

நம்முடைய வாழ்க்கைப் பயணம் சுவாரஸ்யமானது. இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதேநேரம் நாம் தகுதியான பாதையயை தேர்ந்தெடுத்து, அந்த பாதையில் செல்வது நல்லது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
நம் தகுதிக்கு மீறிய கடினமான பாதையை தேர்ந்தெடுத்து கஷ்டப் படுவதைவிட, எளிமையான அதுவும் சரியான பாதையில் பயணித்து, நாம் செல்லவேண்டிய இலக்கை அடைய முயற்சி செய்ததே நல்லது என்ற முடிவுக்கு நகர்வோம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழியை பின்பற்றி நடந்தால், அதற்கு மரியாதையும், தனித்துவமும் நமக்குள் உண்டாகும். மிகுந்த நம்பிக்கையுடன் கூடிய உற்சாகம் நம் உணர்வுகளில் எழுந்து, நம்மை வலுவான பாதைக்கு இட்டுச் செல்வதை உணர்வோம்.
கற்றறிந்தவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல், உழைக்க தெரிந்தவர்களுக்கு, ஊசியின் முனை அளவு வழி இருந்தாலும், அதனை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார்கள். நாமும் உழைக்க தெரிந்தவர்கள் என்பதை அறிந்துகொண்டால், சிறு சிறு வாய்ப்பு கிடைத்தாலும், ஆல விழுதுகளாக பற்றி முன்னேறுவோம்.
வாய்ப்புகள் கடல் அலைகளைப் போல் வந்து கொண்டேதான் இருக்கும். அதனை நம்முடைய வளர்ச்சிக்கு எப்படி எடுத்துச்சென்று, பயணிப்பது என்பது, நம் கையில்தான் இருக்கு என்று உணர்ந்து, செயலாற்றினால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம் என்பதை புரிந்து கொள்வோம்.
நம்பிக்கையோடு உழைக்கும் உழைப்பு உரமாகும். நாம் உயர்ந்து நிற்கும் நிலைக்கு வேராகும். உழைக்கும்போது, நம் திறமையை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து வீண் போகாமல், தன்னுடைய தன்னம்பிக்கையுடன் செயல்படுவோம். தன்னிகரற்ற உயர்வின் உச்சம் தொடுவோம்.
நேர்மையாக வாழ்வது என்பதை சிலர், வேலை செய்யும் இடத்தில் மட்டும் அப்படி நடந்து கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். அது தவறானது என்பதை உணர்ந்து, நம் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் அதனை கடைபிடித்து வாழ்வதற்கு முயற்சித்து வெற்றி பெற்று, நல்ல வாழ்க்கைக்கு வித்திடுவோம்.
பொறுமை இருக்கும் இடத்தில், சிந்திக்கும் ஆற்றல் திறன் அதிகம். பொறுமை கடலினும் பெரியது என்பதை எதற்காக உதாரணமாக சொல்கிறோம் என்றால், பதறிய காரியம் சிதறும் என்பதற்கு என்ற உண்மையை அறிந்து, சொல்லிலும் செயலிலும் பொறுமை காப்போம்.
என்னதான் நாம் வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் நம்மோடு சகஜமாக பேசினாலும், பழகினாலும் அந்த நட்பை அங்கேயே விட்டு விடுவது நல்லது. ஏனென்றால், நாம் நேர்மையாக இருப்பதை, சில துரோகச் சிந்தனை உள்ளவர்கள், நம்மை கவிழ்க்கப் பார்ப்பார்கள். அந்த வலைக்குள் நமக்கு தெரியாமல் அதில் விழுந்துவிடும் அபாயம் உள்ளது என்பதை புரிந்து கொள்வோம்.
வாழ்க்கையில் முன்னேற்வதற்கு, நம் கரங்களை உழைப்பின் சிறகுகளாக விரிப்போம். உயரப் பறந்து, சிகரம் தொட்டு, சிறப்பாக வாழ்வோம். சோம்பல் இல்லாத அகம் கொண்டு, சுறுசுறுப்பாக இயங்கி இலக்கை அடைந்து, வெற்றிக்கனியை பறிப்போம்.
வாழ்க்கையில் நம்பிக்கை ஆகச்சிறந்த சக்தி, அவநம்பிக்கை நமக்கு எதிரி என்பதை நன்கு அறிவோம். சக்தி நம்மை உயர்த்தும். எதிரி நம்மை வீழ்த்தும். நம்மிடையே மனித சக்தியே என்றும் வெல்லட்டும்.