
ஒரு மிகச்சிறந்த நாடு. அந்தநாட்டின் பிரதம மந்திரி இறந்துவிட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். மிகச்சிறந்த அறிவாளியைத்தான் பிரதமராக நியமிக்க ஆட்சிப் பொறுப்பாளர்கள் விரும்பினார்கள்.
பல்வேறு விதத்தில் சிலரை 'மதிப்பீடு' செய்தார்கள், முடிவில் இறுதிகட்டத் தேர்வில் 3 பேர் தேர்வு செய்யப் பட்டார்கள். இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்தார்கள். மூன்று பேரையும் ஒரு தனி அறையில் வைத்து உட்புறமாக பூட்டினார்கள். அறையின் கதவில் நம்பர் பூட்டு பொருத்தியிருந்தார்கள்.
இந்தக் கதவிலுள்ள பூட்டின் மூன்று எண்களை ஒன்று சேர்த்தால் பூட்டை நீங்கள் திறந்து வெளியே வரலாம். பூட்டைத் திறந்து யார் முதலில் வெளியில் வருகிறாரோ அவர்தான் நாட்டின் பிரதம மந்திரியாக தேர்ந் தெடுக்கப்படுவார்" -என்று போட்டி நடத்தியவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். பின்னர், கதவைப் பூட்டிவிட்டார்கள்.
போட்டியில் கலந்துகொண்ட 3 பேரில் இரண்டுபேர் தீவிரமாக சிந்தித்து தன் சட்டைப்பையில் இருந்த பேப்பரை எடுத்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? இந்த நம்பரா? அந்த நம்பரா? என்றெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தினார்கள். மூன்றாவது போட்டியாளர் எதையும் சிந்திக்கவில்லை. கதவை ஓங்கித்தட்டினார். பூட்டப்படாத அந்தப் பூட்டு உடனே திறந்துகொண்டது. கதவைப்பூட்டாமலே போட்டி வைத்தார்கள். தைரியமுடன் கதவைத் திறந்து வெளிவந்தவருக்கு பிரதம மந்திரி பதவி தானாக வந்தது.
கதவு பூட்டப்பட்டிருக்கிறதா? என்பதைக்கூட சரிபார்க்காமல் பிரச்னையைப் பற்றியே சிந்தித்தவர்களைவிட, பிரச்னையை நேரடியாக சந்தித்தவர் வெற்றியடைந்தார். இதைப்போலத்தான், இல்லாத பிரச்னைகளைப்பற்றி அதிக நேரம் சிந்தித்து மனம் கலங்குவதைவிட பிரச்னைகளை சந்திக்க எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிகள்கூட எளிதில் நம் வசமாகிவிடும். தொடர்கதையாகும் தோல்விகளைத் துரத்த இயலும்.
பிரச்னைகளை கண்ணுக்கு அருகில் வைத்து பார்ப்பதைவிட தொலைதூரத்தில் வைத்து பார்க்கும்போது மிகச்சிறியதாக தெரியும். அப்போது அதன் தாக்கத்தை நம் மனதிற்குள் வைக்காமல் தீர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கினால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும்.
மாறாக நம் அருகில் பிரச்னைகளை வைத்து பார்க்கும்போது நம் உடலும் மனமும் பலவீனமடைந்து பிரச்னைக்கான தீர்வு கிடைப்பது காலதாமதப்படும்.
ஆகவே, பிரச்னைகளை ஒரு பிரச்னையாக கருதாமல் மனம் சஞ்சலப்படாமல் நேரிடையாக எதிர் கொள்ளும்போது தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து தீர்வு கிடைத்து வெற்றிபெற வழி வகுக்கிறது.