
ஒரு குழந்தையின் முயற்சி நடையில் முடிகிறது. ஓவியரின் முயற்சி அழகிய ஓவியமாகிறது. சிற்பியின் முயற்சி கல்லைக் சிலையாக்கிவிடுகிறது. எச்செயலாயினும் முயற்சி இன்றியமையாததாகும்.
தொடர்ந்து தோல்வியே கண்ட இராபர்ட் புரூஸ் என்னும் மன்னன், சிலந்தி பலமுறை முயன்று பின்னி முடித்த சிலந்திக் கூட்டைக்கண்டு புத்துணர்ச்சி பெற்றான். போரில் வெற்றியும் பெற்றான்.
டெமஸ்தனிஸ் என்னும் திக்குவாயன் இடைவிடா முயற்சியால் சிறந்த பேச்சாளர் ஆகியதாக சரித்திரம் கூறுகிறது.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. முயற்சியே உயர்வு தரும். பெருமையோ சிறுமையோ பிறர்தர வருவதில்லை. அது, நாமே நமக்கு உருவாக்கிக் கொள்வதாகும். அதனால்தான் முயற்சி திருவினையாக்கும்; முயற்சி உயர்வு தரும் என்னும் வழக்குகள் தோன்றியுள்ளன.
உழைப்போர் உயர்வு பெறுவதையும், சோம்பித் திரிபவர் தாழ்வடைந்து வருந்துவதையும் உலகில் காணமுடிகிறது. மக்களாகப் பிறந்தவர் செயல்பட்டு மக்களாக வாழவேண்டும். உழைப்பே செல்வம் என்பதனை மறக்கலாகாது. தன்னால் எதையும் செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்கவேண்டும். உழைப்பே உயர்வு என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் உழைப்பாலும் இடைவிடா முயற்சியாலும் விதியையும் வெற்றி பெறலாம்.
மாறாக 'நான் ஏழை', 'வசதியில்லாதவன்', 'என்னால் இதைச் செய்ய முடியுமா' என்னும் எண்ணங்களை வளர்த்துக் கொள்பவர்களின் வாழ்வு வளம்பெறாது. பிறர் உதவியை எதிர்பார்ப்பவன் தன் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். எச்செயலாயினும் ஊக்கம் குறையாது. முயன்றிட வேண்டும். ஊக்கம் உடைமையையே உடமை என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
ஊக்கம் முயற்சியை வளர்க்கும். தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளுக்கும் பிற அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம் முயற்சிகள்தாம். தொடர் முயற்சியால் நற்பயன் விளைகிறது. முயற்சி வெற்றிகளையும் செல்வத்தையும் தேடித்தரும். அதனால்தான் அவ்வையார் 'ஊக்கமது கைவிடேல்' என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை கொள்ளாதவனுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும். அப்படிப்பட்டவர்களை தரித்திர தேவதைதான் பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பாள். வாழ்க்கையில் பெரிய சாதனைகளைப் புரிந்து, தங்களை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள். பலப்பல குணங்களையும் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
'நம்பிக்கை கலந்த உழைப்பு கட்டாயம் வெற்றியைப் பெற்றுத்தரும்' என்பது இயற்கை வகுத்த வழி. அசையாத நம்பிக்கையுடன் கடினமான உழைப்பு சேரும்போது மாபெரும் சாதனை உருவாகிறது. நம்பிக்கை மிகுந்தவன் ஓர் உயர்ந்த மலையின் சிகரத்தைப் போன்று காட்சிதருவான்.
பனிப்புயல்கள் வெறிபிடித்த அரக்கர்களைப் போன்று, அந்த மலைச்சிகரத்தை அடிக்கடி தாக்குகின்றன. இடியும் மின்னலும் பேய்மழையும் கைகோர்த்துக் கொண்டு அங்கு கோர நர்த்தனமாடி வருகின்றன. ஆனால் அந்த மலைச்சிகரம் இந்த வெறியாட்டங்களைப் பொறுத்துக்கொண்டு தன் புன்னகையை சிறிது கூட இழக்காமல், பொறுமையாகவும் கம்பீரமாகவும் தலைநிமிர்ந்து நிர்கிறது.
அதேபோன்று நம்பிக்கை மிகுந்தவனை அவமானங்கள். சோதனைகள், ஏமாற்றங்கள், எதிர்ப்புகள் போன்றவைகள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தபோதும், அவன் மலைச்சிகரங்களைப் போன்று காட்சியளிப்பான்.