
'செய்யும் தொழிலே தெய்வம்' என்று கூறுவார்கள். அதாவது நமது தொழிலில் தரம், உண்மை, நேர்மை போன்றவைகளைப் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டும். உற்பத்தி அளவு, லாபம் போன்றவற்றைப் பற்றிக் குறைவாகச் சிந்திக்கவேண்டும்.
யாராடா இவன் பைத்தியக்காரன். லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்துவிட்டு லாபத்தைப் பற்றியும், உற்பத்தி அளவைப் பற்றியும் குறைவாகச் சிந்திக்க வேண்டும் என்று அறிவுரைகளை அள்ளி வீசுகிறானே' என்ற எதிர்மாறான கருத்துக்கள் உங்களுக்குள் ஏற்படும்.
ஆனால் கொஞ்சம் பொறுமையாக இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
அதாவது நீங்கள் ஒரு சோப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனைத் தொடங்குவதற்கு லட்சம் அல்லது கோடியில் நீங்கள் பணத்தை முதலீடு-செய்திருக்கலாம், அந்தப் பணத்தை நகைகளை அடகு வைத்தோ, வங்கியில் கடன் வாங்கியோ, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியோ பெற்றிருக்கலாம். எனவே உங்கள் நோக்கம் விரைவாகச் செயல்பட்டு, லாபம் சம்பாதிக்க வேண்டும், விரைவில் கடனை அடைக்கவேண்டும் என்பதாக இருக்கும். அதற்காக உற்பத்தியை எந்த அளவிற்கு அதிகரிக்க முடியுமோ அந்த அளவிற்கு அதிகரிக்க வேண்டும் என்று உங்கள் உள்ளம் துடிக்கும். இதில் தவறு கிடையாதுதான்.
ஆனால் நீங்கள் தயாரிக்க இருப்பது சோப். மக்களுக்கு தினசரி தேவைப்படும் ஒரு அத்தியாவசியப் பொருள் இது. அதே நேரத்தில் வெளிச்சந்தையில் இன்று இருக்கும் சோப்புகள் ஏராளம். அவற்றுடன் போட்டி போட்டு நீங்கள் உங்கள் தயாரிப்பை விற்பனைக்கு அனுப்பப் போகிறீர்கள். லட்சக்கணக்கான சோப்புகளைத் தயாரித்துவிட்டால் மட்டும் போதாது, அதனை விற்பனையும் செய்யவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு உண்மையான வருமானம் வரத்தொடங்கும்.
இவ்வாறு விற்பனை செய்வதற்கு நீங்கள் தயாரித்த சோப் நல்ல தரமாக இருக்க வேண்டும் .விலை மலிவாக இருக்க வேண்டும். சிறப்பான விளம்பரம் செய்திருக்க வேண்டும். முகவர்களை நியமிக்க வேண்டும் அனைத்துக் கடைகளிலும் உங்கள் பொருள் விற்பனைக்காக சந்தைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பொருளை அதிகளவில் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்பி முன்வர வேண்டும். இத்தனை சமாச்சாரங்களும் நடந்தபின்னரே நீங்கள் நல்ல லாபம் எதிர்பார்க்க முடியும்.
ஆனால் நிறைய இளைஞர்கள் இதனை எல்லாம் முழுமையாகச் சிந்திக்காமல், எடுத்த எடுப்பிலேயே கணிசமாக லாபம் பார்த்துவிட வேண்டும் என்று வேகப்படுகிறார்கள். அவர்களுக்கு இத்தனை சிரமங்கள் இருப்பது தெரியும். ஆனால் அதில் முழுமையான நம்பிக்கை வைக்க மறுப்பதன் காரணமாகவே இந்த அவசர நிலை.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு அரைவேக்காட்டுத்தன செயல்களும் மற்றவர்களைவிட உங்களையே அதிகம் பாதிக்கிறது. மற்றவர்கள் முன் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்படுவதால் அங்கு உங்கள் சுயமரியாதையை இழந்து விடுகிறீர்கள். இந்தச் சமுதாயத்தில் உங்களைப் பற்றி இருந்த உயர்வான அபிப்பிராயங்கள் நொடிப்பொழுதில் நொறுங்கி விடுகின்றன. உங்கள் சொல்லுக்கு எந்தவித மதிப்பும், செல்வாக்கும் இல்லாமல் போய்விடுகிறது
சிலர் ஆரம்பக் காலங்களில் மிகவும் நேர்த்தியானவர் களாகவும், தரத்தில் மிகுந்த அக்கறை உடையவர் களாகவும், எதிலும் முதல் தரத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என்ற எண்ணமும், உறுதியும் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அப்புறம் மெல்ல மெல்ல இதிலிருந்து தடம்புரளத் தொடங்கு கிறார்கள். அவர்களது இந்த வகையான நடவடிக்கைகள் தொழிலை நஷ்டத்தில் தள்ளிவிடுகிறது.
ஆகவே, தரத்தில் என்றும் சமரசம் செய்யாமல் வாழ்வில் முன்னேறுங்கள்.