
மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் பேராற்றல். அதனை உணர்வதன் மூலம் மனிதனால் தன்னையே உணர இயலும். உங்கள் உணவை நீங்களே சமைக்கிறீர்கள். உங்கள் ஆடைகளை நீங்களே தூய்மை செய்கிறீர்கள். இவையெல்லாம் உலகியலில் அங்கங்கள். இவற்றைச் செய்யாமல் வாழமுடியாது. ஒவ்வொரு மனிதரும் உலகியலில்தான் எந்த விதத்தில் ஈடுபடவேண்டும் என்பதை சுயவிருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார்.
உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதைச் செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனி மனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். இதில் சிலர் தானாக எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதெல்லாம் பார்த்து அதுபோல் செய்ய முற்படுகிறார்கள்.
தான் என்ன செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வோ தெளிவோ அவர்களிடம் இல்லை. இத்தகைய ஒரு சிலர் ஆன்மிக வழியில் செல்பவர்களைப் பார்த்து "இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள். உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்" என்று புகார் சொல்கிறார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும் மட்டுமே இயக்குபவர்கள் தனக்காக வாழ்பவர்கள். தனது சொந்த நலனுக்காக என்று வந்து விட்டு அந்த வலையிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவர்கள் ஆன்மிகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து வாழத் தெரியாதவர்கள் என்று சொல்கிறார்கள்.
ஒரு குடிகாரன் தள்ளாடியபடியே பேருந்துக்குள் ஏறி எல்லாருடைய கால்களையும் மிதித்து தடுமாறி ஒரு கிழவியின் மேல் விழ அந்த கிழவி "நீ நரகத்திற்குப் போவாய்" என்று சபித்தார்.
உடனே அவன் அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன் என்று கூறி கீழே இறங்கினான். எது சரி, எது தவறு என்பதெல்லாம் குடிகாரர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்வை விதம் விதமான சிக்கல்களுக்கு உட்படுத்திக் கொண்டு சூழ்நிலை கைதிகளால் வாழ்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டுப் பயணம் செய்பவர்களைப் பார்த்து "இவர்கள் தவறானவர்கள்" என்று பேசுகிறார்கள்.
இன்றைய உலகில் ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுப்பவர் சிலர் தான் பெரும்பாலானோர் இயந்திர வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இதில் 50 சதவீத மக்களை ஆன்மிக நெறியில் ஈடுபடுத்தினால் உலகம் காப்பாற்றப்படும். சிறிது கூட விழிப்புணர்வு இன்றி தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மற்றவர்கள் செய்வதை யெல்லாம் செய்ய முற்படுபவர்கள் பூமிக்கு சேதம் விளைவிக்கிறார்கள்.
தன்னலம் மிக்க சிலரது அடாவடிச்செயல்கள் உலகில் தீமைகளை விளைவிக்கிறது. மனிதகுலம் நாகரீகம் அடைந்தாலும், எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சில சமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனித குலம் நன்மையடையவில்லை.
மனிதன் வெளிச்சூழலை சரிசெய்ய விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் உள் தன்மையில் நாகரீகமடையவில்லை. உள் நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர் நிலையை அடைய இயலும். இதற்கு யோகா தியானம் வழி வகுக்கும்.