
எப்பொழுதுமே பேச்சு என்பது அளவோடு இருக்கவேண்டும். அதிகமான பேச்சு பிரச்னைகளை உண்டுபண்ணும். நாம் பேசும் பேச்சு மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகப் பேசுவது நம் ஆற்றலை வீணடிப்பதுடன், நாம் செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். அளவோடு பேசுவதே வளமோடு வாழ வழி செய்யும்.
தேவையற்ற பேச்சு நம் ஆற்றலை வீணடிக்கும். அதுவே குறைவாகப் பேசும் பொழுது நம் ஆற்றல் சேமிக்கப்பட்டு, நம் கவனம் முழுவதும் வேலையில் சென்று நாம் எண்ணியதை சிறப்பாக செய்து முடிக்க முடியும். அத்துடன் நாம் பேசும் பேச்சு பயனுள்ளதாக இருக்க வேண்டும். எதிர்மறையான பேச்சு கூடாது. நேர்மறையாக சிந்திக்கவும், பேசவும், செயலாற்றவும் தொடங்கினால் நம் சுயமரியாதை மேம்படுவதுடன், மற்றவர்களும் நம்மிடம் பேசுவதற்கும், பழகுவதற்கும் விருப்பப்படுவார்கள்.
பேச்சை குறைக்க, பிரச்னைகள் குறையும். சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட மற்றவர்கள் நம்மை நம்புவதற்கும், தங்களுடைய ரகசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வதற்கும் வழி வகுக்கும். நம் கருத்துக்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுடன் சிறந்த உறவை உருவாக்கிக் கொள்ள முடியும். நம் வீட்டு பெரியவர்கள் கூட நாம் அதிகம் பேசும் பொழுது, பேச்சுதான் அதிகம் இருக்கு; செயலில் ஒன்றும் காணோம் என்று சொல்வதைக் கேட்டிருப்போம். எனவே வாய்ச்சொல்லில் வீரனாக இல்லாமல் அளவோடு பேசி வளமோடு வாழ முயற்சி செய்வோம்.
பேச்சைக் குறைப்பதன் மூலம் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, மனம் தெளிவடைந்து அமைதியைப் பெறலாம். இது நம் மனநல மேம்பாட்டிற்கு உதவுவதுடன் தேவையற்ற சிக்கல்களையும், தவறான புரிதல்களையும், கருத்து வேறுபாடுகளையும் குறைத்து நல்லுறவுகளை வளர்க்க உதவும். எப்பொழுதுமே நாம் பேசும் பேச்சில் கவனம் அவசியம். பேச்சு குறையும் போது நம்மை நாமே கூர்ந்து கவனிக்க முடியும். இந்த செயல் நம் சுயவிழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும்.
சில சமயங்களில் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்போம். திடீரென பேச்சு முற்றி வாக்குவாதம் ஏற்படும். சில சமயங்களில் சண்டைகள் கூட வந்துவிடும். வார்த்தைகள் தடித்து ஒருவருக்கொருவர் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள நேரிடும். எனவே எப்பொழுதுமே பேச்சில் கவனம் வைப்பது மிகவும் அவசியம். பேச்சு திசை மாறுவது தெரிந்தால் மெள்ள அந்த இடத்தை விட்டு விலகி விடுவது நல்லது. அது முடியாத பட்சத்தில் அமைதிகாப்பது மிகவும் சிறந்தது.
சிலர் மனதில் ஒன்றையும் வைத்துக்கொள்ளாமல், தோன்றியதையெல்லாம் வெளிப்படையாக பேசும் குணமுள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் மனதளவில் நிறைய காயப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதிகமாக பேசி தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பதைவிட பேச்சை குறைத்து நம் மதிப்பை உயர்த்திக்கொள்ளலாம்.
பேச்சைக் குறைத்தால் பிரச்னைகள் குறையும். உண்மைதானே நண்பர்களே!