
வாழ்க்கையிலே நாம் எதைப்பெற வேண்டும் என்றாலும் அதற்கு தேவையான, அடிப்படையான இரண்டு குணங்கள் நம்மிடத்திலே இருந்தாக வேண்டும். ஒன்று, நாம் எதைப் பெறவேண்டுமோ அதன்மேல் "ஆசை அல்லது விருப்பம்” முதலில் உண்டாக வேண்டும். அதன்பின்பு அத்தகைய ஆசையை அடைவதற்கான "போதுமான கால அளவு" இருந்தாக வேண்டும்.
இந்த நேரத்தை சரிவர நிர்வகிக்கத் தெரியாதவர்கள்தான், வாழ்க்கையிலே பின்னடைவை சந்தித்திருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
காலம் அறிந்து செயல்படாதவர்கள், அது போனபின்பு புலம்பிக் கொண்டு இருப்பார்கள். நம்முடைய பணம் காணாமல்போய் விடுகின்றபோது நம்முடைய மனம் படும்பாடு இருக்கே! ஐய்யோ, குய்யோ என்று கத்தி, கதறி ஆர்ப்பாட்டம் செய்யும். அதே மனம், நம்முடைய நேரம் வீணாகப் போகும்போது, அது கவலைப்படுவதும் இல்லை, அதைக்கண்டு கொள்வதும் கிடையாது. ஏன்? நம்மிடத்திலேபணஉணர்வு உள்ளஅளவிற்கு, நேர உணர்வு இல்லாமல் போனது நேரத்தைப் பற்றிய அறியாமையே ஆகும்.
நாம் ஒருவருடத்தின் அருமையைத் தெரியவேண்டும் என்றால். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், பொதுத் தேர்வு எழுதி. ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் மாநில அளவில் முதல் வாய்ப்பை இழந்து அவன் தவிக்கும் தவிப்பைப் பார்த்தால் தெரியும்.
அதுபோல் ஒரு மாதத்தின் மதிப்பை உணரவேண்டும் என்றால் பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்க வேண்டிய பிள்ளையை, குறைமாதத்தில் பெற்றெடுத்ததால் அதை உயிருடன் இருக்கச்செய்வதற்கு, தாய் என்னபாடுபடுவாள் என்பதைப் பார்த்தால், ஒரு மாதத்தின் அருமை புரியும்.
ஒரு நாளின் அருமையை, அன்றாடம் கூலி வேலைக்குச் ஒருநாள் வேலைகிடைக்காததால் பணம் இன்றி அவன் குடும்பம் பட்டினி கிடப்பதைப் பார்த்து அவள் படபடப்பதைப் பார்த்தால் தெரியும்.
அதுபோல் ஒரு மணி நேரத்தின் அருமையை அறிந்துகொள்ள வேண்டுமானால், விபத்துக் குள்ளானவரை சரியாக ஒரு மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால், அதனால் பாதிக்கப்பட்டவரைப் பார்த்தால் புரியும். ஒரு நிமிடத்தின் அருமை தெரியவேண்டுமா? இப்படித் திரும்பிப் பார்ப்பதற்குள், ஒரு நிமிடம் கூட இருக்காது, பாஸ்கரன் அடிச்சு தூக்கிட்டான் சார். என்ன சார் உலகம், என வியப்பவர்களைப் பார்த்தால் தெரியும்.
ஒரு மைக்ரோ செகண்டின் அருமை தெரியவேண்டும் என்றால், நான்காண்டுக்கு ஒருமுறை வரும் ஒலிம்பிக் விளையாட்டில், ஓட்டப் பந்தயத்தில் ஒரு மைக்ரோ செகண்டில் தங்கப்பதக்கத்தை இழந்த வீரன் விம்மி, விம்மி அழுவதைப் பார்த்தால் புரியும்.
இத்தகைய அருமைபெருமை மிக்க நேரத்தை நாம் எப்படி எல்லாம் வீணடிக்கின்றோம். உதாரணத்திற்கு, 'சார் எனக்கு ஏழரை நாட்டு எனி தொடங்கிடுச்சாம், இன்னும் ஏழரை ஆண்டு, நான் எதுவுமே செய்யாம, சும்மாதான் இருக்கனுமாம். அதனால் இன்றையில் இருந்து நான் எதுவும் செய்யப் போறதில்லை, ' என்கிற முடிவுக்கு வருகிறவர்களை நாம் என்ன என்று சொல்லுவது.
இதற்கு மாறாக, உலகத்தில் ஒரு மைக்ரோ விநாடி கூட (ஒரு விநாடியில் 10 இலட்சத்தில் ஒரு பங்கு) வீணாகி விடக்கூடாது என்று பம்பரமாக இயங்கிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இதில் நாம் எதை தேர்ந்தெடுக்கின்றோம் என்பது மிக மிக முக்கியமாகும்.