
நாம் அனைவரும் நம்முடைய அன்றாட வாழ்வினை மகிழ்ச்சியாக கழிக்கவே விரும்புகின்றோம். அதை நோக்கிய பயணத்தில் நமது சொந்த வாழ்விலும் தொழில் வாழ்விலும் பல முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம். இவற்றில் சிலவற்றில் வெற்றியையும், சிலவற்றில் தோல்வியையும் சந்திக்கிறோம்.
எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் போதும், அது முதலில் நமக்கு மலைப்பாகத் தோன்றுகிறது. அதுவே வழக்கமாக மாறும் போது முயற்சிகளின் விளைவாக எளிதான ஒன்றாக மாறி விடுகிறது. குழந்தைகள் கூட நடக்கத் தொடங்கும் போது கீழே விழுந்து, எழுந்துதான் நடை பயிலுகின்றார்கள். கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை.
முயற்சிக்காமல் இருப்பவன் முட்டாளுக்கு சமம் என்பார்கள். உழைப்பின்றி ஊதியம் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். ஆகாது, முடியாது போன்ற சொற்களையெல்லாம் நமது அகராதியிலிருந்து எடுத்து விட்டு செயலாற்றினால் நமது செயல்களில் எப்போதும் வெற்றியே கிடைக்கும்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. நம்மால் இது நிச்சயம் முடியும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்கள் நமக்கு வெற்றியை மட்டுமே கொண்டு வரும்.
நமது ஒவ்வொரு செயலுக்கும் ஏற்படும் முட்டுக்கட்டைகளுக்கு நமது விடாமுயற்சியால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நமது தவறுகளை திருத்திக் கொண்டு செயலில் மேலும் இறங்கி அதில் முழுமையைக் காண முயல வேண்டும். முழு அர்ப்பணிப்பு உணர்வுடனும், அவாவுடனும் நாம் செய்யும் செயல்களில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இலவசமாக கிடைக்கின்றது. இதில் 8 மணி நேரம் உறக்கத்திற்கு போனால் கூட, மீதமுள்ள 16 மணி நேரத்தை நாம் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் வாழ்விற்கும் குடும்ப வாழ்விற்கும் தேவையான நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குவது நல்லது.
அனைத்து வேலைகளையும் நாமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து, நமது நண்பர்களின், உறவினர்களின் திறமைக்கேற்ப நமது பணியின் ஒரு பகுதியை அவர்களிடம் ஒப்படைக்கலாம். அலுவலகத்திலும் இவ்வாறான செயல்முறைகளை பின்பற்றலாம் அனைத்து வேலைகளையும் நாமே செய்ய முற்படும் போது, நமக்கு பணிச் சுமை கூடும். அதன் காரணமாக உடலிலும் உள்ளத்திலும் சோர்வு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் குறைந்தபட்ச நேரத்தையாவது மகிழ்ச்சியாக செலவிட வேண்டும். பணம் சம்பாதிப்பது குடும்பத்திற்குத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ரால்ப் எமர்சன், “விடாமுயற்சி நமது செயல்களை எளிதாக்குகின்றது” என்கிறார்.
தாமஸ் ஆல்வா எடிசன், ’தொடர்ந்து முயற்சித்துத்தான் பார்ப்போமே’ எனும் எண்ணம்தான் வெற்றிக்கான அடிப்படைத் தேவை என்கிறார்.
நமக்கு ஒரு தோல்வி ஏற்பட்டால் நாம் தொடர்ந்து முயற்சிக்காமல் இருப்பது தவறு. இது நமது பலவீனமாக கருதப்படும். ஒவ்வொரு சாதனையாளரும் தொடக்கத்தில் எவ்வளவோ சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள். அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என எந்தத் துறையிலும் வரலாற்றுப் புகழ் பெறுவதற்கு முன்னால் அவர்கள் எத்தனையோ முறை தோல்விகளை தழுவிய போதும் துவண்டு போனதில்லை.
வெற்றிகளை சந்திக்கும்போது அகந்தையில் வீழ்வதும், தோல்விகளை சந்திக்கும் பொழுது துவண்டு விடுவதும் கூடாது. தோல்விகளை நம்மை பக்குவப்படுத்தும் ஆயுதங்களாகவே பார்க்க வேண்டும். தோல்விகளே காலப்போக்கில் நமது அனுபவங்களாகின்றன. நமது முயற்சிகள் தவறலாம். ஆனால் நாம் தொடர்ந்து நம் இலக்குகளை சென்றடைய முயற்சிக்கத் தவறக் கூடாது.
ஒரு செயலை எடுத்துக் கொள்ளும் போது அம்மாதிரியான செயல்களில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்து அறிந்து கொள்வது நல்லது. வாய்ப்பிருந்தால் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் வழிகாட்டுதல்களை பெற்று பின்னர் நாம் நம் செயலில் இறங்குவதுவும் நல்லது. இனியாவது முயற்சியே வாழ்வின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் என்பதை உணர்ந்து செயலாற்றுவோம். வாழ்வில் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம்.