
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு மனிதன் பணத்தை தாண்டி அதிகமாகத்தேடி அலைவது நிம்மதியைத்தான். இது நேரடியாக கண்ணால் காணமுடியாவிட்டாலும் மனதால் அனுபவிக்க கூடிய ஒரு உச்சபட்ச மகிழ்ச்சியின் அளவாகவே பார்க்கப்படுகிறது.
நம்முடைய வாழ்க்கையில் நிம்மதிக்காக பல்வேறு தேடல்களை மேற்கொள்கிறோம். அதில் ஒன்றுதான் அதிகமாக பயணங்களை மேற்கொள்வது. பயணத்தை விரும்பாதவர்களை இல்லை எனும் அளவிற்கு நாம் ஒவ்வொருவரும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கிறோம்.
அப்படியானால் நம்முடைய வாழ்க்கையில் இந்த பயணங்கள் நிம்மதியை கொடுக்குமா? என்று கேட்டால் முழுமையாக ஆம் என்று பதில் சொல்லிவிட முடியாது. நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.
1. உல்லாசம். 2.ஆனந்தம். நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்காகவும் மனதை லேசாக வைத்துக் கொள்வதற்காகவும் நாம் பல்வேறு இடங்களை தேடித் தேடி பயணப்படுகிறோம். இதைத்தாண்டி டிவி, சினிமா என பல்வேறு பொழுது போக்குகளையும் மேற்கொள்கிறோம். இவையெல்லாம் உல்லாசத்தின் வரிசையில் சேரக்கூடியவை. இவ்வாறான செயல்களின் மூலம் நம்முடைய பிரச்னைகளை தற்காலிகமாக மறக்க முடியுமே தவிர அதிலிருந்து முழுமையாக விடுபட முடியாது.
நம்முடைய செயல்களின் மூலம் இரண்டாவதாக நமக்கு கிடைக்கக்கூடியதுதான் ஆனந்தம். ஆனந்தம் என்பதும் முழுமையான மனநிறைவையும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கக் கூடியது. ஆனால் அதனை அவ்வளவு எளிதில் அடைந்து விட முடியாது. அதற்காக மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும், அதனை நம்முடைய செயல்களின் வாயிலாகத்தான் அடைய முடியும். எனவே, முடிந்த வரை நம்மை சுற்றி இருப்பவர்களிடம் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், பிறருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்றல் என நம்முடைய செயல்களின் மூலமாகத்தான் உண்மையான மனநிம்மதியை அடையமுடியும்.
உல்லாசம் என்பது அனுபவிக்கும் அந்த நேரத்தில் மட்டுமே இன்பத்தை கொடுக்க கூடிய ஒன்றாகும். ஆனால் ஆனந்தம் என்பது நாம் அதனை நினைக்கும் போதெல்லாம் நம்மால் ஒரு மன நிறைவை அனுபவிக்க முடியும். உல்லாசத்தை ஆங்கிலத்தில் fun என்று சொல்கிறோம். ஆனந்தத்தை ஆங்கிலத்தில் Happiness என்கிறோம். மேலும் நாம் மேற்கொள்ளும் நல்ல செயல்கள் நம்மை எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களுடனே பயணிக்க வைக்கும்.
இவற்றையெல்லாம் தாண்டி நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போவதற்கு போலியான புனைவுகளும் ஒரு காரணம். மிகவும் புகழ்பெற்ற ஒரு திரைப்பட நடிகரை பார்க்கும் பொழுது அவர் மிகவும் சந்தோஷமாகவும், ஆடம்பரமாகவும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதாக நமக்கு தோன்றுகிறது. எனவே நாமும் அந்த இடத்தை அடையவேண்டும் அந்த அளவுக்கு புகழ் பெறவேண்டும் என நாம் பல நேரங்களில் ஏங்குகிறோம்.
ஆனால் உண்மையில் அந்த புகழ்பெற்ற நட்சத்திரமோ நாம் சாதாரணமாக பின்பற்றும் அன்றாட பழக்க வழக்கங்களை கூட உரிய நேரத்தில் செய்ய முடியாதவராய் இருக்கக்கூடும். நாம் தெருக்களில் நடந்து போவதைப்போல சாதாரணமாக நடந்து போகும் சுதந்திரத்தை கூட அனுபவிக்க முடியாதவராய் அவர் சிறைகளுக்குள் அடைப்பட்டு கிடக்கக்கூடும் என்பதை நாம் பல நேரங்களில் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
எனவே நம்மிடம் இருக்கும் பணம், பொருள் இவையெல்லாம் நாம் வசதி வாய்ப்புடன் வாழ்வதற்கு உதவுமே தவிர வாழ்வில் நிம்மதியை அடைவது என்பது நிச்சயம் நம்முடைய நல்ல செயல்களால்தான் முடியும்!