

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவதொரு நோக்கத்தோடு பயணிக்கவேண்டும். அதுதான் நம்முடைய வாழ்க்கைக்கான அர்த்தமாக இருக்கும். தீப்பெட்டிக்கு, அதில் குச்சிகள் இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு. அதேபோல் நேர்மறை எண்ணங்கள் நம் மனதில் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். கடைசிவரை அந்த நோக்கத்தையே இலக்காக வைத்து முயற்சி செய்யுங்கள். கால் பதித்த பிறகு, தயங்காமல், பயப்படாமல் துணிந்து செயலாற்றுங்கள். பாதைகள் தெளிவாக தெரியும்.
வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களை கடந்து வரவேண்டிய சூழ்நிலை வரும். அப்போதும் நம்முடைய நோக்கம் வளர்ச்சியின் இலக்கை நோக்கி இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அடுத்தவரை வீழ்த்துவதோ, தாழ்த்துவதாகவோ நம் வாழ்க்கையின் நோக்கமாக இருக்கக் கூடாது.
வாழ்க்கையில் நோக்கம் பழுதானால் பொறுப்பு என்னும் சொல் மங்கி, கடமை என்னும் சொல் வீழ்ந்து போகும். வாழ்க்கையில் பொறுப்பு என்பதையும், கடமை என்பதையும் ஒன்று சேர்த்து முயற்சி செய்தால், நோக்கம் வெற்றிக் கனியை பறிக்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நாமும் முன்னேறி, மற்றவர்களையும் அதனை நோக்கி பயணிக்க வைக்க, நமது வாழ்க்கையில், நம்முடைய செயல்கள் அனைத்தும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது உள்ளத்தில் சமூக பாராவை தீர்க்கமானதாக இருக்க பழகும்.
வாழ்க்கையில் நோக்கம் சரியான திசையில் பயணித்தால் அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடிநாதமாக திகழும் நேர்மறையான எண்ணங்களையும், உணர்வுகளையும் துளிர்விக்க உதவுகிறது. அதுவே ஆலவிருட்சமாக வளர, உங்களுடைய சவால்களையும் , செயல்களையும் வலிமையாக்கவும் அடித்தளமாக அமைக்க உதவுகிறது.
வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாத இலக்கும், லட்சியம் இல்லாத செயலும் நடைமுறை வாழ்வில் சாத்தியமே இல்லை. சாதனை படைக்கும் ஆற்றலையும், உத்வேகத்துடன் அதனை கொண்டு செல்லும் காரணிகள்தான் நோக்கமும் லட்சியமும் என்பதை உணர்ந்து செயலாற்றுகள்.
உங்கள் நோக்கம் உயர்வாக இருக்கட்டும். உங்கள் செயல் சிறப்பாக இருக்கட்டும். ஆனால் ஒருபோதும், உங்கள் எண்ணத்தில் மற்றவர்களை பற்றிய சிந்தனை தன்மை மாறாமல் இருக்கட்டும். நீங்களும் அவர்களில் ஒருத்தர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மனித வாழ்க்கை அல்ப ஆசைகளுக்கு அடிபணிந்துவிடும் சுபாவம் கொண்ட மனம் படைத்தது. சில நேரங்களில் உங்களுடைய மனமும் இருப்பதை விடுத்து, பறப்பதை பிடிக்கும் எண்ணம் வந்தால் தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள். நோக்கம் பாழ்படும்.
உங்கள் நோக்கம் நிறைவேற, நல்ல நட்பு கிடைத்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி கிடைப்பதும் ஒரு வகையில் இறைவன் நமக்கு கொடுத்த வரமாக எண்ணுங்கள். இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்துவிடாது.
உங்கள் உழைப்பின் நோக்கம் ஊதியத்தில் வரும் பணம் மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் மீதும், உங்கள் நோக்கத்தின் மீதும் மற்றவர்கள் வைக்கும் நம்பிக்கையும் சேர்த்து தான் என்பதை மனதில் புரிந்துகொள்ளுதல் அவசியம்.
உங்கள் வாழ்க்கையில் நோக்கமும் லட்சியமும் என்றும் இணை பிரியாமல் பயணிக்கவேண்டும். எந்த சலனமும் அவற்றுக்குள் ஊடுருவ வகை செய்யாதீர்கள். தடம் மாறினால் வசந்தகாலம் ஈரமற்ற நிலமாக மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளதை உணருங்கள்.