
ஏழைகளாகப் பிறப்பது கூட ஒரு விதத்தில் நல்லதாக அமைகிறது. பணக்காரர்களுக்குக் கிடைக்காத பல அரிய பாடங்களைச் சொல்லிக்கொடுக்கும் அனுபவங்கள் ஏழைகளுக்குத்தான் கிட்டுகின்றன.
பணக்காரர்களை விட ஏழைகளால்தான் பாடுபட்டு உழைக்க முடியும். இல்லாமை தரும் தாழ்வு மனப்பான்மை அவர்களை வீறு கொண்டு உழைக்கச் செய்கின்றது.
முன்னேறவேண்டும் என்ற வெறி அவர்களுக்கு பலத்தைத் தருகின்றது. ஏழ்மை, உழைப்பின் பெருமையை எடுத்துச் சொல்லுகிறது. உழைத்து முன்னேறவேண்டும் என்ற வெறியை அது கிளப்பிவிடுகிறது.
ஏழ்மைதான் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்கள். தோல்விகள், அவமானங்கள் எதையும் தாங்கும் இதயத்தை அவனுக்குக் கொடுக்கின்றன.
மூதாதையர்கள் கொடுத்துச் சென்ற சொத்தை அடைந்தவனுடைய புகழ் நிலைத்து நிற்பதில்லை. தன் அறிவின் துணைகொண்டு உழைப்பின் மூலம் முன்னேறுபவனைத்தான் மனித சமுதாயம் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறது. மேலும் ஏழை பணக்காரனாக மாறியபோதும் அவன் மனிதத் தன்மையை இழந்துவிடுவதில்லை.
சுலபமாக உழைக்காமல் அளவுக்கு மீறி கிடைக்கும் செல்வம் ஒருவனின் முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். வாழ்க்கையில் படிப்பதற்குப் போதுமான பொருளாதார வசதிகூட கிட்டாதவர்களில் பலர் தங்களுடைய விதியை நொந்து கொண்டு வாழாமல் வீறுகொண்டு உழைத்து அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.
ஒருவர் எங்கு செல்லுவதென்று தீர்மானிக்காமல் போக ஆரம்பித்தால், எந்தவிதமான பலனும் இல்லாமல்தான் தோன்றித்தனமாக சுற்றி சுற்றி வருவான்.
அதற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு செயல்படுகிறவன்தான் நினைத்த இடத்திற்கு போய்ச் சேருவான்.
ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே சில விஷயங்களில் பற்று ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையில் அற்புதங்களைப் படைக்க விரும்புகிறவர்கள் ஓர் லட்சியத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காகவே உயிர் வாழ்ந்து வரும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவன் செல்வத்தையும், புகழையும் அடைய முடியாது. அயராத உழைப்பின் துணை கொண்டுதான் ஒருவன் பல புதுமைகளைக் கண்டுபிடிக்க முடியும்.
மற்றவர்களுடைய உழைப்பைவிட எவனுடைய உழைப்பு சிறந்ததாக இருக்கிறதோ, அவனுக்குத்தான் புகழும் பெரிய பதவியும் கிட்டும். மற்றவர்கள் செய்வதை என்னாலும் செய்துகாட்ட முடியும். மற்றவர்களுக்கு நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல என்று நம்பிக்கையுடன் செயல்படுபவனுக்குத்தான் வெற்றி தேவதை மாலை சூட்டுவாள். தன்மேலேயே நம்பிக்கை இல்லாதவனை நம்பி யாரும் பெரிய வேலையைக் கொடுக்க மாட்டார்கள்.
ஒருவன் தனக்கு நண்பனாக செயல்பட வேண்டும். தனக்குத்தானே விரோதியாக செயல்படுபவனுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது. எதிர்ப்பையும் ஏமாற்றத்தையும் கண்டு பயந்து முயற்சி செய்வதையே விட்டு விடுபவன் மற்றவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து வரும் சாதாரண ஊழியனாகத்தான் உருவெடுக்க முடியும்.
பெரிய வேலைகளைச் செய்து முடிக்க ஒருவன் நிறைய துன்பப்பட வேண்டியிருக்கும் ஆனால் அதை செய்து முடித்த பின்பு கிடைக்கும் புகழ் தென்றலாக வந்து அவனை மகிழ்விக்கும்.