
சக மனிதரை மதிப்பதும், அவர்கள் நலனிலும் அக்கறை செலுத்துவதும்தான் கல்வியின் உண்மைப்பயனாக இருக்க வேண்டும்.
பிறர் உணர்வுகளை மதித்து நடத்தலே இயல்பான மனித உணர்வு. நாம் கற்கும் கல்வியே ஆணவத்தைத் தந்து, அந்த ஆணவம் இயல்பான மனித உணர்வுகளையே மறைக்குமானால், கல்வி நம்மை விலங்கு நிலைக்குத் தள்ளிவிடுகிறது என்றுதான் பொருள்.
மேற்கு வங்கத்தில் உள்ள புருலியா மாவட்டத்தில் நிகழ்ந்த செய்தி இது.
அங்குள்ள 'ஒல்காரா' என்னும் கிராமத்துக்குள், ஒற்றை யானை ஒன்று புகுந்தது. அதை வெளியேற்ற மக்கள், பல முயற்சிகளை எடுத்தார்கள். ஒரு மாதகால இடைவெளியில் குறைந்தது மூன்று பேரைத் துரத்திக்கொன்றது அந்த யானை.
ஒரு நாள் இரவு, அந்த கிராமத்தின் வீடு ஒன்றில், குடும்பத்தினர் எல்லோரும் இரவு உணவில் இருந்தார்கள். முன்னறையில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென ஏதோ இடிந்துவிழும் சத்தம். தொடர்ந்தும் குழந்தை அழும் சத்தம்.
வீட்டுக்குரியவர்கள் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு ஓடி வந்து பார்த்தால், வீட்டுக் கதவையும் சுவற்றையும் உடைத்துக்கொண்டு அந்த யானை உள்ளே நுழைந்து நின்று கொண்டிருந்தது. அதன் காலடியில் குழந்தை! அழுது கொண்டிருந்த குழந்தையின் மேல், இடிந்து வீழ்ந்த சுவற்றின் பாகங்கள் கிடந்தன.
குழந்தையை நெருங்க முடியாமல் அதிர்ந்து நின்றனர். அதன் தாயும் தந்தையும். வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையின் அருகில் அசையாமல் நின்றிருந்த யானை, மெதுவே திரும்பி நடக்கத் தொடங்கியது.
சற்றே நிம்மதியடைந்த பெற்றோர் மீண்டும் பயத்தில் உறைந்தனர். காரணம், செல்லத் தொடங்கிய யானை மீண்டும் திரும்பி குழந்தையை நோக்கி வந்தது.
மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு, என்ன நடக்கப் போகிறதோ என்னும் அச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தையின் பெற்றோர். அழுது கொண்டிருந்த குழந்தையை நெருங்கிய யானை, அதன் மீது விழுந்திருந்த உடைந்த கற்கள், மண் முதலியவற்றைத் தனது தும்பிக்கையால் மெதுவே அகற்றி சுத்தம் செய்தது. பின்னர் மெதுவாக திரும்பி சென்றுவிட்டது.
தனது ஒரு காலில் மிதிபட்டால் இறந்துவிடும் குழந்தையின் நலன் பற்றி சிந்தித்த யானையின் செயல், விலங்குகளின் பொதுவான செயல்களில் இருந்து மாறுபட்ட விதிவிலக்குதான்.
விலங்குகளுக்கு விதிவிலக்காக இருப்பது. மனிதனுக்கு விதியாகத்தானே இருக்கமுடியும்...? ஆனால், கல்வியால் பெற்ற உயர் நிலை; அந்த உயர் நிலை தந்த அதிகாரம்; இவற்றின் காரணமாகப் பிறரை சுடும் சொற்களால் பேசக்கூடாது.
நம்மை விடப் பெரிய நிலையில் இருப்பவர்களிடம், அவர்களையே வியந்து பேசிப் புகழக்கூடாது; நம்மைவிடக் குறைந்த நிலையில் இருப்பவர்கள் புண்படுமாறு இகழ்ந்து பேசக்கூடாது.
ஒருவேளை, உன்னைவிட உயர்ந்தவர்களை உண்மையாகவே வியந்து நீ பாராட்டும்படி அமையலாம். சில நேரங்களில் அது சரியானதாகவேகூட இருக்கலாம்;
ஆனால், உன்னை எதிர்த்துப்பேச முடியாத சூழலில், உனக்குக் கீழ் நிலையில் இருப்பவர்களிடம் எந்தக் காரணமாகவும் அவர்களைப் புண்படுத்தும் இகழ்ச்சிச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.
சொற்கள் ஏற்படுத்தும் காயத்துக்கு மருந்தே இல்லை. 'தீக் காயம், ஆறிவிடும்; காயத்தில் அடையாளம் மட்டுமே நிற்கும். ஆனால், சொல்லினால் சுட்ட காயம் ஆறவே ஆறாது என்கிறான் வள்ளுவன்.
நம்மை பண்படுத்துவதே கல்வி நம் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன.
ஆனால் அது மட்டுமே கல்வியின் நோக்கமல்ல. புன்னகை மாறாத முகத்துடனும் இனிமை கலந்த சொற்களுடனும் நம்மைவிட எளியவர்களிடம் நாம் பழகுவதே கல்வியின் உண்மையான வெற்றியா இருக்கும்.
அதுதான், உண்மையில் கசடறக் கற்பது!