
வார்த்தைகளுக்கு நம்மை காயப்படுத்தும் சக்தி உண்டு. தேவையற்ற வார்த்தைகள் வலுவான உணர்வுகளைத் தூண்டும். எதிர்மறையான கருத்துக்கள், அவமதிப்புகள் அல்லது விமர்சனங்கள் நம்மை பதட்டப்படவோ, கோபப்படவோ வைக்கும். இலக்கின்றி வீசப்பட்ட வார்த்தைகள் நம்மை காயப்படுத்துவதுடன், அவை பேசப்பட்ட பிறகும் நீண்ட காலம் நீடிக்கும். வார்த்தைகள் தான் நம்மை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை வடிவமைக்கும். யாராவது நம்மை கடிந்து கொள்ளும் பொழுதோ, இழிவுபடுத்தும் பொழுதோ, நம் சுயமரியாதையும், சுயமதிப்பும் வெகுவாக பாதிக்கப்படும். காலப்போக்கில் எதிர்நோக்கும் எதிர்மறையான வார்த்தைகள் நம்மை எதிர்மறை நம்பிக்கைகளுக்கு செல்ல வழி வகுக்கும்.
வார்த்தைகள் பல வழிகளில் நம்மை காயப்படுத்தலாம். பிறர் கூறும் வார்த்தைகளால் நாம் பயனற்றவரோ என்று நினைக்க வைக்கலாம். நடந்த ஒவ்வொரு தேவையற்ற விஷயமும் தன்னால்தான் நடந்ததோ என்று உணர வைக்கலாம். இதனால் மனச்சோர்வும் மன அழுத்தமும் ஏற்படலாம். தீவிரமான சந்தர்ப்பங்களில் காயப்படுத்தும் வார்த்தைகள் தற்கொலைக்கு கூட வழிவகுக்கும். எனவே பேசப்படும் வார்த்தைகளில் கவனம் முக்கியம். மற்றவர்களிடம் எதையும் சொல்வதற்கு முன்பு இரண்டு மூன்று முறை யோசிப்பது நல்லது.
ஆழமாக நேசிக்கும் ஒருவர் சண்டையின் பொழுது கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் நம்மை உள்ளுக்குள் அப்படியே உடைத்து விடும். வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அவை கையாளப்படும் விதம் நம்மை காயப்படுத்தலாம் அல்லது குணப்படுத்தலாம். நாம் யாரிடம் பேசுகிறோம் என்பதைப் பொறுத்து வார்த்தைகள் வெவ்வேறு அர்த்தங்களையும், வெவ்வேறு நிலை தாக்கங்களையும் கொண்டிருக்கலாம். நம்மைப் பற்றி நல்ல விஷயங்களை சொல்லும்பொழுது நம்மை ஊக்குவிப்பதாக இருக்கும். அத்துடன் அவர்களைப் பற்றிய தோற்றத்தை நம்மிடம் ஒரு நல்ல விதத்தில் உருவாக்கும். நம் மீது நம்பிக்கையையும் உருவாக்கும். அத்துடன் ஒரு நேர்மறையான பார்வையை பார்க்க வைக்கும்.
அதுவே அன்பற்ற, கடிந்து கொள்ளும், கடினமான வார்த்தைகள் எதிர்மறையான பலன்களைத் தரும். நம்பிக்கைக்கு பதிலாக பயத்தை வளர்த்து விடும். ஊக்கத்திற்கு பதிலாக நம்மை செயலற்றதாக ஆக்கிவிடும். நம் மீதே நமக்கான நம்பிக்கையை இழந்து விடுவோம். எல்லோராலும் பிறரின் காயப்படுத்தும் வார்த்தைகளை புறக்கணித்து விடத் தெரியாது. சிலருக்கு அது ஆழமான பாதிப்பை உண்டாக்கும். அன்பற்ற வார்த்தைகள் மனதை புண்படுத்துவதுடன், அவர்களின் மெல்லிய உணர்வுகளை சாகடித்து விடும்.
நம்மை காயப்படுத்தியவர்களை பதிலுக்கு நாமும் காயப்படுத்தாமல் அவர்களை விட்டு மெல்ல விலகுவதே நல்லது. உணர்ச்சி வசப்பட்டு பதிலுக்கு பதில் சொல்வதால் எந்தப் பயனும் இராது. நேருக்கு நேர் வாக்குவாதம் செய்வதை விட ஒரு சிறிய புன்னகையை உதிர்த்து விட்டு செல்வதுதான் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருக்கும்.
அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அவர்களின் வார்த்தைகளை புறக்கணித்து விடுவது நல்லது. இல்லையெனில் வீணான வெறுப்பு, தேவையில்லாத மனத் துன்பம் என அதன் தொடர்ச்சி நீண்டு கொண்டே செல்லும். எனவே தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து விடுவது தான் நல்லது.