
சில சமயங்களில் எதிரிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமான செயலாக இருக்கும். நம்முடன் நட்புடன் உறவாடிக் கொண்டே நமக்கு எதிராக செயல்படுபவர்கள் உண்டு. சில நேரங்களில் அவர்கள் தந்திரமாக நடந்துகொண்டு நமக்கு நல்ல நண்பர்களாக தோன்றுவார்கள். அவர்கள் உண்மையிலேயே நமக்கு நண்பர்களா அல்லது எதிரிகளா என்பதை உன்னிப்பாக அவர்களின் செயல்களைக் கொண்டும், நடவடிக்கைகளை கொண்டும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
நண்பர்களைப்போல செயல்படும் சிலரின் செயல்களைக் கொண்டு அவர்களின் உண்மையான எண்ணங்களை அறிய முடியும். அவர்கள் பேசும் வார்த்தைகள் மூலம் அவர்களின் மனநிலையை கூட நம்மால் அறிய முடியும். நாம் துன்பப்படும் பொழுது அவர்கள் நமக்காக வருந்துகிறார்களா அல்லது மகிழ்ச்சி அடைகிறார்களா என்ற செயலின் மூலமும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். நாம் துன்பப்படும் பொழுது நண்பர்களாக எண்ணும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் உங்கள் எதிரியாக ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை எண்ணலாம்.
நம்முடன் நல்லவிதமாகப் பழகிக் கொண்டே பிறரிடம் நம்மை பற்றி மோசமாக பேசுவதோ, வதந்திகளை பரப்புவதையோ செய்யலாம். உண்மையான நண்பர்கள் நம்மைப் பற்றி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களின் இறுதி இலக்கு உதவுவதுதான். ஆனால் நண்பர்களைப்போல இருந்து கொண்டு நமக்கு எதிராக செயல்படும் சிலரின் முகஸ்துதிக்கு மயங்குவதோ, அவர்களின் அறிவுரைகளை கேட்பதோ ஆபத்தாக முடியும்.
உண்மையான நண்பர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுப்பதையோ, தேவையற்ற வதந்திகளை பரப்புவதையோ கனவிலும் கூட யோசிக்க மாட்டார்கள். ஆனால் இம்மாதிரியானை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நண்பர்கள் என்றெண்ணி நம்பி மோசம் போகாமல் இருப்பது நல்லது.
எதிரிகள்தான் யார் என்பதை அடையாளம் காணும் படி எந்த பலகையையும் கழுத்தில் மாட்டிக்கொண்டு திரியப் போவதில்லை. நாம்தான் அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் செயல்கள் மூலமும், வார்த்தைகளின் மூலமும் எளிதில் அடையாளம் காணமுடியும்.
சிலரின் பேச்சில் கண்ணியம் குறைவாக இருக்கும். பிறரை இழிவுபடுத்தி பேசுவதும், புறம் பேசுவதுமாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பது தான் நமக்கு பாதுகாப்பானது. அதேபோல் சிலர் நம் உயர்வு கண்டு மகிழ்ச்சி அடையவோ, நம் செயல்களை பாராட்டி பேசவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள். சிலர் பகையை வெளிப்படையாக காட்டலாம்.
வேறு சிலரோ வெளிப்படையாக காட்டாமல் உள்ளுக்குள் பகைமையை வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து பழகுவார்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதுதான் நல்லது.