
ஆன்மிகம் பாதையில் நம்பிக்கை என்பது மிக மிக அவசியமானது. நம் தேசத்தில்தான் ஆன்மிக ஆழத்தையும் வீச்சையும் உலகுக்கே வழங்க வல்லமை பெற்றது. ஸ்வேத கேது என்ற மன்னன் குருவிடம் கற்க தன் 12 வயதில் அனுப்பப்பட்டான். வேதங்கள், உபநிஷத்துக்கள் எல்லாம் முழுமையாகக் கற்றதாகக் கூறி குரு அவனை அனுப்பி அவன் வீடு திரும்பினான். அவனைப் பார்த்ததும் அவன் தந்தை "இப்படி முட்டாளாக திரும்பி வந்திருக்கிறாயே" என்றார்.
அவன் அதிர்ந்து "இல்லை தந்தையே குருதான் நான் அனைத்தையும் கற்றதாக சொன்னாரே" என்றான்.
"சொல்லித் தந்தது எல்லாம் நீ கற்றுவிட்டாய். மறுக்கவில்லை. ஆனால் உனக்கு இருக்கும் ஞானத்தின் மூலத்தை நீ அறியவில்லை என்பது உன் நடையைப் பார்த்தாலே புலப்படுகிறது" என்றார்.
ஸ்வேதகேது கோபம் கொள்ளவில்லை. திரும்ப குருவிடம் போனான். தந்தை சொன்னதைக் சொன்னான். உடனே அவர் "ஓ, அதை அறிய வேண்டுமா?. ஆச்ரமத்தில் இருக்கும் 400 மாடுகளை காட்டுக்குள் ஓட்டிப்போ. அவை பெருகி 1000 ஆனதும் திரும்பிவா' என்றார். அவன் ஏதும் பேசாமல் மாடுகளை காட்டிற்குள் ஓட்டிப் போனான்.
மாடுகளை பராமரிப்பை தவிர வேறு எதிலும் அவன் சிந்தை செல்லவில்லை. ஒரு கட்டத்தில் மாடுகள் அவை பராமரிப்பு இவை பற்றிய சிந்தனைகள் அற்றுப்போயின. பசுவுடன் இருந்தால் பசு மாதிரி இருந்தான். மரத்துடன் இருந்தால் மரத்துடன் ஐக்கியமானான். அவன் கற்றறிந்த வேதங்கள், உபநிஷத்துக்கள் எல்லாம் மறந்து வாழ்ந்தான். பசுக்களுடன் பழகி பழகி அவனுடைய கண்கள் கூட பசு மாதிரி ஆகிவிட்டன.
சில ஆண்டுகள் கழித்து ஒரு பசு "ஸ்வேத கேது குருவிடம் போக வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றது. எதுவும் பேசாமல் மாடுகள் போன திசையில் நடந்தான். ஆச்ரமத்தில் மாடுகள் சேர்ந்ததும் அங்கிருந்த சீடர்கள் மாடுகளை எண்ணினர். ஆயிரம் மாடுகள் உள்ளன என்றனர்.
உடனே குரு " இல்லை 1001 என்றார். " ஸ்வேதகுதுவும் ஒரு பசு போல் ஆகிவிட்டான். அவனுடைய அடையாளங்களை தொலைத்து விட்டான். இதுதான் ஞானத்தின் உன்னத நிலை" என்று நெகிழ்ந்தார். படிப்பறிவில் மிகத் தேர்ந்தவனாக இருந்து ஒரு அறிஞனாக இருந்தும் கூடத் தன் குரு சொன்னதற்காக மாடு மேய்க்கப் போனான். அது அவனை இன்னமும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது.
ஆன்மிகத்தின் அடிப்படையே முழுமையான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்தான். மக்களின் நம்பிக்கை யையும் பக்தியையும் பூரணமாக அனுபவிக்கும் ஆன்மிகத் தலைவர்கள் வாழ்க்கையில் மிகத் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆன்மிக வளர்ச்சிக்கு மூடத்தனமான பக்தியோ குருட்டுத்தனமான நம்பிக்கையோ அவசியமில்லை. மாறாக அன்பும் நீண்டகால அர்ப்பணிப்பும் மட்டுமே ஆன்மிக வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.