
இன்றைய உலகில், அனைவரையும்விட 'நான்தான் புத்திசாலி, நான்தான் திறமைசாலி' என்பதை நிரூபிக்கும் பணியில் ஒவ்வொரு மனிதனும் ஈடுபட்டிருக்கிறான்.
தன்னுடைய அறிவையும் திறமையையும் வெளிக்காட்டுவதற்கு அனைவரும் மற்றவர்களைக் குறை கூறுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அகம்பாவம் கொண்டவர்கள் இந்த உலகில் நிறைந்திருப்பதினால் இப்படிப்பட்ட நியாயமற்ற குற்றச்சாட்டுகளால் தாக்கப்படாதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது.
மேலும் இந்த உலகில் பெரிய படிப்புப் படிக்க, பெரிய பதவி வகிக்க பரிசு - பட்டம் பெற, பெரும் பணம் திரட்ட மனிதர்கள் கடுமையான போராட்டங்களிலும் , சில தவறான வழிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆகையினால் சில மனிதர்களிடம் நியாயத்தை சிறிதும் எதிர்பார்க்காதீர்கள். மற்றவர்கள் உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு உதவப் போகிறார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.
நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.
முக்கியமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு நாம் சிறிதுகூட மதிப்பு தரக்கூடாது. மற்றவர்கள் சொல்லிவரும் நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது.
ஆனால் நிறையபேர்கள், "அவன் என்மேல் மிகவும் மோசமான பழியைச் சுமத்தியிருக்கிறான். அவனுக்கு நான் சரியான பாடம் கற்பிக்கப்போகிறேன். அவனை நான் அழவைக்கப்போகிறேன்" - என்று போர் முரசு கொட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதனால் காலம் வீணாகிறது; உழைப்பு விரயமாகிறது: மற்றவர்களுடைய கேலிக்கும், ஏளனத்திற்கும் உள்ளாக நேரிடுகிறது.'
'பொறுப்பற்ற முறையில் மற்றவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை' மாடு அசைபோடுவதைப் போன்று, நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
குதிரைமேல் அமர்ந்து ஒருவன் கம்பீரமாகச் சவாரி செய்து கொண்டிருந்தான்.
ஒரு நாய் குரைத்துக்கொண்டே அந்தக் குதிரையைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. குதிரை அந்த நாயை சிறிது கூட பொருட்படுத்தாமல் தன் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. காரணமில்லாமல் தவறாகக் குறை கூறுபவர்கள், எந்த விதமான பலனுமில்லாமல், குரைத்துக் கொண்டு ஓடும் அந்த நாயைப் போன்றவர்கள்தான்.
வெற்றியின் சிகரங்களை நோக்கிச் செல்லும் மனப்பான்மை கொண்டவன் ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளைக் காதில்கூட வாங்கிக்கொள்ளாமல், குதிரைமேல் அமர்ந்திருக்கும் மனிதனைப்போன்று தன் லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பான்.
அதே சமயத்தில் மற்றவர்கள் சொல்லும் குற்றச் சாட்டுகளில் நியாயம் இருந்தால் நாம் அவைகளை ஏற்றுக்கொண்டு நம்மை திருத்திக்கொள்ள வேண்டும்.
தன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டவன் யாருடைய உதவியையும், தயவையும் எதிர்பார்த்து காத்திருக்கமாட்டான். எவரையும் புகழ்ந்து பேசி காரியம் சாதிக்கமாட்டான் 'தன் கையே தனக்கு உதவி என்பதை முற்றிலும் உணர்ந்தவனாக இருப்பான்.
தன் பிரச்னைகளுக்குத் தானே முடிவு எடுக்கவேண்டும், வேறு யாராலும் முடிவெடுக்க முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டு, எதிர்வரும் பிரச்னைகளை நன்கு அலசி, ஆராய்ந்து, அவைகளைத் தீர்க்கும் வழியைப் பின்பற்றி தானாகவே முடிவெடுத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்!