
பணம் சம்பாதிக்க நல்லவன், கெட்டவன் எல்லோராலும் முடியும். ஆனால், மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டுமே முடியும். அதற்கு நாம் நமது நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பது சிறிது என்றாலும், அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது நமது வாழ்க்கையைப் பற்றிய பார்வையை மாற்றி, நமது மனநலத்தை மேம்படுத்தும்.
நாம் நமது திறமைகளை அடிப்படையாகக் கொண்டு நமது வாழ்வின் வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்ய வேண்டும். வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற்றம் நமது சௌகரியமான வட்டத்துக்குள்ளேயே அமையும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கடின உழைப்புக்கு தயங்கக் கூடாது.
நமது சிந்தனைகள்தான் நமது வாழ்க்கையை வடிவமைக்கின்றன. அதற்குத் தேவையான நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுவதில் பயிற்சியும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய தரமான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் கவனத்தையும், முன்னுரிமையையும் கொடுக்கவேண்டும்.
நமக்கு நெருக்கமான உறவுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற உதவும் மக்களை எந்த நிலையிலும் இழந்து விடக்கூடாது.
நாம் ஆர்வத்துடனும், நல்ல நோக்கத்துடன் அன்றாடம் செயல்படுவதன் மூலம் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றலாம்.
நம்முடைய நல்ல நண்பரை அணுகுவது போலவே, நம்மை நாமே பாசத்துடன் அணுகவேண்டும். உலகில் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன. நமது பணிவு நமக்கு புதிய அனுபவங்களுக்கான வாய்ப்புகளையும், புதிய நட்புகளையும் பெற்றுத் தரும்.
நமது ஆற்றலைப் பாதுகாக்க, தேவைப்படும்போது 'இல்லை' என்று சொல்லப் பழகவேண்டும். நமது நேரம், கவனம், ஆற்றல் இவை அனைத்தும் விலை மதிப்பற்றவை. இவற்றை வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது தீர்க்கமாகவும் முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.
நமது நற்சிந்தனைகளுக்கு முறையான செயலாக்கம் கொடுக்காமல் இருந்தால், நமது வாழ்வு அர்த்தமற்றவையாகி விடும். வாழ்க்கைப் பாதையில் தினமும் ஒரு சிறிய படியையாவது எடுத்து முன்னேற வேண்டும். நமது வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய தவறுகள் நமக்கு இலவசமாக கிடைக்கும் மறைமுகப் பாடங்கள் என்பதை மறக்கக் கூடாது. நமது உண்மையான வாழ்க்கை உறுதிமிக்க உறவுகளை உருவாக்கும். பிறருக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாம் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதப்படும். நாம் பாசத்துடன் செய்யும் நற்சேவைகள் சமூகத்தில் அளப்பரிய மாற்றங்களைக் கொண்டு வரும். கஷ்டங்கள் நம் வாசல் கதவை தட்டத்தான் செய்யும்; அவற்றைத் திருப்பி அனுப்புவதும் அல்லது அழைத்து உள்ளே அமர வைத்து அழகு பார்ப்பதும் நம்மிடம்தான் உள்ளது.
சில நேரம் உடைந்து போவது கூட புதிய மாற்றத்திற்காகத்தான், கவலையை விட்டொழிப்போம். எழுந்து நிமிர்ந்து நடப்போம். புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும் ஒடிக்க முடியாது. துயர் கண்டு துவண்டு விடாமல், விழிப்பதற்கே வாழ்க்கை, வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி என்பதை மனதால் உணர்ந்து வாழ்வோம்.
கடல் எல்லோருக்கும் பொதுவானது. அதில் சிலர் முத்துக்களையும், சிலர் மீன்களையும் எடுக்கிறார்கள். சிலர் தம் கால்களை மட்டும் நனைக்கிறார்கள். வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானது. அதில் நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோமோ அது கிடைக்கும். எதையும் ரசிக்கத் தெரிந்தவனுக்கு இருள் கூட அழகுதான். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் சிரிக்கத் தெரிந்தவனுக்கு சோகம் கூட சுகம்தான்.
நாம் தாமதிக்கலாம். ஆனால் நேரம் தாமதிக்காது. நல்ல வாய்ப்புகள் நம்மை அடிக்கடி தேடி வராது. வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு நேரத்தின் வேகத்திற்கேற்ப நாமும் நகர்ந்து செல்வதே சிறப்பானது. அதுவே நமக்கு வெற்றியைத் தரும்.
இவற்றை உணர்ந்து வாழ்க்கையை உண்மையாய் வாழ்ந்துதான் பார்ப்போமே.