உயிர்... கைப்பேசி... எது முக்கியம்..?

Life... cell phone... what is important..?
motivational articles
Updated on

ற்காலத்தில் நாம் தவறான சில காட்சிகளை அடிக்கடி காண நேரிடுகிறது. இதை பெரும்பாலோர் செய்வதால் அத்தகைய தவறான காட்சிகள் பலருக்குத் தவறாகவே தெரிவதில்லை. என்னென்ன காட்சிகள்?

சிறியவர் முதல் வயதானவர்வரை வாகனங்கள் செல்லும் நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட கைப்பேசியை காதில் வைத்தபடி தங்களை மறந்து பேசிக் கொண்டு செல்லும் ஒரு காட்சி.

இளைஞர் இளைஞிகள் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போதே ஒரு கையில் கைப்பேசியில் மெசேஜ் செய்தபடி வாகனத்தை ஓட்டிச்செல்லும் மற்றொரு காட்சி.

கார், பேருந்து, லாரி ஓட்டுனர்கள் கைப்பேசியில் பேசியபடியே வாகனங்களை ஓட்டும் ஒரு காட்சி.

ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்களில் பதிவிட ரயில் தண்டவாளங்களில், மலை உச்சியில், ஏரி கடல் என நீர் சார்ந்த ஆபத்தான இடங்களில் கைப்பேசியில் வீடியோ எடுக்கும் காட்சி.

இவையெல்லாம் சில காட்சிகள் மட்டுமே. இதுபோன்ற ஏராளமான காட்சிகளை நாம் காண நேரிடுகிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் இத்தகைய சூழ்நிலைகள் இல்லை. ஆனால் தற்போது கைப்பேசி இல்லாத மனிதர்களே இல்லை எனும் அளவிற்கு கைப்பேசிகள் நமது வாழ்வோடு ஒன்றிப்போய்விட்டன.

வாகனங்களில் செல்லும்போது கைப்பேசி அழைப்புகள் வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த அழைப்பை ஏற்கலாம். அல்லது அரைமணி நேரம் கழித்து அழைத்தவரிடம் பேசிக்கொள்ளலாம். இத்தகைய அழைப்புகளில் தொண்ணுற்றி ஒன்பது சதவிகித அழைப்புகள் “இப்ப எங்க இருக்கீங்க?” “என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?” என்பது போன்ற வெற்று அழைப்புகளே. கைப்பேசிகளை தவறான இடங்களில் உபயோகிப்பதால் நிகழும் விபத்துக்களைப் பற்றிய செய்திகளை நாம் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது காண நேர்கிறது.

இதையும் படியுங்கள்:
தோல்வியிடம் பாடம் கற்றால்தான் வெற்றி கிடைக்கும்!
Life... cell phone... what is important..?

பலர் வாகனத்தை ஓட்டிக்கொண்டே எஸ் எம் எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஸ்களை பார்வேர்ட் செய்வதைக் காணமுடிகிறது. இதில் தொண்ணுற்றி ஒன்பது சதவிகிதம் அவசரமான விஷயம் ஏதுமிருக்காது. எல்லாம் நமது பழக்க தோஷமே.

கார் மற்றும் பேருந்து முதலான வாகனங்களை ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்தவே கூடாது. காரணம் இத்தகைய ஓட்டுநர்களை நம்பி பலர் வாகனத்திற்குள் அமர்ந்து பயணிக்கிறார்கள் என்பதை ஓட்டுநர்கள் உணர வேண்டும். அவசரமான அழைப்பு என்றால் வாகனத்தை நிறுத்தி விட்டுப் பேசிவிட்டுச் செல்லலாம்.

கைப்பேசிகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம் விபத்து ஏற்பட்டால் விபத்தை ஏற்படுத்தியவர் மட்டுமின்றி அதில் பாதிக்கப்படுபவர்களும் அவர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் பலவிதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். மருத்துவமனை செலவுகளால் கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும். உயிரிழப்பு என்றால் கேட்கவே வேண்டாம். அத்தகைய இழப்புகளை எதைக் கொண்டும் ஈடுகட்டவே இயலாது.

எனவே நண்பர்களே! இன்றிலிருந்து இதுபோன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள். தேவையான சமயங்களில் மட்டுமே கைப்பேசியை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள். வாகனங்களை ஓட்டும்போது கைப்பேசியை சைலண்ட் மோடில் போட்டு விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் வாகனத்தை இயக்கிக்கொண்டே கைப்பேசியில் பேசாதீர்கள்.

ஒருமணி நேரத்திற்கொருமுறை வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கைப்பேசியை எடுத்து யாராவது அழைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை நம்பி வீட்டில் பெற்றோர் மனைவி குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களால் பிறருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

இதையும் படியுங்கள்:
சுறுசுறுப்பாய் செயல்படுங்கள்..!
Life... cell phone... what is important..?

இந்த உலகில் நாம் மகிழ்ச்சியாக வாழவே பிறந்திருக்கிறோம். பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தும் செயலை நாம் செய்யவே கூடாது. பாதுகாப்பு விதிகள் நம்முடைய மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கைப்பேசி நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்தக் கூடிய ஒரு சாதனமாக இருக்க வேண்டும். அது பிறருக்குத் துன்பத்தை ஏற்படுத்த நாம் காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com