

Motivation articles: வாழ்க்கையில் பல நல்ல காரியங்கள் செய்து, அதற்கு நமக்கு முழுவதுமான மனதிருப்தி ஏற்படுவது இயல்பே. ஆனால், அந்த இயல்பு நிலை நாம் செய்யும்போது, பேசும்போது இப்படி பரவி இருக்க வேண்டும் என்பதும் மிகவும் அவசியம்.
ஒரு மரம் பல்லாயிரக்கணக்கான தீக்குச்சிகளை உருவாக்கும் தன்மைகொண்டது. ஆனால் ஒரே ஒரு தீக்குச்சி, ஒரு பெரும் காட்டையே அழிக்கும் வல்லமை கொண்டது. அந்த தீக்குச்சியை பிடித்த கரங்களை நாம் என்ன வென்று சொல்வது. அழிவு சக்தியின் தலைக்கனம் என்றுதானே.
அதேபோல்தான் நம் வாழ்க்கையும். ஆயிரம் வார்த்தைகளை தேன் தடவி அன்பாக பேசினாலும், ஒரு தீக்குச்சி செய்யும் அழிவு சக்தி போல், ஒரு வார்த்தை நெருஞ்சி முள்ளாய் குத்தினால், எல்லா உறவுகளின் வேர்களையும் அது அழித்துவிடும்.
வாழ்க்கையில் பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும் மனதில், நஞ்சு போல் விழும் வார்த்தைகளைத் தவிருங்கள். அதற்கு பொறுமை மட்டுமே பெருமை சேர்க்கும். எப்போதும் மனதைப் பூப்போல் வைத்து இருந்தால், உள்ளிருந்து வெளியே வரும் வார்த்தைகள் அனைத்தும் பூஞ்சோலை மலர்களாக மலரும்.
வாழ்க்கையில் எப்போதும் உங்களிடம் விசாலமான மனம் இருந்தால், நல்ல எண்ணங்கள் யாவும் மண் கோட்டையாக சரியாமல், மலைக் கோட்டையாக இருந்து, உங்களை பாதுகாத்து, முன்னேற்றம் காணும் செயல்களுக்கு உத்வேகம் கொடுக்கும்.
மேகங்கள் விண் நோக்கி எழும் போதுதான், அது மழை நீராக பூமிக்கு வருகிறது. அதைப்போல் மனம் பரந்து விரிந்து செல்லும் போதுதான், புதிய சிந்தனைகள் உருவாகி, கருவாகி பிரசவிக்கும். இதை புரிந்துகொண்டு, செல்லும் மனித வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
வாழ்க்கையில் பயணத்திலும், பேசப்படும் வார்த்தையிலும் சரி, கவனக் குறைவு இருக்கக்கூடாது. பயணத்தில் கவனக் குறைவு விபத்தில் முடியும். பேசப்படும் வார்த்தையில் கவனக்குறைவு மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். எனவே பயணத்திலும் வார்த்தையிலும் கவனச் சிதறல் தவிர்த்து வாழப்பழகுங்கள்.
வாழ்க்கையில் ஒழுக்கம் தவறினால், தன்நிலை மாறி, அது உங்கள் நல்ல வாழ்க்கையை முறியடித்துவிடும். அதுபோல்தான் உங்களிடமிருந்து வார்த்தைகள் கனலாக விழுந்தாலும் இருதலைக் கொள்ளி எறும்புபோல உங்கள் வாழ்க்கையும் ஆகிவிடும்.
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வெறுப்பை உமிழும் வார்த்தைகளை ஒருபோதும் உங்கள் உள்ளத்தில் எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இயற்கையின் இனிமை போன்ற வார்த்தைகளை பேசுங்கள். அதுவே சொல்லும் அதரமும், கேட்கும் செவியும் மகிழ்ச்சியான, நெகிழ்யான தருணங்களாக மாறும்.
வாழ்க்கையில் எவரொருவரும் நேரம் அறிந்து செய்யும் உதவிகள், அதனை பயன்படுத்திக் கொண்டவரின் மனதில் மறக்கப் படாத நினைவுகளாக இருக்கோ, அதேபோல் உங்களுடைய வார்த்தைகளும் நேரம் அறிந்து விதைத்தால், பல நல்ல காரியங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
வாழ்க்கையில் கொடுமையான செயல்களைவிட, வன்மத்தில் கக்கும் வார்த்தைகள் பல இதயங்களை குத்திக் கிழித்து, சாகடித்துவிடும்.
செய்யும் செயல்களுக்கு ஆற்றல் விதைத்தால் வெற்றி நிச்சயம். பார்வையில் கனிவு தெரிந்தால் மனிதம் பிறக்கும். அதேபோல் வார்த்தையில் தெளிவு பிறந்தால், பல நல்ல இதயங்கள் வாழ்த்தும்!