
வாய்ப்புகள் நம்மைதேடி வராது. நாம்தான் அதை உருவாக்கிக் கொள்ளவேண்டும். நம்முடைய இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை நல்ல சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது அதை பயன் படுத்திக்கொண்டு உருவாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பு.
வாய்ப்புகள் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் ஒருவகை. வாய்ப்புகள் வந்தாலும் சரியாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மற்றொரு வகை. சாதிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எப்போது வருகிறதோ அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நாம் எப்பொழுதுமே தயாராக இருக்கவேண்டும்.
வாய்ப்புகள் எல்லா நேரமும் நம் வீட்டுக் கதவை தட்டிக்கொண்டு இருக்காது. நமக்கான வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் இடத்திலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கிய முயற்சியை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். யாரோ ஒருவரால் நமக்கான வாய்ப்புகளும், வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படுவதை விட நமக்கான வாய்ப்பை நாமே உருவாக்கிக் கொள்வதுதான் சிறந்த பலனைத்தரும்.
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள்தான் வெற்றியாளராக திகழ முடியும். கொரோனா காலத்தில் வேலையை இழந்து அவதிப்பட்டவர்கள் அநேகம் பேர். அதில் வேலை இல்லையே என்று சோர்ந்து ஓரிடத்தில் அமராமல் விதவிதமான புது வேலைகளைச் செய்து பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்தியவர்கள் பலர். முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி நிச்சயம்.
வாய்ப்பு இல்லையே என வருந்தாமல் அந்த வாய்ப்புகளை எப்படி உருவாக்கிக்கொள்வது என்று சிந்திப்பதுதான் அவசியம். நம்மிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து சுயதொழில் மேற்கொள்ளலாம். வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் அதற்கான வழித்தடத்தை நாம் தான் திறம்பட அமைத்துக்கொள்ள வேண்டும்.
வாய்ப்பை உருவாக்குபவர்களை விட தேடி ஓடுபவர்கள்தான் அதிகம். வாய்ப்புகள் வரும் பொழுது அதை சரியாக பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வாழ்வில் உயர வாய்ப்புகள் சரியாக கிடைக்காத பொழுது சோம்பி இராமல் நாமே வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு உழைத்தால் உச்சத்தை தொடமுடியும். புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதும், வாய்ப்புகள் கைநழுவிப் போகும் சமயம் அதனை தக்கவைத்துக் கொள்ளவும் தெரிந்துகொள்ள வேண்டும். எண்ணியதை அடையும் வரை இரவு பகலாக உழைத்து பாடுபட வேண்டும்.
நமக்கான குறிக்கோளை தெரிவு செய்வதுடன், அதைத் தேடி செல்வதை விட உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி உருவாக்கியதை வாழ்க்கையாக மாற்றவேண்டும். வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள திட்டமிடுதலும், தேவைகளை அறிவதும், அதற்கான பயிற்சி பெறுவதும், கடினமாக உழைப்பதும் அவசியம்.
நீச்சல் தெரிந்து கொண்டு யாரும் ஆற்றில் குதிப்பதில்லை. முதலில் ஆற்றில் இறங்கினால்தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும். வாய்ப்பு என்பது நாம் நினைத்தபடி, நினைத்த நேரத்தில் வந்து நிற்காது. எதிர்பாராமல் வரும் வாய்ப்பை சரியானபடி பயன்படுத்தவில்லை என்றால் அது யாருக்காகவும் காத்துக் கொண்டு நிற்காது. எனவே நாம் தான் விழிப்புணர்வுடன் இருந்து வாய்ப்பு கிடைக்கும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிலர் படித்து முடித்த பின்பு வேலை கிடைக்காமல் இருக்கும் பொழுது "வாய்ப்புகள் கிடைக்கும் வரை காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பினை தேடிச்செல்!" என்று கூறுவோம். இன்னும் சிலரோ வாய்ப்புகளைத் தேடிப் போவதை விட நாமே உருவாக்கிக் கொண்டால் சிறப்பு என்று கூறுவார்கள். சிலருக்கு திறமையுடன் கூடிய ஆர்வம் காரணமாக ஆசைப்பட்டதற்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும்.
ஆனால் சிலருக்கு திறமை இருந்தும் தக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும். இதற்காக சோர்ந்து துவண்டு விடாமல் முயற்சி செய்ய வேறு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வரவில்லை என்றால் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும் தயங்கவேண்டாம்.