
இதோ தேர்வு முடிவுகள் வெளிவரும் காலம் நெருங்குகிறது. எத்தனை பெற்றோர் தங்கள் குழந்தைகள் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறவில்லை என்றால் மனம் சுருங்காமல் அவர்களை அழைத்து அரவணைத்து பாராட்டுகின்றனர்?
மதிப்பெண் குறைந்துவிட்டால் "நாங்கள் உனக்கு எல்லா வசதிகளும் செய்து தந்தோமே, படிப்பதற்கு என்ன? படித்தால்தானே வாழ்க்கையில் உருப்பட முடியும்? இப்படி மதிப்பெண் குறைந்துவிட்டதே அக்கம் பக்கத்து வீட்டினர், நண்பர்கள் முகத்தில் நாங்கள் எப்படி விழிப்பது? உன்னை பற்றி நாங்கள் கண்ட கனவு எல்லாம் வீணாகி விட்டதே" என்றெல்லாம் புலம்பாத பெற்றோர்கள் இங்கு உண்டா?
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று இங்கு…
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா இங்கிலீஸ் மீடியம் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதிய அபிஷேக் சோழச்சகுடா முடிவுகள் வெளிவந்த நிலையில் எல்லா படங்களிலும் ஃபெயில் ஆன அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
இருப்பினும், அபிஷேக் தோல்வி பற்றி அவரது பெற்றோர் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு அபிஷேக்கை கேக் வெட்டி மகிழவைத்தனர்.
அனைவரும் சூழ இருந்த அந்தத் தருணத்தில் அபிஷேக்கின் பெற்றோர், 'நீ தேர்வில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது" என்று ஊக்கப்படுத்தியுள்ளனர்.
பெற்றோரின் ஆதரவை கண்டு கண்ணீர்விட்டு நெகிழ்ந்த அபிஷேக் "நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் தேர்வு எழுதுவேன். நான் தேர்வில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன்" என்று ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெற்றோரின் செயலை இரண்டுவித கோணங்களில் பார்க்கலாம். ஒன்று தங்கள் மகனின் தோல்வியை கொண்டாட்டம் மூலம் வெட்டவெளி ஆக்கி அவரை தலைகுனிவு ஏற்படுத்தியது. மற்றொன்று தோல்வி எனினும் தங்கள் மகனின் மகிழ்வுக்காக கேக் வெட்டி கொண்டாடிய அவரை ஊக்கப்படுத்தியது. இந்த இரண்டு கோணங்களில் அவரவர் பார்வையில் இந்த கொண்டாட்டம் விநோதமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளான 'நீ தேர்வில் மட்டும் தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை மீண்டும் முயற்சி செய்யலாம்' என்பது முதல் கோணத்தை பின்னுக்கு தள்ளி அவர்களை பாராட்டுக்குரியவர்களாக மாற்றுகிறது. இனி நிச்சயம் அபிஷேக் வெற்றியாளராக வலம் வருவார் எதிர்காலத்தில். அதற்கான அஸ்திவாரம்தான் இந்தக் கொண்டாட்டம்.
தோல்வியில் பிள்ளைகள் துவளாமல் அவர்களுக்கு ஊக்கமூட்டும் ஆறுதலான வார்த்தைகள் கூறி அரவணைக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. வெற்றி என்பது மதிப்பெண்களில் மட்டுமில்லை
உழைப்புடன் தொடரும் முயற்சிகள் மற்றும் தனிமனித ஒழுக்கம், விரும்பியதில் செலுத்தும் ஈடுபாடு என வாழ்க்கையை முழுமையாக புரியவைத்து விட்டால் வெற்றி தோல்வி கடந்து அனைத்து பிள்ளைகளும் எதிர்காலத்தில் வெற்றியாளர்கள்.