
தங்கள் முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டும் சிலருக்கு வெற்றி கிடைக்காது. அதற்கு காரணம் ஆறு முக்கியமான தடைகள் ஆகும். அவற்றை எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வெற்றிக்கு தடையாக இருக்கும் ஆறு விஷயங்கள்;
1. எதிர்மறையான சுயபேச்சு;
சிலர் எப்போதும் தன்னைப் பற்றிய எதிர்மறையான சுயபேச்சில் ஈடுபடுவார்கள். இது அவர்களின் குறைபாடுகளை வலியுறுத்துகிறது. தான் வெற்றி பெற தகுதியற்றவர், இதற்கெல்லாம் லாயக்கில்லை என்று மனதிற்குள்ளாக சொல்லிக் கொள்வார்கள். நாளடைவில் இந்த எண்ணம் வலுப்பெற்று தன் மேல் இருக்கும் சுயமரியாதை குறைந்து போகும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கும் புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கும் அவர்களது நம்பிக்கை இடம் கொடுக்காது. இவர்கள் நேர்மறையான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு தன்னைப் பற்றிய தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொண்டு எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொள்வது மிக அவசியம்.
2. தோல்வி பயம்;
இது ஒரு சக்தி வாய்ந்த உளவியல் தடையாகும். அபாயங்களை எதிர்கொள்ளவும் சவால்களை சந்திக்கவும் அஞ்சி, இவற்றால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்கிற ஒரு எதிர்மறை சிந்தனையை மனதிற்குள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
பெரும்பாலும் இவை கடந்த கால எதிர்மறை அனுபவங்களின் மூலம் பெறப்பட்டிருக்கும் தோல்வியைப் பற்றிய விளைவுகளில் அதிக கவனம் செலுத்தும் போது, அது தற்போதைய செயல்பாட்டை தடுத்து சவால்களை எதிர்கொள்ள விடாமல் செய்துவிடும். இந்த முடக்கம் உறுதியின்மை அல்லது தள்ளிப்போடுதல் போன்ற செயல்களுக்கு வழிவகுக்கும். எனவே தோல்வி பற்றிய கண்ணோட்டத்தை ஒருவர் மாற்றிக் கொள்வது மிக அவசியம்.
3. தெளிவான இலக்குகள் இல்லாமை ;
ஒருவர் தனக்கு என்ன வேண்டும், தன்னுடைய இலக்குகள் என்ன என்பது பற்றிய தெளிவான வரையறை இல்லாமல் இருப்பது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாகும். ஒரு இடத்திற்கு போய் சேர வேண்டும் என்றால் தெளிவான முகவரி இல்லாமல் போய் சேர முடியாது. தன்னுடைய இலக்கு அடையக்கூடியதாக, தெளிவானதாக இருக்க வேண்டும். மேலும் அவற்றை அடைவதற்கான காலக் கெடுவையும் நிர்ணயித்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
4. தள்ளிப் போடுதல்;
கடினமான பணிகளை எதிர்கொள்ளும்போது சிலர் அவற்றை எதிர்கொள்ள அஞ்சி செயல்களை தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் இதனால் அதிகரித்த பதட்டம் மற்றும் குற்ற உணர்வுக்கு ஆளாக நேரிடுகிறது. இதைத் தவிர்க்க பயனுள்ள நேர மேலாண்மைத் திறன்களை கையாள வேண்டும். ஒரு பட்டியலிடப்பட்ட அட்டவணையை உருவாக்குவது அவசியம். பணிகளை சிறிய பகுதிகளாக பிரித்துக் கொண்டு அவற்றை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
5. நச்சு உறவுகள் (டாக்ஸிக் ரிலேஷன்ஸ்);
நண்பர்கள் குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களில் சிலர், நம்பிக்கையை விதைப்பதற்கு பதிலாக எதிர்மறையான எண்ணங்களை பரப்புதல், அவநம்பிக்கையான பேச்சு, ரிஸ்க் எடுப்பது அவசியம் இல்லாதது என்று அச்சமூட்டுவது, ஒருவருடைய செயல்களை விமர்சிப்பது, இழிவு படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இப்படிப்பட்ட ஆட்களை தங்கள் வாழ்வில் இருந்து விலக்கிவிட்டு தனது இலக்குகளையும் நோக்கி செயல்பட வேண்டியது அவசியம். இவர்களை குறிப்பிட்ட எல்லையில் நிறுத்துவது மிக முக்கியம்.
6. மாற்றத்தை எதிர்கொள்ள தயங்குதல்;
புதிய சூழ்நிலைகள் புதிய சவால்கள் போன்றவற்றை எதிர்கொள்ள தயங்கி நின்றால் ஒருவரால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது. படைப்பாற்றல் மற்றும் புதுமை என உத்திகளை தெரிந்து கொள்ள முடியாமலே போகலாம். புதிய திறன்களை கற்றுக் கொள்வதும், நெகிழ்ச்சியான மனநிலையை கொண்டிருப்பதும், மாற்றத்தை எதிர்கொள்வதும் முக்கியம்.