
"உங்களை வேறுவிதமாகத் தொடர்ந்து மாற்ற முயற்சி செய்யும் உலகில் நீங்களாகவே நிலைத்திருப்பது மிகப்பெரிய வெற்றி.“ —Ralph Waldo Emerson.
அவரவர் பார்வையிலும், அவரவர் சூழ்நிலையிலும், வளர்ப்பு விதங்களிலும் வெற்றியின் பார்வை குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிறைய இருக்கும். ஆனால் எங்கிருந்தாலும், எந்த மதம் எந்த மொழி, எந்த இனம் என்ற அத்தனை வேறுபாடுகளையும் தாண்டி வெற்றிக்கு அடிப்படையாக அனைவரும் சொல்வது நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான்.
இந்த உலகில் ஏகப்பட்ட காரணிகள் உள்ளது. நமது சுய ஒழுக்கத்தையும் நமது எண்ணங்களையும் மடைமாற்ற வைக்க. தனிமனித ஒழுக்கம் என்பது வெற்றிக்கு மிக முக்கியமான ஒன்று இந்த ஒழுக்கத்தை மீறியவர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக அல்லது எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும் அவர்களின் வெற்றி பேசப்படுவதைவிட அவர்களின் ஒழுங்கீனமே அதிகம் மக்களால் பேசப்படும்.
இதனால் பெற்ற வெற்றிகளின் மதிப்பு குறையாது எனினும் அவர்மேல் இருக்கும் மதிப்பு சற்றேனும் குறையும்.
ஒரு வெற்றுத்தளை எடுத்துக்கொள்வோம். அதில் ஏதேனும் ஓரிடத்தில் சிறு புள்ளி ஒன்றை கருப்பு மையினால் வைத்து பக்கத்தில் உள்ளவர்களிடம் காண்பித்து இதில் என்ன தெரிகிறது என்று கேட்டால் அவர்கள் அத்தனை பேரும் ஒரு சிறிய கருப்பு புள்ளி தெரிகிறது என்றுதான் சொல்வார்கள். பளிச்சென்ற வெள்ளைக் காகிதம் ஏன் அவர்களை கண்களுக்கு தெரியவில்லையா? தெரிந்தாலும் நாம் அதை பெரியதாக நினைப்பதில்லை அதுதான் உண்மை. நம் கண்களைக் கவர்வது அந்த சிறு கருப்புப் புள்ளிதான். அதே போல்தான் நாம் எவ்வளவு பெரிய வெற்றி அடைந்து இருந்தாலும் நமது ஒழுங்கீனம் கருப்பு புள்ளியாக மக்களிடத்தில் பெரிய அளவில் பேசப்படும்.
உதாரணமாக வினோத் காம்ப்ளி எனும் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரை சொல்லலாம். சமீபத்தில் அவரைப் பற்றிய செய்திகள் மக்களிடையே பெரிதாக பேசப்படுகிறது. காரணம் அவரது மதுப்பழக்கம் என்கிறார்கள்.
1993 ஆம் ஆண்டில் தனது சர்வதேச கிரிக்கெட் கரியரைத் தொடங்கி 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1,084 டெஸ்ட் ரன்கள் மற்றும் 2,477 ஒருநாள் ரன்களைச் சேர்த்துள்ளார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காம்ப்ளி, தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் பல சதங்களைப் பதிவு செய்தார். இது போன்ற பல சாதனைகளை செய்த இந்த வீரர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சாதனை புரியத் தவறிவிட்டார். அவர் அவராக இருக்காமல் விதி மீறிய வேறு சூழலில் சிக்கிவிட்டார். அவர் நினைத்திருந்தால் ஒருவேளை அதிலிருந்து மீண்டு வந்திருக்கலாம்.
நாம் கவனமாக இருப்போம். எதிலும் சிக்காமல் நாமாகவே இருந்து வெற்றியை தக்கவைத்துக் கொள்வோம்.