
நதிகளுக்கு யாராவது வழி காட்டுகிறார்களா? அது தன் பாதையை தானே செதுக்கி உடைத்து தனக்கான பாதையை அமைத்துக்கொள்கிறது. எத்தனை தடைகள் குறுக்கே கிடந்தாலும் அவைகளை நகர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து சிதைத்து தகர்த்தி முன்னேறிச் செல்வதில்லையா?
ஒரு பெரிய மா மரம். அதன் நிழலில் சிறு மாங்கன்று ஒன்று முளைத்தது. பெரிய மரத்தின் நிழலில் மாங்கன்றிற்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை. எந்நேரமும் அது இருளிலேயே வளர வேண்டியிருந்தது. சூரிய வெளிச்சம் கிடைத்தால்தான் தன்னால் ஆரோக்கியமாக வளரமுடியும் என்பதை உணர்ந்த அந்த மாங்கன்று, வளைந்து வளைந்து பெரிய மாமரத்தின் நிழலிலிருந்து வெளியே வந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அதன் நுனியில் இருந்த துளிரில் சூரிய வெளிச்சம் பாய்ந்தது. அதன் பின் அது வேகமாக வளர ஆரம்பித்தது.
நம்மால் முடிந்த வரை செய்வது முயற்சி அல்ல. நாம் நினைக்கும் காரியங்களை முடிக்கும் வரை முயற்சி செய்வதே முயற்சி!
மனிதனின் சின்னச் சின்ன அசைவுகளே முயற்சி. மனிதன் மூச்சுவிடுவது மூச்சல்ல... முயற்சியே! முயற்சி இல்லாமல் நாம் இல்லை.
முயற்சி செய்தால் நம்மால் முடியாத செயல் எதுவுமில்லை!
உலகில் ஒவ்வொரு உழைப்பாளியும், “என்றாவது ஒரு நாள் நானும் வென்று விடுவேன்“ என்ற நம்பிக்கையுடன் முயற்சியைத் தொடர்கிறார்கள்.
முயற்சியே உங்களை எழுந்து நின்று பேசச்செய்யும். நீங்கள் பேசுவதை இந்த உலகமே கேட்கும்படியும் செய்யும்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் சின்னச் சின்ன முயற்சிகளிலிருந்து முகிழ்த்ததுதான் “எனக்கு ஒரு கனவு இருக்கிறது!“ என்ற உலகப் புகழ்ப்பெற்ற உரை!
“எனக்கு ஒரு கனவு இருக்கிறது!“ அடிமைப்பட்டுக் கிடந்த கறுப்பின மக்களுக்கும் தங்கள் வாழ்வு குறித்த கனவு இருக்கிறது என்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் புகழ்ப் பெற்ற உரையை யாராலும் மறக்க முடியுமா?
ஆப்பிரிக்கர்களின் சிவில் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகஸ்ட் 1963-ல் திரண்டிருந்த கறுப்பின மக்களின் முன்னால் “ஐ கேவ் எ ட்ரீம்“- “எனக்கு ஒரு கனவு இருக்கிறது!“ உரையை வாஷிங்டனில் நிகழ்த்திக்காட்டினார்.
இன்றும் இந்த அமெரிக்க மண்ணில் கறுப்பின மக்கள் அடிமைச் சங்கிலியில் சிக்கி தொடர்ந்து, பிரிவினைக்கும், சுரண்டலுக்கும் ஆளாகிவருகிறார்கள். என் நண்பர்களே... இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றும் நாளையும் நாம் துன்பங்களை எதிர் கொண்டாலும் ஒரு நாள் இந்த தேசம் உயர்ந்து எழும். மக்கள் உயிரோட்டத்துடன் வெளியே வருவார்கள். எல்லா மனிதர்களும் சமமாகத்தான் படைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
“எனக்கு ஒரு கனவு இருக்கிறது!“ ஒரு நாள் ஜார்ஜியாவின் செம்மலையில், அடிமைகளின் வாரிசுகளும், அடிமை முதலாளிகளின் வாரிசுகளும் சகோதரத்துவ மேடையில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ஒருநாள் மிசிசிபியின் நிலையானது, அநீதியின் வெம்மையும், அடக்குமுறையின் வெம்மையும் இல்லாத சுதந்திரமும், நீதியும் உள்ள பாலைவனச்சோலையாக உருமாறும்.
“எனக்கு ஒரு கனவு இருக்கிறது!“ அது என் நான்கு பிள்ளைகளும் வசிக்கும் தேசத்தில் அவர்கள் தோலின் நிறத்தால் பேதப்படுத்தப்பட மாட்டார்கள். பதிலாக அவர்களின் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள். இன்று அலபாமாவில் நிறப் பேதத்தால் வஞ்சிக்கப்படுகிறவர்கள், ஒரு நாள் அதே அலபாமாவில் வெள்ளை இனப் பையன்களுடனும், பெண் குழந்தைகளுடனும் சகோதர சகோதரிகளாகக் கை கோர்ப்பார்கள்.
இன்று “எனக்கு ஒரு கனவு இருக்கிறது!“ ஒரு நாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும். மலைகளும் குன்றுகளும் சமப்படுத்தப்படும். கடினமான இடங்கள் சமமாக்கப்படும். குறுகலான பாதைகள் நேராக்கப்படும். கடவுளின் செல்வாக்கு வெளிப்படுத்தப்படும். எல்லா மனித உடல்களும் ஒன்றாகவும், சமமாகவும் பார்க்கப்படும். இது என் நம்பிக்கை!“ என மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது கனவாக அன்றைய அடக்கு முறைகளை, நிறப் பேதங்களை எதிர்காலத்தில் மாற்றம் அடையும் என்கிற நம்பிக்கையை, வெம்மையை வெண்குளிராகவும், அக்னிக் குழம்பான அன்றைய அவலங்களை பனிக்கட்டிபோல ஒரு அறச்சீற்றமாக தனது குரலைப் பதிவு செய்திருந்தார். இலட்சக்கணக்கான மக்கள் மனதிலும் ஒத்த கருத்தை உருவாக்கிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் முயற்சிகள் உலகம் போற்றும் நினைவாக... ஒபாமாவாக...!
நாம் செய்யும் காரியம் அனைத்தும் சுலபமாக அமைவது இல்லை. ஆனால், நமது முயற்சியால் அது சாத்தியமாகி விடுகிறது.
நாம் நடந்து போகப்போக அதுவே ஒரு பாதையாகி விடுவதை மறுக்கத்தான் முடியுமா?