
பலருக்கு வெற்றி என்பது ஒரு பக்கம்மட்டும் மின்னுகிற நாணயம். தங்கமாக ஜொலிக்கிற அந்த வெற்றி நாணயத்தின் மறுபக்கத்தைப் பார்த்தால் அதில் சுயநலம், அதியாயம், அக்கிரமம், சட்டவிரோத நடவடிக்கைகள், ஏமாற்றுதல், போன்ற பல பாவங்களின் வடிவங்கள் தெரியும்.
வாழ்க்கையில் வெற்றி - இதன் அர்த்தம் என்ன? பலபேருக்குத் தெரியவே தெரியாது. கோடி கோடியாகப் பொருள் ஈட்டுவதா? அத்தகைய கோடீஸ்வரரைப்போய்க் கேளுங்கள்; அவர் ஏதாவது ரகசிய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்பார். பணம் இருந்து என்ன பயன்?
உடல் ஆரோக்கியமான பயில்வானைப்போய் கேளுங்கள். என்னய்யா பிரயோஜனம்? அடுத்தவேளை சாப்பாட்டிற்கு வழியில்லையே என்று மூக்கால் அழுவார்.
ஒருசிலர் பக்கத்து வீட்டுக்காரனைப்போல சொகுசான வாழ்க்கை வாழவேண்டும் என்று அதற்கு அர்த்தம் சொல்வார்கள். பக்கத்து வீட்டுக்காரனைக் கேட்டால் இல்லற வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று அழுவான்.
ஓர் அருமையான கதை:
மன்னன் ஒருவன் தனது மந்திரியை எப்படியும் தவறு செய்ய வைக்க வேண்டும் என்று நினைத்தான்.
இரு கைகளைக் குவித்தபடி அதற்குள் சிறிய சிட்டுக் குருவிக் குஞ்சை வைத்துக் கொண்டு, எல்லாவற்றுக்கும் சரியாகப் பதில் கூறும் மதிமந்திரியே! இப்போது என் கேள்விக்குப் பதில் சொல்லும், என் கைக்குள் இருக்கும் குருவிக்குஞ்சு உயிரோடு இருக்கிறதா? என்று கேட்டார்.
மந்திரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. குருவிக் குஞ்சு உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் மன்னர் தன் கைகளினால் நசுக்கி அதைக் கொன்று மந்திரியின் பதில் தவறு என்று நிரூபிப்பார். "அது செத்து விட்டது" என்று சொன்னால் அதை நசுக்காமல் வெளியில் எடுத்து உன்யூகம் பொய்' என்று கொக்கரிப்பார். ஒருகணம் யோசித்த மதியூக மந்திரி இப்படிப் பதில் கூறினார். "உங்கள் மனம் விரும்புவதுபோல் நபக்கும் மன்னவா! என்றார்.
வாழ்க்கையின் வெற்றி என்பதற்கும் இதுதான் பதில். உங்கள் மனம் விரும்புவதுபோல நீங்கள் ஆவதுதான் வெற்றி. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. எனவே திட்டமிடுங்கள். பிறகு, அதை அடையும் மனஉறுதியைப் பெறுங்கள்.
வெற்றி உங்கள் கைகளிலே! வெற்றியை உங்கள் கரங்களில் ஏந்திப்பிடிக்க உங்களாலும் முடியும். நாம் மறுபடியும் இந்த உலகில் வாழமாட்டோம் என்பதனை நினைவில் வைத்து, கற்பாறையில் செதுக்கப்பட்ட பெயர் போன்று என்றும் அழியாமல் இருக்கும் வண்ணம் நம்முடைய பெயர் எல்லா இதயங்களிலும், ஓங்காரமாக ஒலிக்கும்படிச் செய்து, முடியும் என்ற உண்மையை எல்லோரும் ஏற்றம் பெறும்வகையில் ஏணிப்படியாக ஏற்றிவிட்டு, எல்லோரும் முன்னேறுவோம்.
'தடைகளே இல்லாத ஒரு பாதையை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் அது இல்லாத ஊருக்கு வழிகாட்டுகிற பாதையாகத்தான் இருக்கும்' என்கிறார் க்ளார்க் என்கிற அறிஞர்.
உருப்படியான வழி செல்லுகிற ஒவ்வொரு பாதையிலும் தடைக்கற்களும் இருக்குமென்பது நிச்சயம். நாம் அதைத் தாண்டித்தான் ஆகவேண்டும்.