

வாழ்க்கையில் நாம் செய்யும் எல்லா காரியத்திலும் கவனமாக இருப்பது அவசியம். அப்போதுதான் நமக்கு தெளிவான அணுகுமுறையும், சிறந்த செயல்திறனும் காணமுடியும். அதில்தான் புரிதலும் நம்பகத்தன்மையும் நம்முள் எழும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
நம்மை நாமே முதலில் புரிந்துகொள்ள முற்பட்டால், செய்யும் செயல் உணர்வுபூர்வமாகவும், மனதில் நம்பகத்தன்மையும் உருவாகி, எளிதாக எதிர்கொள்ள நமக்கு உதவியாகவும் உறுதியாகவும் இருக்கும். அதனால் நாம் நம்மை துல்லியமாக அறிந்துகொண்டு செயலாற்ற முற்ப்படுவோம்!
நாம் முழு ஈடுபாட்டுடன் செயற்படும் எந்த செயலும், நமக்கு பின்னடைவை தராது. ஏனெனில் நம்மிடையே அபரிமிதமான உற்சாகம் ஏற்படும் தருணம் அதிகமாக நம்முடன் ஆட்கொண்டு, நம்முடைய முழு திறமையும் வெளிக்கொணரும் விதத்தில் தூண்டுதலாக அமையும். அந்த நிகழ்வு, நம்மை மேலும் முன்னோக்கி நகர்த்த காரணமாக இருக்கும்.
நாம் முன்னின்று செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை முதலில் மனதில் நிறுத்திக் கொள்வோம். அப்போதுதான் அந்த செயலுக்கான முழு கவனமும், அக்கறையும், ஆர்வமும் நம்மிடையே இருக்கும் என்பதை உணரமுடியும்.
வாழ்க்கையில் எந்த இடத்திலும் மற்றவர்களுடன் வீண் சச்சரவுக்கு போகாமல், முடிந்தவரை எப்போதும் எல்லோரிடமும் எந்த தருணத்திலும் இணக்கமான போக்கையே நாம் கடைபிடிக்கும் வழக்கத்திற்கு, நம்மை தயார்படுத்திக்கொள்ள முயற்சி செய்வோம். நம்முடைய மனநிலை எப்போதும் சூழ்நிலை அறிந்து செயலாற்றும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.
நம் குறிக்கோள் எப்போதும் வெற்றியின் இலக்கை நோக்கியே இருக்க வேண்டும். அந்த நெடியப் பாதைக்கான வழியில் பயணிக்க எத்தனிக்கும் திடமான நம்பிக்கையே, நம்மை எதிர்கால வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் காரணிகள். அதுவே வெற்றிக்கான அடையாளம் என்று நினைத்து, முயல்வதே நம் தார்மீக பொறுப்பு என்று நினைப்போம்.
உழைப்பில் வாழும் வாழ்க்கை உயர்வானது. அந்த தத்துவத்தை உணர்ந்து வாழும் வாழ்க்கை சிறப்பானது. மனிதனாக பிறந்த எவருக்கும் இது பொருத்தமானது என்பதை உணர்ந்து, நம்முடைய உழைப்பை விதைத்து, உன்னதமாக வாழும் நெறிமுறைகளை பின்பற்றி வாழ்க்கையில் தடம் பதிப்போம்.
சிற்பங்களைப் பார்க்கும்போது நாம் நம்மையும் அறியாமல் ரசிக்கிறோம். இறைவன் விக்ரமாக இருந்தால், தன்னையும் அறியாமல் தலை குணிந்து வணங்குகிறோம். இதன் பின்னால், சிற்பியின் அதீத ஈடுபாடும், உழைப்பும் இருக்கு என்பது நிதர்சனமான உண்மை என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
ஓவியங்கள் நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. அதுவும் இயற்கை ஓவியமாக இருந்தால், அதனுடன் அப்படியே ஒன்றி விடுகிறது நமது மனம். அது ஓவியரின் உள்ளத்தில் எழுந்த உன்னதமான உணர்வுகளில் தோன்றிய உழைப்பின் வெளிப்பாடு.
இப்படிபட்ட மனிதர்கள் உள்ளத்திலும் உணர்வுகளிலும் இரண்டறக் கலந்து, நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து விடுகின்றனர். காலத்தால் அழியாத புகழை சேர்க்கும் கல்கியின் வரலாற்று புதினங்ளுக்கு இணையாக கலை நயத்துடன் வரையப்பட்ட ஓவியங்களும் நம் கண்களில் நீங்காத இடம் பிடித்தன.
நாமும் வாழும் காலம் தனித்துவமான பணிகளை மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்றி, தனி முத்திரை பதித்து, வாழ்ந்து காட்டுவோம்.