
ஒரு சிலர் எங்கு போனாலும், எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் சிறிதும் யோசிக்காமல் யோசனை கூறி அதன் விளைவாக தர்ம சங்கடத்தில் நெளிவார்கள். அப்படி பட்ட உண்மை சம்பவத்தின் அடிப்படையில் விளக்குகின்றது கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை குறித்து.
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து வங்கியில் பணி புரிந்த பத்து அதிகாரிகள் ஆக்ராவில் நடைப் பெற்ற ட்ரைனிங் ஒன்றில் பங்கு பெற சென்று இருந்தனர். அதில் ஒருவர் எதற்கு எடுத்தாலும் தனக்கு மட்டும் தான் தெரியும் என்ற தோரணையில் நடந்துக் கொண்டார்.
அவர் கூட சென்ற மற்ற அதிகாரிகளுக்கு இவரது நடவடிக்கை பிடிக்கவில்லை. இருந்தும் மரியாதை நிமித்தம் யாரும் ஒன்றும் கூறவில்லை. அந்த ட்ரைனிங் மொத்தம் ஏழு நாட்கள். இரண்டாம் நாள் மாலை எல்லோரும் அந்த ஊர் வங்கி கிளையின் அதிகாரி துணையுடன் ஷூக்கள் வாங்க சென்றனர். அவர் ஆக்ராவை சேர்ந்தவர் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் ஆக்ரா அருகில்.
இவர்களை சில குடிசைகள் இருந்த பகுதிக்கு கூப்பிட்டுக் கொண்டு சென்றார். போகும் பொழுது கூறினார் நல்ல தரமான கைகளால் செய்யப்படும் ஷூக்கள் குறைவான ( மலிவான ) விலையில் வாங்கி தருவதாக.
அனைவரும் ஆவலுடன் சென்றனர். அவர் அழைத்து சென்ற இடம் ஒரு குடிசை. அதில் ஒருவர் தரையில் அமர்ந்து ஷூ தைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் இருந்த மர அலமாரியில் பல ஜோடி ஷூக்கள் வைக்கப் பட்டுயிருந்தன. அந்த அதிகாரியை பார்த்ததும் அந்த தொழிலாளி ( அவர் தான் முதலாளியும் கூட ) வணங்கி வரவேற்றார்.
அந்த அதிகாரி வந்த காரணத்தை கூறி இவர்களுக்கு தேவையான ஷூக்கள், செருப்புக்களை எடுத்துக்காட்டும் படி கேட்டுக் கொண்டார். அவரும் இவர்களுக்கு வணக்கம் கூறி வரவேற்று பல ஷூக்கள் ஜோடிகள் எடுத்துக் கொடுத்தார்.
சென்றவர்கள் அந்த ஷூக்கள் நேர்த்தியான முறையில் கைகளால் தயரித்து இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தனர். தங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் மூன்று ஜோடிகள் எடுத்துக் கொண்டனர். அதற்கு காரணம் விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவில் மலிவாக இருந்ததே.
எல்லோருக்கும் மகிழ்ச்சி. அந்த ஷூக்கள் தயாரித்தவருக்கும் மகிழ்ச்சி ஒரே சமயத்தில் பல ஜோடிகள் விற்பனை செய்ய முடிந்ததே என்று. அவருடன் உரையாடிக் கொண்டு இருந்தார் , இவர்களை கூப்பிட்டு சென்ற அதிகாரி.
அப்பொழுது அந்த மர அலமாரியில் தயார் நிலையில் இருந்த ஷூ ஜோடி ஒன்றை கையில் எடுத்துப் பார்த்தார் எதற்கு எடுத்தாலும் தன்னை முன் நிறுத்திக் கொள்பவர். அவருக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த ஜோடியில் ஒரு பிரபல ஷூக்கள் கம்பெனியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அந்த ஜோடியை எடுத்துக் கொண்டு இந்தியில் (அவருக்கு சுமாராக இந்தி தெரியும் ) அந்த தயாரிப்பாளரிடம் அவர் கண்டது பற்றி விசாரித்தார், சுட்டிக் காட்டி.
அவரும் சிரித்துக் கொண்டே ,"ஆமாம். இந்த ஜோடி ஷூக்கள் அந்த பிரபல கம்பனிக்கு நானும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் எங்கள் கைகளால் தயாரித்து அனுப்புகிறோம்.!" என்றார். இதைக் கேட்டதும் இவர் "உங்களுக்கு தெரியுமா? இந்த ஜோடி ஷூக்கள் அவர்களால் கிட்டத்தட்ட நான்கு மடங்கு விலையில் விற்பனை செய்யப் படுகின்றன. கடினமாக உழைக்கும் உங்களுக்கு கிடைப்பது மிக சிறியளவு பணமே. ஒன்று செய்யுங்கள் கடன் பெற்று நீங்களே தயாரித்து அதிக லாபம் சம்பாதியுங்கள்..." என்று விடாமல் பேசி ஆலோசனை வேறு கொடுத்தார்.
பிறகு அவருடன் வந்திருந்த மற்ற அதிகார்களை பார்த்து பெருமையுடன் சிரிக்கவும் செய்தார்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அந்த ஷூ தயாரிப்பாளர் கைகளை கூப்பி கூறியதன் சாராம்சம்....
"உங்கள் ஆலோசனைக்கு நன்றி. ஏதோ அந்த புகழ் பெற்ற கம்பெனி தொடர்ந்து தரும் ஆர்டர்களினால் தான் எங்கள் வீட்டில் அடுப்பு எரிகின்றது. எங்களால் உணவு உண்ண முடிகின்றது. நீங்கள் கூறியபடி நான் தனியாக தொழில் தொடங்கினால் எப்படி பட்ட இன்னல்களை சந்திக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். இந்த கம்பெனி ஆர்டர்கள் கை நழுவி போய்விடும். மறுபடியும் கிடைக்காது. எனவே, தாங்கள் வாங்கிக் கொண்ட ஷூகளுடன் தாங்கள் கிளம்பினால், என் வேலையை தொடர உதவும்," என்று கூறி மறுபடியும் வணங்கினார். கேட்ட இந்த நபருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்தார்.
நிகழ்வு கற்று தரும் பாடம்.
பிறரின் திறமைகளை பார்த்தால், முடிந்தால் பாராட்டுங்கள்.
பிறருக்கு யோசனைகள் கூறுவதாக இருந்தால் அவரைப் பற்றிய விவரங்கள், சூழ்நிலை, கூறப் போகும் யோசனை பெருத்தமானதா? பலன் அளிக்குமா? என்று நன்கு அறிந்துக் கொண்டு பிறகு கொடுப்பது சரியாக இருக்கும். முழுமையாக அறியாமலும், அந்த நபரின் அனுமதி பெறாமலும் யோசனை கொடுப்பது எதிர்மறை விளைவை ஏற்படுத்த வழி வகுக்கும். குறிப்பாக எல்லாம் தெரியும் என்ற தோரணையில் பெருமைக்காக பிறருக்கு அளிக்கும் அட்வைஸ்கள், யோசனைகள் இவைகளை முற்றிலும் தவிர்ப்பது தான் சிறந்த செயலாக கருதப்படும். அதை பின்பற்றவும்.