

வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நமக்கு கிடைத்தால் அதைவிட இந்த உலகத்தில் வேறு பாக்யம் எதுவும் கிடையாது என்பது நாடறிந்த உண்மை. பணம் இருப்பவன் கூட மகிழ்ச்சி இல்லையே என்று வருத்தப்படுவான். ஏனென்றால் மகிழ்ச்சி என்பது நிகழ்காலத்தின் பரிசு.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மனம் தெளிவு அடைந்த நீரோடையாக இருக்கிறது. அப்போது உள்ளத்தில் புதுப்புது சிந்தனைகள், தூய எண்ணங்கள் ஊற்றெடுக்கிறது. அந்த நேரத்தில் செயல் திறன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்குகிறது.
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டால், துன்பங்களின் நிழல் கூட உங்களிடம் அணுக விடாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். கவலைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த கிரியா ஊக்கிதான் மகிழ்ச்சி என்னும் ஆயுதம்.
வாழ்க்கையில் தகுதிக்கு ஏற்ப நம் மனதில் தோன்றும் விஷயங்களை ஆராய்ந்து செயல்படும் செயலுக்கு உறுதுணையாக எப்போதும் மகழ்ச்சி இருக்கும். நாம் அதனை இழந்துவிட்டால் அதற்கு சொந்தத் தவறுகளேதான் காரணமாக இருக்குமே தவிர, வேறொன்றும் காரணம் இருக்காது.
வாழ்க்கை என்பது நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளோம் என்பதில் மட்டும் அளவுகோல் இல்லை. நம் செயலால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதிலும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால், இரட்டிப்பு மகிழ்ச்சி மனம் சூடும்.
இன்றைய சக்தி வாய்ந்த உலகத்தின் முன், நம்மால் எந்த ஒரு மாற்றமும் காணமுடியவில்லையே என்று நினைத்து, வருத்தப்படாமல், யதார்த்தமான உண்மைகளை அறிந்து, சூழ்நிலைக்கு ஏற்ப நம் வாழ்க்கை பயணம் தொடர்ந்தால், மகிழ்ச்சி கடலில் மூழ்கி, எந்த நேரத்திலும் முத்துக்கள் எடுக்கலாம்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்னும் உணர்ச்சி நம்மிடையே இல்லாத போது, சிறு சிறு சுமைகள் கூட நம் மனதுக்கு பெரிய சுமையாக இருப்பது போல் தோன்றும். அதனால் எந்த இடத்திலும் மகிழ்ச்சி இழந்து விடாதீர்கள். மகிழ்ச்சி உடையார் என்றும் இகழ்ச்சி அடையார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் தொடக்க புள்ளி. அதன் மையத்தில் உருவாகும் எண்ணங்கள் பன்மடங்கு வலிமை கொண்டதாக இருக்கும். அந்த மனவலிமையே வாழ்க்கையில் சாதிக்கும் முதன்மை காரணமாக இருக்கும். அதனால் வெற்றிச் சிகரங்களைத் தொட்டவர்கள் எந்த சூழலிலும் சலித்துக்கொண்டதே இல்லை. எந்த நேரமும் நிறைந்த ஈடுபாட்டோடும், உற்சாகத்தோடும் செயல் ஆற்றும் திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த மனிதர்களாக இருக்கிறார்கள்.
மகிழ்ச்சிமிகு செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் சுரங்கம். மகிழ்ச்சியின்றி எந்த மாபெரும் சாதனையும் நடந்ததில்லை என்றார் தத்துவமேதை எமர்சன். ஆகவே மலர்களில் வாசனை இரண்டறக் கலந்து இருப்பதுபோல், நம் மனதோடு மகிழ்ச்சியை இரண்டறக் கலந்து செயலாற்றுவோம்.
வாழ்க்கையில் நம்மிடையே இல்லாததை அல்லது கிடைக்காததை நினைத்து வருந்தாமல், இருப்பது எல்லாமே நமக்கு இறைவன் கொடுத்த அட்சய பாத்திரம் என்ற மகிழ்ச்சியோடு, வாழ்ந்து காட்டினால், இல்லறமும் நல்லறமாகும்.
மனித மனங்களில் பூப்பது புன்னகை மட்டுமே என்பதை உணர்ந்து, நாளைய விடியல் பொழுதில் புதுப்புது சிந்தனைகளை சிந்தித்து, அந்த எண்ணங்களை மகிழ்ச்சியோடு செயலாற்றுங்கள். வாழ்க்கையில் வெற்றிக்கனியை பறித்து வாகை சூடுங்கள்!