
எதிரிகள் இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமற்ற ஒன்று. நம் வாழ்வில் பல சவால்களையும், எதிர்மறை அனுபவங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அம்மாதிரி சமயங்களில் நம்மை பலமாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் எதிரிகள் தேவைதான்.
எதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரசியமற்றது. எதிரிகள் இல்லாத வாழ்வில் நாம் நினைத்தது உடனே நடக்கும். நமக்கு போட்டி என்று யாரும் இருக்க மாட்டார்கள். நம் போக்கிலேயே நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் வாழ்க்கை குறுகிய காலத்திலேயே கசந்து விட வாய்ப்புகள் அதிகம்.
வாழ்வில் எதிர்மறைகள், சவால்கள், தடைகள் இல்லாமல் இருக்க முடியாது. அவை நம்மை பலவீனமாக்குவதற்கு பதிலாக நம்மை பலமாக்கி வளர வைக்கும். நம்முடைய பலத்தை உணரச்செய்யும். வாழ்வில் எதிர்த்து போராடும் துணிச்சலை ஏற்படுத்தும். எதிரிகள் இருப்பதால் புதுப்புது சவால்கள் ஏற்பட்டு அதை தீர்க்க புதுப்புது யுக்திகளை பயன்படுத்தும்போது சுவாரஸ்யம் கூடுவதுடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் மாறுகிறோம். எனவே எதிரிகள் வாய்ப்பது நமக்கு நன்மைதான்.
எதிரிகள் இல்லாத வாழ்க்கை உப்பு சப்பற்றது. வாழ்வில் ஒரு சுறுசுறுப்போ, விறுவிறுப்போ இல்லாமல் மெத்தனமாக நகரும். வாழ்க்கையை நகர்த்துவதற்கு தேவையான மன உரத்தைத் தராது. எதிரிகள் இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மாயத்தோற்றம்தான். உண்மையில் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை நேர்மறையாக அணுகி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக கருதினால் வாழ்க்கை விறுவிறுப்பாக நகரும். வெற்றி என்னும் கோட்டையை அடைய வசைபாடும் எதிரிகள் அவசியம் தேவை.
எப்பொழுதும் உற்சாகத்துடன் இருக்க எதிரிகள் கண்டிப்பாக தேவை. நம்மை பட்டை தீட்டுவதற்கும், வாழ்வில் முன்னேறுவதற்கும் கொஞ்சம் எதிரிகள் கட்டாயம் தேவை.
எதிரிகள் இல்லாத வாழ்க்கை போரடிக்கும். சுவாரஸ்யம் இருக்காது. உண்மையிலேயே ஒருவர் கெட்டவராக இருந்தாலும் நல்லவராக இருந்தாலும் எதிரி இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. நம்மைச் சுற்றிலும் எல்லா வகையான மனிதர்களும் இருக்கிறார்கள். நம்முடைய செயல்பாடுகள் பிறருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது புரிதல் இல்லாமையால் எதிரிகள் உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிறார்கள்.
சில சமயங்களில் எதிரிகள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் நம் செயல்களாகவும் இருக்கலாம். எதிரிக்கு அடிப்படை உணர்வு கோபம். ஒரு பழமொழியே உண்டு. 'தீராக் கோபம் போராய் முடியும்' என்று! கோபத்தால் தான் எதிரிகள் உருவாகிறார்கள். மனிதன் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும், விடாமல் முயற்சி செய்து முன்னேறவும் போட்டி என்பது தேவை. நமக்கு போட்டியாக ஒருவர் இருந்து கொண்டிருந்தால் நமக்கு எப்பொழுதும் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் வந்துகொண்டே இருக்கும். எனவே எதிரிகள் இருக்கும் வாழ்க்கை சிறப்பாகதான் இருக்கும்.
எதிரிகளுடன் போராடி பெரும் வெற்றி நம்முடைய உண்மையான திறமையையும், செயலாற்றும் முறையையும் கூட அதிகப்படுத்தும். எதிரியே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குமென்றால் எந்தவித முன்னேற்றமும் இன்றி நம் பலம் நமக்குத் தெரியாமலே இருந்துவிடும்.