
நடக்கும் நிகழ்ச்சி நல்லதோ கெட்டதோ, அதிர்ச்சியானதோ அல்லது மகிழ்ச்சி தருவதோ, அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்னும் தன்மையே நமது வெற்றியை நிர்ணயம் செய்கிறது.
தன்மை மெருகேற மெருகேற, பொதுவாக மனிதர்களிடையே காணப்படும் குறைகள் நம் மீது படிந்துவிடாமல் நம்மை அது மீட்டெடுக்கிறது. ஓர் உயர்ந்த நிலைக்கு நம்மைக் கொண்டும் செல்கிறது.
அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் எந்த நிகழ்வையும் அல்லது செயலையும் எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்னும் தன்மை மிக முக்கியம்.
குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகச் சூழல் என அனைத்து நிலைகளிலும் மிகப் பெரிய பங்கு வகிப்பது நமது தன்மையே! தன்மை சிதைந்தால் என்னாகும் என்பதற்கு, ஒரு வழக்கினை உதாரணமாகச் சொல்லலாம்.
மனைவி, கணவனிடம் இருந்து மணமுறிவு கேட்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார். திருமணமான சில மாதங்களிலேயே, மணமுறிவு அனுமதி கேட்டு அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மணமுறிவு கேட்பதற்கு மனைவி சொல்லியிருந்த காரணத்தை நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாது!
திருமணமான ஓரிரு நாட்களிலேயே அவருடன் வாழமுடியாது என்பது எனக்குப் புரிந்துவிட்டது.
'நாங்கள் தேனிலவு போயிருந்தோம். வெளியில் போய்விட்டு அறைக்கு இரவு திரும்பினோம். 'என்ன சாப்பிடலாம்..?' என்று அவர் கேட்டார். எனக்கு இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நான் குளிக்கப்போய்விட்டேன்.
ஆனால் நான் குளித்துவிட்டுத் திரும்புவதற்குள், அவர் எனக்கும் சேர்த்து உணவு சொல்லியிருந்தார். என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், அவரது எண்ணத்தை என் மீது திணிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்போதே எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது, அவருடன் வாழ முடியாது என்று. அன்றிலிருந்தே எங்களுக்குள் மனக்கசப்புதான்.
முதலில், அது ஒரு பிரச்னையா என்று சிந்தித்துப் பாருங்கள். பிரச்னையாகவே இருந்தாலும், கணவன் மனைவி இருவரும் அதை எப்படி கையாண்டிருக்கலாம் என்றும் சிந்தித்துப் பாருங்கள்.
'மனைவி சாப்பிடாமல், நாம் மட்டுமா சாப்பிடுவது...? இருவரும் சேர்ந்து சாப்பிட்டால்தானே சரியாக இருக்கும்...' என்று கணவன் இயல்பாக நினைத்திருந்தால், புது மனைவியிடம் இதமாகச் சொல்லி அவளுக்குப் புரியவைத்திருக்கலாம்!
'அவளும் என்னுடன் சாப்பிட வேண்டும்...' என்று அன்பு காரணமாக அவளுக்கு சேர்த்து உணவு சொல்லியிருந்தால், அந்த அன்பினை மனைவிக்குப் புரிய வைத்திருக்கலாம்.
'உறுதியாக வேண்டாமா...? எனக்குப் பசிக்கிறது... நான் மட்டும் சாப்பிடலாம் இல்லையா...? பரவாயில்லையா...? ' என்று கேட்டுவிட்டுப் பின்னர் தனக்கு மட்டும் உணவு சொல்லியிருக்கலாம்! என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாதவளாக இருந்தால், நமக்கு இதுதான் வாய்த்திருக்கிறது...' என்பதைப் புரிந்து, மனத்தைத் தேற்றிக்கொண்டு, தான் மட்டும் சாப்பிட்டிருக்கலாம்!
'தான் மட்டும் சாப்பிட விரும்பாமல் நமக்கும் சொல்லிவிட்டார்' என்று மனைவி இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கலாம்.
ஐயோ... வேண்டாமென்று சொல்லியும் இப்படி செய்துவிட்டீர்களே....என்று சலித்துக்கொண்டே கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாம்...
நீங்கள்தானே இவ்வளவு சொன்னீர்கள்...? நீங்களே சாப்பிடுங்கள்... என்னால் முடியவே முடியாது...' என்று சற்று விளையாட்டாய் கோபித்திருக்கலாம்!
'நம் மீது அன்பு காரணமாகவே, கணவன் தனக்கும் சேர்த்து உணவு சொல்லியிருக்கிறார்..' என்று புரிந்துகொண்டிருக்கலாம்.
இருவரின் கோணத்திலும் 'புரிந்துகொள்ளாமல் செயல்பட்டது' என்பதே அடி நாதமாக இருக்கிறது.
மனைவியின் குற்றச்சாட்டே, 'என் உணர்வுகளை அவர் புரிந்துகொள்ளவில்லை....' என்பதுதானே...? கணவனைக்கேட்டால், 'என் அன்பை அவள் புரிந்துகொள்ளவில்லை....' என்பான்.
தன்மை' என்பதே, எதையும் நமது கோணத்தில் இருந்து மட்டுமே பார்க்காமல், அடுத்தவர் கோணத்தில் இருந்தும் பார்ப்பதுதான்.
பிறரின் கருத்தையோ அல்லது பார்வையையோ நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமேயில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனால், புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
ஆகவே, தன்மையை தர நிர்ணயம் செய்து செயல்படுங்கள்.