
உண்மையில் சட்டங்களும் போதனைகளும் உலகை சுத்தப்படுத்துவதற்குப்பதில் அசுத்தப்புடுத்துகிறது. தன் கணவனின் குடிப்பழக்கத்தை மாற்ற விரும்பிய மனைவி அவன் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவில் ஒரு புழுவைத் தூக்கிப்போட்டாள்.
புழுசெத்து மிதந்தது. "பார்த்தாயா, மதுவால் உனக்கு என்ன நேரும் என்று புரிகிறதா? "என்றாள் மனைவி. "ஓ, புரிகிறது. மது குடித்தால் புழு பூச்சி உடம்பில் சேராது" என்றான் கணவன். நீங்கள் என்னதான் போதனை செய்தாலும் அதைத் தனக்கு திருத்தி தன்னையே ஏமாற்றிப் கொள்ளவும் சாமர்த்தியம் மனிதனிடம்தான் இருக்கிறது.
விதிமுறைகள் சமூகத்துக்கு மட்டும்தான் எனக்கில்லை என தன்னை விலக்கி வைக்கும் பார்வைதான் பெரும்பாலோர் இடத்தில் காணப்படுகிறது. ஒரு தாயின் மூன்று பிள்ளைகளும் வெளிநாட்டில் இருந்தனர். அவர் மீது இருந்த ப்ரியத்தால் பிறந்தநாள் பரிசு அனுப்ப முடிவு செய்தனர்.
அம்மாவுக்கு விலையுயர்ந்த நகை வாங்கப்போகிறேன் என்றான் முதல் மகன். அம்மா வெளியே போய்வர ஒரு கார் வாங்கப்போகிறேன்" என்றான் இரண்டாம் மகன். "ஒரு கிளி பார்த்தேன். அது பகவத்கீதை சுலோகங்களை வரி பிசகாமல் கூறுகிறது. அம்மாவுக்கு அதுதான் சிறந்த பரிசாக இருக்கும" என்றான் மூன்றாமவர். அடுத்த வாரமே அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது. "விலையுயர்ந்த நகை வந்தபின் என் நிம்மதியான தூக்கம் பறிபோய்விட்டது. கார் வந்ததால் ஒரு டிரைவரை நியமித்தேன். அவன் பெட்ரோல் திருடுகிறான். அடுத்தமுறை கிளி அனுப்ப வேண்டாம். அது கோழி அளவுக்கு ருசியாக இல்ல. "இப்படித்தான் சட்டங்களும், நீதி போதனைகளும் தவறான மனிதர்களிடம் சேரும்போது அவற்றின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது.
ஒவ்வோர் தனி மனிதனும் ஒவ்வொரு விதத்தில் அபாரமான வன். பிரம்மாண்ட சக்தி கொண்டவன். தன் வளர்ச்சியில் அவன் உண்மையான அக்கறை கொண்டாலே போதும் அவன் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சுற்றிலும் நிகழும். தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளாதவர்கள சமூக வளம் பற்றி பேசுவது வீண் ஜம்பம். கட்டுக்கடங்காத சமூகத்தை ஓட்டு மொத்தமாக மாற்றுவதை விட அதில் மாற்றத்தக்கதாக இருக்கும் உங்களை முதலில் கவனியுங்கள்
ஈசாப் கதை ஒன்று தெரியுமா?. ஒரு நண்டு தன் மகனைக் கூப்பிட்டு "ஏண்டா மகனே, ஏன் இப்படிக் கோணலாக நடக்கிற? நேராக நட" என்றது. அதற்கு அது "அப்பா, நீங்கள் நடந்து காட்டுங்கள். அப்படியே நான் நடக்கிறேன்" என்றதாம். உங்களையே ஆனந்தமாக வைத்துக் கொள்ளத் தெரியாத நிலையில், சமூகத்தை சந்தோஷமாக மாற்றும் திறமை எப்படி வரும உங்களைப்பற்றி நினைப்பது சுயநலம் என்றே எண்ணுகிறீர்களா?. அப்படி ஒரு எண்ணத்தை உங்களுக்குள் விதைத்தவர் யார்?
அவர்கள் தங்களை நல்லவர்கள்போல் மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதற்காகவே இயங்குபவர்கள். நீங்கள் வசதியுள்ளவராக வாழ்வது உண்மையான வாழ்க்கை இல்லை. உள்ளுக்குள் வளமாக வாழ்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உலகை மாற்றுகிறேன் என்பதை விட நான் மாறத்தயார் என்பதே உங்கள் தாரக மந்திரமாக இருக்கவேண்டும்.
நீங்கள் மாறிவிட்டால் உங்கள் வீடு மாறும். வேலை செய்யும் சூழல் மாறும். நீங்கள் வசிக்கும் சமூகம் வளமாக மாறும். அமைதிப் புரட்சியாக அது நிகழும்.