
பல சமயங்களில் வாழ்க்கையில் எது முக்கியம் என்று பலரும் அறிவதில்லை. தேவையில்லாத பயனற்ற செயல்களில் இறங்கி முக்கியமான விஷயங்களை செய்ய தவறிவிடுகிறார்கள். அவை என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. செயலில் இறங்குதல்;
வாக்கிங் போகலாம் என்று முடிவு எடுத்த பின்பு நாளை தொடங்கலாம், அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம் என்று அதைத் தள்ளிப் போடாமல் உடனே செயல்படுத்த வேண்டும். அன்றே காலையில் எழுந்து வாக்கிங் போக ஆரம்பிக்க வேண்டும். இது போலவே எல்லா செயல்களையும் தள்ளிப் போடாமல் அப்போதே செயலில் இறங்க வேண்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று எதையும் தள்ளிப் போடக்கூடாது.
2. நம்பிக்கை;
வாழ்க்கையில் போராட்டங்களும் சிக்கல்களும் இருந்தால் நீங்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. வெற்றி, முன்னேற்றம் என வாழ்வின் ஏற்றங்களை அடைய இவையெல்லாம் மிகவும் அவசியம். துன்பங்களை நம்மால் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும் என்று முழு மனதோடு ஒருவர் நம்பி செயல்பட வேண்டும்.
3. மனதாரப் பாராட்டுதல்;
குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் நல்ல செயல்களை மனதார பாராட்ட வேண்டும், மனதிற்குள் அல்ல, அவர்களிடமே பாராட்டை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் நல்ல விஷயங்களை காலம் தாழ்த்தாமல் உடனே பாராட்ட வேண்டும்.
4. உதவுதல்;
பிறருக்கு உதவவேண்டும் என்று நினைத்தால் நல்ல வசதி வரட்டும், பிறகு உதவலாம், இப்போது நேரமில்லை.பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. தன்னிடம் இருப்பதில் சிறிதளவு கொடுத்தால் கூட போதும். அது பணமாகவோ, நல்ல ஆறுதல் வார்த்தைகளோ அல்லது அறிவுரையோ உடனே கொடுத்தால் அவர்கள் பயனடைவார்கள்.
5. சுய அன்பு;
பிறரைப் பற்றி அதிகமாக கவலைப்படும் நாம் நம்மைப் பற்றி கவனம் எடுத்துக் கொள்வதில்லை. நம்மிடம் உள்ள நிறைகுறைகளை அறிந்து கொண்டு நம் மீது நாமே அன்பு செலுத்த வேண்டும். அப்போது தான் பிறர் மீது அன்பும் கருணை செலுத்த முடியும். அதை உடனே செய்ய தொடங்க வேண்டும்.
6. எதிர்மறை எண்ணங்களுக்குத் தடா;
மனித மனதில் எண்ணற்ற எண்ணங்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்கும்போது அப்போதே அவற்றுக்கு தடா போட்டு நிறுத்த வேண்டும். சோம்பேறித்தனமாக அப்படியே விட்டுவிட்டால் அவை பல்கிப் பெருகி ஆளையே ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். காலம் தாழ்த்தாமல் எதிர்மறை எண்ணங்களை உடனடியாக விரட்ட வேண்டும்.
7. கற்றுக்கொள்தல்
ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதை உடனே தொடங்குங்கள். நடனம், பாட்டு, ஓவியம் அல்லது கார் ஓட்ட, சமையல் செய்ய, சுய முன்னேற்றம் குறித்து, டெக்னிகல் தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் என உங்கள் விருப்பம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சம்பந்தப்பட்ட ஆசையை மனசுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்காமல் கற்றுக்கொள்வதில் இறங்குங்கள். உற்சாகத்துடன் கற்றுக்கொண்டு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
8. முன்னேற்றம்;
முன்னேறவேண்டும் என்று விரும்பினால் அதற்கான திட்டத்தை அமைத்து, அதை நோக்கி இன்றே ஒரு படியாவது எடுத்து வைக்கவேண்டும். நாளை என்று தள்ளிப்போடாமல் இன்றே ஆரம்பித்தால்தான் விரைவில் நினைத்ததை முடிக்க முடியும்.