நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மன அமைதியும், மகிழ்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும். இதை நோக்கித்தான் நமது அன்றாட வாழ்க்கைப் பயணம் அமைய வேண்டும். நம்மில் யாரும் விரும்பிப் போய் துயரக்கடலில் விழுவதில்லை. நமது வாழ்க்கை நெரிசல்மிக்க போக்குவரத்து சாலையில் பயணிப்பது போல்தான். மேடு, பள்ளங்கள் இல்லாத சாலைகள் எங்கே இருக்கின்றன? அது போல்தான் இன்ப, துன்பங்கள் இல்லாத வாழ்வு எவருக்கும் அமைவதில்லை.
நாம் தனிமையில் அமர்ந்து எதனால் நமக்கு பிரச்னைகள் வருகின்றன, அவைகளுக்கு தீர்வு காண என்ன வழி என யோசிக்க வேண்டும். தீர்வுகளை ஒரு வெள்ளைத் தாளில் தெளிவாக எழுதிவைத்துக் கொண்டு, அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்தலாம். அப்போது சிக்கல்கள் படிப்படியாக காணாமல் போகும். வசந்தம் நம் வாழ்வில் தலையை நீட்டும்.
வாழ்வில் அனுபவம் வாய்ந்த பெரியவர்களை நம்முடைய ஆலோசகர்களாக வைத்துக் கொண்டு அவர்களின் வழிகாட்டுதலின் படி வாழ்க்கையை கொண்டு செலுத்தலாம். ஒருபோதும் மூடர்களின் செயல்களை பார்த்து நமது மகிழ்ச்சியை தொலைத்துவிடக்கூடாது. எதிர்மறை எண்ணம் கொண்ட மக்களுடனும், தன்னம்பிக்கையில்லா மக்களுடனும் உள்ள தொடர்புகளை காலம் தாழ்த்தாமல் தொலைத்து விட வேண்டும். நல்ல அனுபவமும், அறிவும் கொண்ட மனிதர்களின் நட்பினை ஒரு பொழுதும் விட்டுவிடக் கூடாது. நமது மனதை எது பாதித்தாலும் அதை தொலைவில் வைத்துப்பார்க்கப்பழகிக் கொள்வது நல்லது. அவற்றை நினைவில் நிறுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டிலிருப்பவர்களுடனும், நண்பர்களுடனும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனை பிரார்த்தனை செய்வதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் இடையூறு எது வந்தாலும் அதை ஒதுக்கித் தள்ளவேண்டும். எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரின் பக்கம் போகக் கூடாது. நமது மனதில் பாவ எண்ணங்களை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
நம் நிம்மதியை யாருக்காகவும் எந்த சூழலிலிலும் நாம் இழந்து விடக்கூடாது. நம் வாழ்வில் நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்ப வேண்டும். கடவுளின் எந்த செயலிலிலும் காரணம் ஒன்று இருக்கும். நாம் சாமான்ய மனிதர்கள். நாம் அதைப் புரிந்துக் கொள்வது கடினம். அது நாம் முயன்றாலும் முடியாது என்பதுதான் உண்மை. ஒருவேளை மனதிற்கு பிடிக்காத சம்பவம் ஒன்று நம் வாழ்வில் நடந்தால் அது நம்மிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடை கொடுத்து அனுப்ப வேண்டும்.
வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம், அரசு மருத்துவ மணை, முதியோர் இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முற்படுவோம். நம் நேரத்தை விரயம் செய்யும் எதையும் அனுமதிக்காமல் இருக்கப் பழகுவோம். தினமும் குறித்த நேரத்தில் உறங்கி, குறித்த நேரத்தில் எழுவதற்கு நம்மைப் பழக்கிக் கொள்வோம். நம்மை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும் அளவு நமது தோற்றத்தை அமைத்துக் கொள்வோம்.
ஒருசெயலை ஆரம்பிக்கும் முன் அதன் விளைவு எதில்கொண்டு சேர்க்கும் என ஆராய்ந்துப் பார்த்து செயலில் இறங்குவோம். நம்மைப் புரிந்துக்கொண்டு மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம் ஒதுக்குவோம். நம் வாழ்வில் எல்லாம் நமக்கு பிடித்த மாதிரி நடக்கும் என எதிர்பார்ப்பதை தவிர்ப்போம்.
இவ்வுலகில் நாம் எதிர்பார்ப்பது சில நேரங்களில் நம்மை ஏமாற்றத்தில் கொண்டு போய்நிறுத்தி நம் நிம்மதியை இழக்க செய்துவிடும். நமது கைப்பேசியை தேவையானவற்றிற்கு மட்டுமே பயன்படுத்துவோம். எதிலும் நேர்மையாக இருப்போம். தர்மத்தின் வழியில் இறைவனை சதாசர்வ காலமும் துணைவனாக வைத்துக்கொண்டு செயலாற்றுவோம். மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும் பேசாமல் இறைவனை நினைத்து அவனிடம் மனம் விட்டு பேசிவிட்டு நமது காரியத்தை துவங்குவோம். அப்போது மனஅமைதியும், மனமகிழ்ச்சியும் நமது நிரந்தர நண்பர்களாகி விடுவதை நம்மால் உணர முடியும்.