
ஆயிரக்கணக்கான சாதிகள் உலகில் தோன்றுவதற்கும், வளர்வதற்கும் மதங்கள்தான் காரணம். இவ்வாறு வளர்க்கப்பட்ட சாதிகளுக்கிடையே சண்டையை மூட்டி விடுவதும் மதங்கள்தான். மனிதனை மனிதத் தன்மையிலிருந்து கீழ் இறக்குவது மதங்களும், சாதிகளும்தான்.
மசூதி ஒன்றின் மாடத்தின் மேல் புறா ஒன்று தன் குஞ்சுப் பறவைகளுடன் வசித்து வந்தது. திடீரென்று ஒருநாள் மசூதியின் மேல் பகுதியை இடித்துப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது. இந்த மசூதியின் மேல் பகுதி இடிக்கப்படும் விபரமறிந்த அந்தப்புறா, தன் குஞ்சுப் புறாக்களுடன் மசூதியை விட்டு வெளியேறியது.
சிறிது தூரம் பறந்து சென்ற அது அங்கு ஒரு தேவாலயம் இருப்பதைக் கண்டு அங்கு தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதி, அந்த தேவாலயத்தில் கோபுர உச்சியில் தன் குஞ்சுகளுடன் குடியேறியது.சில நாட்கள் சென்றிருக்கும்.
அந்த தேவாலயத்திலும் வர்ணம் பூசுவதற்கென்று தேவாலயக் கோபுரத்தை சுத்தம் செய்யத் துவங்கினர். இதனால் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பில்லை என்று கருதிய அந்தப்புறா, மீண்டும் பாதுகாப்பான இடம் தேடி பறந்து சென்றது.
சிறிது தூரம் சென்றதும் உயர்ந்த பழமையான சிவபெருமான் கோவில் கோபுரம் ஒன்றைக் கண்டது. இந்த கோவில் கோபுரம்தான் நமக்கும் நம் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பானது என்று கருதி அந்தக் கோபுரத்தில் குடியேறியது. கோவில் கோபுரத்தில் தங்கியிருந்தபோது ஒரு நாள் கீழே திடீரென்று கூச்சலும் சப்தமுமாக இருந்தது. இதைக்கேட்டு குஞ்சு புறாக்கள் பயந்தன...
அந்த குஞ்சுப் புறாக்கள் பயத்தோடு தங்கள் தாய்ப்புறாவைப் பார்த்து அம்மா கீழே ஒரு கூச்சலாக இருக்கிறதே...! என்றது கிழே எட்டிப் பார்த்த தாய்ப்புறா தனது குஞ்சுப் புறாக்களிடம் கூறியதாவது.
"அது வேறொன்றுமில்லை. இந்தப் பாழாய்ப்போன மனிதர்கள், மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். நாம் மசூதியின் மேலிருந்தோம், அதற்குப்பின்பு தேவாலயத்தில் இருந்தோம். இப்போது நாம் கோவிலில் இருக்கிறோம். நாம் எங்கிருந்தாலும் நம்மைப் புறா என்றுதான் அழைக்கிறார்கள்.
ஆனால், இந்த மனிதர்கள் மட்டும் கோவிலில் இருந்தால் இந்து என்றும், தேவாலயத்தில் இருந்தால் கிருஸ்துவர் என்றும் மசூதியிலிருந்தால் முசுலீம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் மதங்கள் மற்றும் சாதிகளின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். இதனால் இவர்கள் மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு, மதம் மற்றும் சாதிகளின் பெயரால் சண்டையிட்டுக் கலவரம் செய்வார்கள்.
முன்பு பறவைக் காய்ச்சல் நோய் வந்து விட்டது என்று சொல்லி கண்ணில் பார்த்த பறவைகளையெல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினார்கள். ஆனால், இவர்களிடம் மதம் மற்றும் சாதிகளுக்கான கலவரம் எனும் மனித காய்ச்சலுக்கான தொற்றுக் கிருமிகள் அதிகமாக உள்ளது.
இந்த கிருமிகள் பறவைகளான நம்மைத் தாக்கினால் நம்மினமே அழிந்துவிடும். இந்த மத, சாதிக் கலவர மனித காய்ச்சல் நமக்கு வந்து விடக்கூடாது. அதனால், நாம் வேறிடம் பறந்து செல்வோம் என்று கூறியபடி அந்த புறா தன் குஞ்சுகளுடன் அங்கிருந்து மற்றொரு பாதுகாப்பான இடம் தேடி பறந்து சென்றது. மதம், சாதி எனும் பேய் பிடிக்காமல், மதச் சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும்.