
அமெரிக்க நாட்டில் சகல வசதிகளுக்கும் பழக்கப்பட்ட ஒரு கோடீஸ்வரனின் மகள், அரேபிய நாட்டில் பெட்ரோல் எடுக்கும் தொழிற்சாலையில் பொறியாளராக வேலை செய்துவரும் ஒருவனை மணந்து கொண்டு, தன் கணவனுடன் வாழ்க்கை நடத்த தன் கணவன் வேலை செய்யும் நாட்டிற்கு வந்து சேர்ந்தாள். அங்கு வந்த சில நாட்களுக்குள் அவளுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. எங்கு பார்த்தாலும் தெரியும் பாலைவனம் அவளுக்கு சலிப்பைத் தந்தது.
உல்லாசமாகப் பேசி மகிழ அவளுக்கு நண்பர்கள் யாருமே அங்கு கிடைக்கவில்லை. அங்கு ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்க சினிமா அரங்குகளும், நீச்சல் குளங்களும் இல்லை.
அவளுடைய கணவனுக்கு கைநிறையச் சம்பளம் கிடைத்தும். சகல வசதிகளுடன் கூடிய வீடிருந்தும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அங்கு ஒன்றுமேயில்லாத மாதிரியே அவளுக்குப்பட்டது.
நல்ல இடத்தில் வேலையைத் தேடிக்கொள்ளும்படி அவள் சொன்ன யோசனையை. அவள் கணவன் நிராகரித்து விட்டான். தன்னுடைய வாழ்க்கை நரகமாக மாறிவிட்டதாகவும், தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு அமெரிக்காவிற்குத் திரும்பி வருவதற்கு, தான் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் தன் தந்தைக்கு அவள் நீண்ட கடிதம் எழுதினாள்.
அதற்கு அவளுடைய தந்தை கீழ்கண்ட பதில் கடிதம் எழுதினார்.
இரண்டு மனிதர்கள் ஒரே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். ஒருவன் வானிலுள்ள சொர்க்கத்தையும், நட்சத்திரத்தையும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருத்தான். மற்றவன் பார்வையை எப்போதும் பதியவைத்துக் கொண்டு நரகத்தைக் கண்டான்.
இவ்வாக்கியங்களில் எவ்வளவு பெரிய தத்துவம் அடங்கிக் கிடக்கிறது?
இரண்டு பேர்கள் ஒரே மாதிரியான சூழ்நிலையில் வசித்து வந்தாலும் அவர்களுடைய எண்ண ஓட்டங்கள் முற்றிலும் மாறு பட்டிருந்ததினால், ஒரே உலகத்தில் வாழாமல், அவ்விருவரும் வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்துவந்தார்கள்!
நம்பிக்கை தரும் எண்ணங்களை நினைத்துக் கொண்டிருத்தவன் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான். மற்றவன், தோல்விதரும் எண்ணங்களை நினைத்து வந்ததினால் நரகத்தைக் கண்டு வந்தான்.
அவள் தன் தந்தை எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு, தன்னுடைய உள்ளத்தில் இடம் பெற்றிருந்த தோல்விதரும் எண்ணங்களை அகற்றிவிட்டு, மகிழ்ச்சி தரும் எண்ணங்களை நினைக்க ஆரம்பித்தாள்.
வேலையில் ஆர்வம் காட்டி, அவன் செய்து வரும் வேலையைப் புகழ்ந்து பேசவும் ஆரம்பித்தாள்.
அங்கு வாழ்ந்த ஏழை மக்களுக்கு மருந்துகள் கொடுத்துப் பல உதவிகளைச் செய்து, அவர்களால் வணங்கப்படும் அளவுக்கு உயர்ந்து நின்றாள். எண்ணங்கள் மாறுபட்டவுடன் சலிப்புடன் தோன்றிய பழைய வாழ்க்கையே அவளுக்கு இன்பமாக மாறிவிட்டது.
நாம் எப்படி எண்ணிக்கொண்டு உலகத்தைப் பார்க்கிறோமோ அப்படித்தான் உலகமும் நமக்குக் காட்சி தரும்.
ஒருவன் உலகம் அழகானது என்று நினைத்தால் பார்க்கும் -காட்சிகள் அனைத்தும் அவனுக்கு அழகானகாகத் தென்படும். ஒருவனுடைய உள்ளத்தில் எப்போதும் இன்ப கீதம் ஒலித்துக் கொண்டிருந்தால் அவன் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் இன்ப கீதத்தைக் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பான், அதற்கு மாறாக சங்கீதத்தை ரசிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளாதவனுக்கு மிக நல்ல இனிமையான சங்கீதம் கூட காட்டுக் கத்தலாகத்தான் கேட்கும்.
எண்ணம் என்பது ஒரு கண்ணாடி. அதை தாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே தெரியும்.