செயல்கள் நம் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கண்டறிய நிச்சயம் உதவும். எனவே, மிக பெரிய விஷயங்களுக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு நொடியையும் ரசிக்கப் பழகுங்கள். வாழ்க்கை என்பது இந்தச் சிறிய தருணங்களின் உள்ளது என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள்.