
சிலர் நேரத்தின் முக்கியத்துவத்தை உணராமல் அதை அதிகமாக வீணாக்கிக் கொண்டிருப்பார்கள். முக்கியமான வேலைகளைக் கூட நாளை செய்துக் கொள்ளலாம் என தள்ளிப் போட்டுவிடுவார்கள். இதனால் நாம் இழக்கப்போவது நேரத்தை மட்டுமில்லை நம் முன்னேற்றத்தையும் தான். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு குட்டி கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த அரசர் தன் நாட்டு மக்களுக்கு நிறைய உதவிகள் செய்வதை பழக்கமாக வைத்திருந்தார். ஒரு நாள் அரசர் சந்தையில் இருக்கும் போது தன்னுடன் படித்த நண்பனை பலநாள் கழித்து சந்தித்தது மட்டுமில்லாமல், 'நீயும் உன் குடும்பமும் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு அந்த ஏழை நண்பனும், 'எனக்கு யாருமே வேலை தருவதில்லை. என்னால் எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை. நான் என்ன தவறு செய்கிறேன் என்றும் தெரியவில்லை' என்று கூறுகிறார்.
இதைக்கேட்ட அரசர், 'இன்று சூரிய அஸ்தமனம் ஆகும் வரை என் அரண்மனைக்கு சென்று உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்' என்று கூறுகிறார். இதைக்கேட்ட ஏழை நண்பன் இந்த சந்தோஷமான விஷயத்தை அவர் மனைவியிடம் சொல்ல ஓடிப் போகிறார். இதைக்கேட்ட அவர் மனைவியும், 'அப்போது உடனே போய் எடுத்து வாருங்கள்!' என்று கூறுகிறார்.
அதற்கு அவரும், 'இப்போது எனக்கு பசிக்கிறது. முதலில் உணவுக்கொடு சாப்பிட்டுவிட்டு போகிறேன்' என்று கூறுகிறார். சாப்பிட உடன், 'தூக்கம் வருகிறது. அதான் நிறைய நேரம் இருக்கிறதே!' என்று தூங்குகிறார். சில மணி நேரம் கழித்து எழுந்து பார்த்தால் மதியம் ஆகிவிடுகிறது. இதற்கு பிறகு கிளம்பினால் கூட சரியான நேரத்திற்கு போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டே வீட்டில் இருந்து கிளம்பும் போதே நிறைய பைகளை எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.
உச்சி வெயில் சுட்டெரிக்கிறது. அப்போது அங்கே ஒரு மரத்தை பார்த்ததும், 'இங்கே சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு போகலாம்' என்று முடிவெடுக்கிறார். ரொம்ப தூரம் நடந்த களைப்பில் மறுபடியும் நன்றாக தூங்கிவிடுகிறார். எழுந்துப் பார்த்தால் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமனம் ஆகிறது. இதைப் பார்த்ததும் தலைதெறிக்க அரண்மனைக்கு ஓடுகிறார். ஆனால், அதற்குள் சூரியன் அஸ்தமனம் ஆகிறது. அரண்மனை கதவும் முடப்படுகிறது.
இப்போது அரண்மனை வாசலிலேயே கதறி அழ ஆரம்பிக்கிறார். அரசன் அவன் தோளில் தட்டிக்கொடுத்து, 'இப்போது நீ என்ன தவறு செய்கிறாய் என்பது உனக்கு புரிந்திருக்கும். நம்முடைய வாழ்க்கையில் நேரத்திற்கு மதிப்புக் கொடுத்தாலே எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். நான் கொடுக்க வேண்டும் என்று நினைத்த தங்கத்தை விட நீ இன்று கற்றுக் கொண்ட பாடம் மிகவும் விலை உயர்ந்தது' என்று சொல்லி புரிய வைக்கிறார்.
நாட்டின் பணக்காரருக்கும் 24 மணி நேரம் தான். நாட்டினுடைய ஏழைக்கும் 24 மணி நேரம் தான். இதில் நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. நாம் நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியமாகும்.