உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான உணவு செரிமானம், புரத உற்பத்தி, நச்சு நீக்கம், மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் சேமிப்பு போன்ற பல பணிகளை செய்யும் முக்கிய உறுப்புதான் கல்லீரல். இது இரத்தத்தை வடிகட்டுதல் உட்பட பல முக்கியமான உடல் செயல்பாடுகளைச் செய்கிறது. உடலுக்குத் தேவையான ரசாயனங்களை உருவாக்குவதால் இது ஒரு சுரப்பியாகவும் கருதப்படுகிறது.
சில நோய்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் கல்லீரலை சேதப்படுத்த வாய்ப்புண்டு. அவ்வகை பாதிப்புகளில் காமாலை நோய் பொதுவான ஒன்றாக உள்ளது. இது கல்லீரல் செயலிழப்பு காரணமாக ஏற்படும் ஒரு நிலையாகும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் கல்லீரல் பாதுகாப்பு பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இங்கு அது குறித்து காண்போம்.
மஞ்சள் காமாலை என்றால் என்ன?
இரத்தத்தில் பிலிரூபின் எனும் மஞ்சள் நிறமி அதிகமாக இருக்கும்போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. உடல் பழைய அல்லது சேதமடைந்த சிவப்பு ரத்த அணுக்களை மறுசுழற்சி செய்யும் போது பிலிரூபினை உருவாக்குகிறது. இந்த பிலிரூபின்தான் பொதுவாக கல்லீரலால் பதப்படுத்தப்பட்டு பித்தமாக செரிமான அமைப்பு வழியாகச் சென்று உடல் கழிவு மலமாக வெளியேறுகிறது.
பிலிரூபின் இரத்தத்தில் அதிகரித்து மஞ்சள் நிறமாகக் காட்டும் பாதிப்பே மஞ்சள் காமாலை. இது கல்லீரல் வேலை செய்யவில்லை என்பதைக் குறிக்கும் நிலையாகும்.
காமலை ஏற்பட காரணங்கள்:
கல்லீரல் புற்றுநோய் பித்த நாளங்களைத் தடுப்பதன் மூலமோ அல்லது கல்லீரல் செல்களை சேதப்படுத்துவதன் மூலமோ மஞ்சள் காமாலை ஏற்படும்.
கல்லீரல் வைரஸ், ஹெபடைடிஸ் (A, B, C, D, E) வீக்கம் மற்றும் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். மதுவால் ஏற்படும் ஹெபடைடிஸ், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (சிரோசிஸ்) போன்றவைகளும் கல்லீரல் காமாலையை ஏற்படுத்தும்.
பித்தநீர் பாதையில் அடைப்பு இருந்தால், பிலிரூபின் வெளியேறுவது தடுக்கப்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
முதியோருக்கு பிற உடல்நலப் பிரச்சினைகளான பித்தப்பைக் கற்கள், பித்தப்பை புற்றுநோய் , அடைபட்ட பித்த நாளம் , கணைய அழற்சி கணைய புற்றுநோய், லிம்போமா போன்றவற்றினாலும் காமாலை தோன்றும்.
பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை மிகவும் பொதுவானது. ஏனெனில், குழந்தை பிறக்கும்போது பிலிரூபினை வெளியேற்றுவது அவர்களின் உடலில் கடினமாக இருக்கும்.
(கல்லீரல் சரியாக வேலை செய்யத் தொடங்கியவுடன் பாதிப்பு மறையும்.)
அறிகுறிகள்:
மஞ்சள் காமாலையின் சிறப்பியல்பு மஞ்சள் நிறமாற்றத்தை உடலில் ஏற்படுத்துவதே,
உடல் தோல் மற்றும் கண்களின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல். காய்ச்சல்,
வயிற்று வலி,
சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல்,
மலம் வெளிர் நிறமாக மாறுதல்,
அதிக சோர்வு,
பசியின்மை,
பலவீனம்,
ஆகியவைகள் இதன் அறிகுறிகளாகும்.
சிகிச்சை:
கல்லீரல் காமாலையின் காரணத்தைப் பொறுத்து சிகிச்சைகளும் மாறுபடும். அறிகுறிகள் கண்டவுடன் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். இதனால் நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.
முறையான மருத்துவ கண்காணிப்புடன் கூடிய உணவுமுறை மாற்றங்கள், ஓய்வு மற்றும் மதுவைத் தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவும்.
முன்னெச்சரிக்கைகள்:
ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி-க்கு உள்ள தடுப்பூசிகளை மருத்துவ ஆலோசனை பெற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முறையாக போடுவது நல்லது.
நல்ல சுகாதாரத்தைப் பின்பற்றுவது ஹெபடைடிஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும். சமச்சீர் உணவு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும். மஞ்சள் காமாலை என்றால் பயப்படாமல் உடனடியாக பெறும் மருத்துவ சிகிச்சை மூலம் நிச்சயமாக நலம் பெறலாம்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.